கொழும்பு: பதவியிழந்த அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை மீண்டும் அரசியல் அரங்கிற்கு கொண்டுவர முனையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முக்கியஸ்தர்களிடம் ஜனாதிபதி மைத்ரி அவர்கள் தனது முடிவை தெளிவாக கூறிவிட்டதன் பின்னர் அரசியல் கள நிலவரங்கள் சூடு பிடித்துள்ளன.
முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு பிரதமார் வேட்பாளர் அந்தஸ்து கிடைக்காவிடின் அவரது தலைமையில் பிறிதொரு அணி களத்தில் குதிக்கவுள்ளது.
அதேவேளை, போதுபல சைனாவும் தனது அரசியல் பிரிவை ஆரம்பிப்பதற்கான முஸ்தீபுகளில் இறங்கியுள்ளது, வெறும் அரசியல் இராஜ தந்திர இலக்குகளுக்காகவே தூக்கிப் பிடிக்கப்படுகின்ற இனவாத, மதவாத காழ்ப்புணர்வுப் பிரச்சாரங்கள் மீண்டும் ஒருமுறை உள்நாட்டு வெளிநாட்டு பின் புலன்களுடன் கட்டவிழ்த்து விடப்படலாம்.
அவ்வாறான சக்திகளுக்கு அதிகபட்ச விளம்பரங்களை எமது முகநூல் கணக்குகளும், வலைதள ஊடகங்களுமே வழமையாக பெற்றுக் கொடுக்கின்றன.
தயவு செய்து தேசிய அளவிலும், பிராந்திய மற்றும் உள்ளூர் மட்டங்களிலும் முஸ்லிம் அரசியல் பீரங்கிகளும், உசார் மடையர்களும் அடக்கி வாசிப்பதனை முற்போக்கு முஸ்லிம் இளைஞர்கள் உறுதி செய்தல் வேண்டும்.
தேசிய முற்போக்கு சக்திகளிடமிருந்து தம்மை தனிமைப்படுத்திக் கொள்ளாது மதிநுட்பமாக முஸ்லிம் அரசியல் சிவில் மற்றும் சமயத் தலைமைகள் எதிர்வரும் பொதுத் தேர்தலை எத்ரிகொள்ள முன்வர வேண்டும்.
தேசிய அளவிலும், பிராந்திய அளவிலும் முஸ்லிம்கள் எதிர்கொள்கின்ற சவால்களிற்கு கூட்டுப் பொறுப்புடன் சாணக்கியமாகவும் சமயோசிதமாகவும் முகம் கொடுப்பததனைத் தவிர்த்து ஆத்திர அவசரஆவேசங்கலுடன் கூடிய எதிர்வினை -யாற்றல்களால் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்க்கின்ற நிலைமைகள் ஏற்படாது நாம் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி மைத்ரி, பிரதமர் ரணில் இருவரும் இனங்களுக் -கிடையிலான சமாதான சகவாழ்வை வலியுறுத்துகின்ற, நல்லாட்சி விழுமியங்களை மதிக்கின்ற தேசத்தின் தலைவர்களாக இருந்தாலும் பெரும்பான்மை இனத்தவர் வாக்கு வங்கியில் சேதாரம் ஏற்படாதவாறே அவர்களும் மிகவும் அவதானமாக செயற்பட்டு வருகின்றார்கள் என்பதனை நாம் ஆழமாக மனதில் கொண்டு உச்ச கட்ட புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளல் வேண்டும்.
பெரும்பான்மையான, பெரும்பான்மை இனத்தவர்கள் நல்லவர்கள் அவர்களது உணர்வுகளுக்கும் மதிப்பளித்து உச்சக் கட்ட சகிப்புத் தன்மையுடன் செயற்பட்டு அவர்களது மனங்களை வெல்வதன் மூலமே இந்த அற்பத் தனமான குறுகிய தீய சக்திகளை தேசிய அரசியலில் தனிமைப் படுத்த முடியும் என்பதனை பரஸ்பரம் நாம் நினைவு படுத்திக் கொள்தல் காலத்தின் கட்டாயமாகும்.
தீய சக்திகளுக்கு இலவச விளம்பரம் கொடுப்பதில் இருந்தும் தவிர்ந்து கொள்வோம்..இன்ஷா அல்லாஹ்.
Published by

Leave a comment