“தமிழ் சமூகத்தின் தலைமைகளுக்குக் கிடைக்கும் மரியாதை தமக்குக் கிடைப்பதில்லை என முஸ்லிம் அரசியல்வாதிகள் இப்போது ஒப்பாரி வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்”

rahuman– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

காத்தான்குடி: “தமிழ் சமூகத்தின் தலைமைகளுக்குக் கிடைக்கும் மரியாதை தமக்குக் கிடைப்பதில்லை என முஸ்லிம் அரசியல்வாதிகள் இப்போது ஒப்பாரி வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழ் தலைமைத்துவத்தை போலன்றி, முஸ்லிம் அரசியல்வாதிகள் மக்களின் ஆணையைப் பதவிகளுக்காகவும் தமது கொந்துராத்து வியாபாரங்களுக்காகவும் பயன்படுத்தியதே, முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு மரியாதை இல்லாமல் போனதற்கான அடிப்படைக் காரணமாகும்”

என NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) பகிரங்க மக்கள் சந்திப்பு ஒன்று கடந்த 30.05.2015 அன்று காத்தான்குடி குட்வின் சந்தியில் இடம்பெற்றது. NFGGயின் தேசிய அமைப்பாளர் MBM.பிர்தௌஸ் நளீமி உள்ளிட்ட அதன் தலைமைத்துவசபை உறுப்பினர்களும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்ட இம்மக்கள் சந்திப்பில் ‘சமகால அரசியல் நிலவரங்களும், NFGGயின் முன்னெடுப்புக்களும்’ பற்றி நீண்ட உரை ஒன்றினை ஆற்றும்போதே NFGGயின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,

“கடந்த அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்தும் கூட மக்களுக்காக எதையும் சாதிக்க முடியாமல் போன அதே முஸ்லிம் அரசியல்வாதிகள்தான் இன்று மைத்திரி அரசாங்கத்திலும் இருக்கிறார்கள். இப்புதிய அரசாங்கத்திலும் கூட பெரிதாக எதையும் சாதித்துக்கொள்ள முடியாத நிலையிலேயே தொடர்ந்தும் அவர்கள் இருக்கிறார்கள். இதனை நியாயப்படுத்துவதற்காக புதிய ஒப்பாரி ஒன்றினை அவர்கள் இப்போது தொடங்கியிருக்கிறார்கள். சம்பந்தன் போன்ற தமிழ் தலைமைகள் ஏதாவது ஒரு கோரிக்கையை முன்வைத்தால் அதற்கு உரிய மரியாதை கிடைப்பதாகவும், ஆனால் முஸ்லிம் மக்கள் சார்பாக நாம் முன்வைக்கும் கோரிக்கைக்கு எந்த முக்கியத்துவமும் கிடைப்பதில்லை என்றும் அவர்கள் சொல்லுகிறார்கள்.

இந்த ஒப்பாரியை அமைச்சர் றிஷாதும் அண்மையில் சொல்லியிருந்தார், பா.உ ஹிஸ்புல்லாவும் சொல்லியிருந்தார். இதற்கான காரணம் என்ன என நாம் நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.

rahuman

கடந்த ஆட்சி மாற்றத்துக்காக தமிழ் மக்கள் ஒட்டுமொத்த ஆதரவை வழங்கியது போலவேதான் முஸ்லிம் மக்களும் ஆதரவை வழங்கினார்கள். அதன் மூலம் உருவான புதிய அரசாங்கத்தில் தமிழ் மக்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும் போது ஏன் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை? இந்த நிலை எப்படி உருவானது? இதன் எதார்த்தத்தைச் சிந்தித்தால், தமிழ் அரசியல் தலைமைகள் நடந்துகொள்ளும் விதமும் நமது முஸ்லிம் அரசியல்வாதிகள் நடந்துகொள்ளும் விதமுமே இதற்கான அடிப்படைகள் காரணமாகும் என்பதை கண்டுகொள்ளலாம்.

தமிழ்த்தலைமைகள் முஸ்லிம் அரசியல்வாதிகள் போல இந்த புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளுக்காக முண்டியடிப்பவர்காளக இல்லை. தமது கட்சிக் காரர்களுக்கும், தமது உறவினர்களுக்கும் அரசாங்கப் பதவிகள் கேட்பவர்களாக இல்லை. மக்கள் ஆணையைப் பயன்படுத்தி கொந்துராத்து வியாபாரத்தில் ஈடுபடுபவர்களாக இல்லை. மாறாக, அவர்கள் முழுக்க முழுக்க தமது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வையே முன்னிலைப் படுத்தினார்கள். அதன் காரணமாகவே வடமாகாண ஆளுநரை மாற்றிக்கொள்ள முடிந்தது. இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட காணிகளை மீட்டுக்கொள்ள முடிந்தது, அரசியல் கைதிகளின் விடுதலைக்கான சாதகமான நிலையினை ஏற்படுத்த முடிந்தது.

இன்னொரு வகையில் சொல்வதானால் மக்களின் அரசியல் ஆணையை தமிழ்த் தலைவர்கள் முழுக்க முழுக்க மக்களுக்காகவே பயன்படுத்துகிறார்கள். ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகளோ மக்களின் ஆணையைப் பதவிக்காகவும் அரச வரப்பிரசாதங்களுக்காகவும் தமது கொந்துராத்து வியாபாரத்துக்காகவுமே பயன்படுத்தினார்கள். தமிழர்களின் தலைமைத்துவத்திற்கு கிடைக்கின்ற மரியாதை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இல்லாமல் போனதற்கு இதுவே அடிப்படைக் காரணமாகும்.

எனவே, எமது சமூகத்திற்கான சுயமரியாதையுடனும் அடுத்தவர்களின் மரியாதையை வெல்லும் வகையிலும் செயற்படக்கூடிய பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்வதன் மூலமாகவே இந்த நிலையினை மாற்றியமைக்க முடியும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.”

Published by

Leave a comment