காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கடந்த காலச் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ள, விமர்சனங்களைக் கொண்டுள்ளவர்கள் தம்முடன் நேரடியாகக் கலந்துரையாடி தமது அதிருப்திகள் மற்றும் விமர்சனங்கள் தொடர்பில் உரிய தெளிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
இதனடிப்படையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியவற்றின் கடந்த காலச் செயற்பாடுகளில் தனக்குள்ள அதிருப்திகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து உரிய தெளிவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு அடுத்து வரும் பகிரங்கப் பொதுக்கூட்டம் ஒன்றில் சந்தர்ப்பம் வழங்குமாறு ‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் இன்று (31.05.2015) ஞாயிற்றுக்கிழமை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மானுக்கு புவி. றஹ்மதுழ்ழாஹ் அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சல் கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
நேரடிக் கலந்துரையாடலுக்கான பகிரங்க வேண்டுகோள்
நேற்றிரவு (30.05.2015) காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில் நடைபெற்ற தங்களது முன்னணியின் பகிரங்கப் பொதுக்கூட்டத்தில், ‘எமது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கடந்த காலச் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்திருப்பவர்கள், விமர்சனங்களைக் கொண்டுள்ளவர்கள் எம்முடன் நேரடியாக் கலந்துரையாடி தெளிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்’ எனக் குறிப்பிட்டிருந்தீர்கள்.
‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்
இதனை மிகவும் வரவேற்கும் நான், தங்களின் தலைமையிலான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என்பவற்றின் கடந்த காலச் செயற்பாடுகளில் பல விடயங்களில் அதிருப்தியீனங்களும், விமர்சனங்களும் கொண்டுள்ளதை தங்களின் மேலான கவனத்திற்குத் தெரியப்படுத்திக் கொள்வதுடன், தங்களால் அடுத்து ஏற்பாடு செய்யப்படும் பகிரங்கப் பொதுக்கூட்டமொன்றில் எனது அதிருப்திகளையும், விமர்சனங்களையும் தங்கள் முன்வைத்து அதற்கான தெளிவுகளைப் பெற்றுக் கொள்ள விரும்புகின்றேன் என்பதையும் இத்தால் தெரிவிக்கின்றேன்.
எனது இப்பகிரங்க வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு மிக விரைவில் தங்களிடமிருந்து உரிய பதில் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கின்றேன். – அவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Leave a comment