– ஆர். இஸ்ஸதுன்னிஸா, மருத்துவபீடம் – கிழக்குப் பல்கலைக்கழகம்
உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று.
சாதி இன மத பேதங்களைக் கடந்து அனைவரும் சமத்துவமாய் அணுகும் பிரதான விடயங்களுள் ஒன்று புகைத்தல், மது, போதை மருந்துப் பாவனை. இன்றைய சமூகத்தின் அவலங்களுள் ஒன்று நாம் சாதகமான விடயங்களிற்காக ஒன்றிக்க மறந்து சமூக சீரழிவுக்குரிய விடயங்களில் ஒன்றித்துக் கிடப்பது. எல்லா மதங்களையும் விட்டு மிகத் தூரம் சென்றுவிட்டது போதை இன்று.
சாதாரண சிகரட் புகைத்தலில் இருந்து அதியுயர் வகை போதைப் பொருள் அடிமையாதல் வரை இன்று எதிர்பாரா தகவல்கள் தினம் தினம் எதிர்பாரா மனிதர்களிடமிருந்தும் சமூகங்களிடமிருந்தும்.
அரச சட்டம் அரச சட்டமாகவே இருக்கிறது. மார்க்க சட்டம் மார்க்க சட்டமாகவே இருக்கிறது. விழிப்புணர்வுகள் வழமை போன்றே.. மார்க்க உபன்னியாசங்களும் வழமை போன்றே..
ஆனாலும் பாவனையும், அடிமையாதலும் அதிகரித்திருப்பதாகவே தகவல்கள் கூறி நிற்கின்றன.இலக்கு வைக்கப்பட்டிருப்பது இளைஞர் சமுதாயம். அது எல்லா மதத்திலிருந்தும்தான்.
எங்களது சமூகத்தில் குறைவு என்றோ, எங்கள் இளைஞர்கள் அப்படி இல்லையென்றோ, எங்கள் வேதத்தில் அது கடுமையாக
தடுக்கப்பட்டிருக்கின்றதென்றோ வீராப்புப் பேச்சுக்களையும், வெத்து வேட்டுக்களையும் தாண்டி அது அனைவரையும் அள்ளுண்டு தலைவிரித்தாடும் அபாய நிலையில் அதி வேகமாய் பயணிக்கிறது.நான் தீர்வு சொல்லப் போவதும் இல்லை. ஆனாலும் அது ஏற்படுத்திய சீரழிவு உங்களைப் போலவே எனக்கும் தெரியும்.
தந்தையின் புகைத்தலால் நுரையீரல் புற்று நோய்க்கு ஆளான அப்பாவி சிறுமியில் இருந்து, கணவனின் புகைத்தலால் சிகரட் கையொப்பங்களை தாங்கிய மனைவியின் உடலில் இருந்து, நண்பனுடன் குடிக்கச் சென்று வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்த கதையில் இருந்து, உச்ச பட்ச காமம் என்ற ஒன்றிற்காய் மனைவிக்கும் சேர்த்து ஊட்டிவிடும் கணவன்மாரின் போதைகளில் இருந்து, பெருநாள், திருவிழா பார்ட்டிகளில் தன்னிலை மறந்து ஆடிப்பாடி கூத்தாடி ஈற்றில் விபசாரத்தில் முடியும் கேளிக்கைகளில் இருந்து, அளவுக்கு மீறிய போதையால் என்ன செய்கிறோம் என்ற நிலை மறந்து கூட்டுக் கற்பழிப்பு சாதகமாய்ப் போனதில் இருந்து கணவனின் ‘கஞ்சா’ தொழிலில் தானும் வற்புறுத்தி ஈடுபட்டு கையும் மெய்யுமாய் கைது செய்யப்பட்டு கம்பியெண்ணிய பெண் தாய்களின் கண்ணீரில் இருந்து, இன்னும் எத்தனையோ எத்தனையோ…
எல்லோருக்கும் பொதுவானதாய்.. நானும் அறிந்தவைதான் அத்தனையும்.
தீர்வுகளாய் முன்னெடுப்பவைகளில் ஆயிரம் ஓட்டை.தொடர்ந்தேர்ச்சையான பிரச்சாரங்களும், விழிப்புணர்வுக் கூட்டங்களும் மாத்திரம் ஆங்காங்கே.. புதுப்புது பேனர்களோடும், பெயர்களோடும்.
பிரச்சாரம் செய்வது எல்லாவற்றிற்கும் தீர்வென்றுமில்லை. அது அடையப் போவது ஒரு சிறு புள்ளியைத்தான்.விழிப்புணர்வுகள் இன்னும் வியாபிக்கப்பட வேண்டும். வித்தியாசமான அணுகுமுறைகளை கைக்கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் என்று பொதுப்படையாய் அணுகாமல் போதைப் பாவனையாளர்களை அடையாளம் கண்டு அணுக வேண்டும்.
முழு நேர சமூக அல்லது மார்க்க செயற்பாட்டாளர்கள் போதைக்கு அடிமையானவர்களுக்காக பெருமளவு நேரம் செலவளிக்க வேண்டும். ஓரிரண்டு உபன்னியாசங்கள் அவர்களை ஒன்றுமே செய்துவிடப் போவதில்லை.
ஏனெனில் அவர்களது மூளை அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகிப் போய் (யனனiஉவநன) அதற்கேற்றால் போல் இசைவாக்கமடைந்து (யனழிவநன) தன் மூளைய சுற்றுக்களை (டிசயin உசைஉரவைள) நிரந்தரமாய் மாற்றியமைத்து விட்டது, அல்லது மாற்றிக் கொண்டிருக்கிறது.ஆகவே அதிலிருந்து அவர்களை மீட்டெடுத்தல் என்பது அவர்களே விரும்பினாலும் அத்தனை இலகுவான காரியம் அல்ல.
தொடர்ந்தேர்ச்சையான அவதானிப்பு, பயிற்றுவிப்பு, புனர்வாழ்வு, வாழ்வாதாரம்என்பவற்றைக் கொண்ட ஒழுங்கான திட்டமிடல் வேண்டும்.
இது பாரிய பணி.
மொத்த சமூகமும் வேண்டி நிற்கும் பணி.
கட்டாயம் நிரந்தரமாக செய்யப்பட வேண்டிய பணி.
ஆனால் துரதிஷ்டம் எங்கள் இலக்குகளும் நடவடிக்கைகளும் ‘சொல்லிக் கொண்டே இருத்தல்’ என்ற வட்டத்தை விட்டு இன்னும் வெளிவராததால் அப்படியே கிடப்பில் கிடக்கும் பணி.
போதைப் பழக்கத்தின் அடுத்த பகுதி…
புதிதாய் அப்பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர் சமூகத்தை நோக்காக கொண்டது.
போதைப் பழக்கத்தின் அடிப்படைக் காரணம்…
தான் விரும்பிய ஒன்று தனக்கு கிடைக்காமல் போய் பிறிதொன்றிற்கு வற்புறுத்தி உட்புகுத்தப்பட்டமையே. இது எல்லாக் காரணிகளுக்கும் பொருந்தும்.
இளைஞர் சமூகம் குறிப்பாக தனக்கு விருப்பமான துறையை தெரிவு செய்வதில் இருந்தும் விரட்டப்பட்டு எமது நாட்டின் பொருளாதார அமைவுக்கு ஏற்ப ஒரு துறையைத் தெரிவு செய்த, செய்யவேண்டி இருக்கின்ற நிர்ப்பந்தமே பிரதான காரணி.
அங்கு இழக்கப்படும் சுதந்திரத்தை, சந்தோஷத்தை மீட்டுக் கொள்ள வழி தேடுகையில் போதைக்கு அடிமையாவதை தவிர வேறொன்றையும் சொல்லிக் கொடுக்கவில்லை சமூகம் அவனுக்கு.சில சமூகங்களில் வரையறையற்ற சுதந்திரம், விடுதலை, இதற்கு வித்தாய்ப் போயிற்று.
சாதாரண விடயம் என்ற பெயரிலும், பெஷன் என்ற பெயரிலும், மேட்டுக்குடி நாகரீகம் என்ற பெயரிலும் அந்த சமூகமே அதற்கு வழிகளை திறந்து கொடுத்திற்று.
அதேவேளை இன்னும் சில சமூகங்கள் அளவு மீறி கட்டுப்படுத்தப் போய், அளவு மீறி தடுக்கப் போய் இறுதியில் போதைக்கான வாயிலை திறந்து கொடுத்திற்று.
ஓவியம் வரைவதில் உள்ள சுதந்திரமும் மன அமைதியும் அந்த இளைஞர்களால் உணரப்படவில்லை. ஏனெனில் சமூகத்தவர்கள் ஓவியம் வரைவதைத் தடை என்றார்கள்.புகைப்படம் பிடிக்கும்போது உணரப்படும் திருப்தியை, சந்தோஷத்தை அந்த இளைஞர்கள் உணரவில்லை. ஏனெனில் அவர்களுக்கு புகைப்படக்கலை தடுக்கப்பட்டது என வலியுறுத்தப்பட்டிருந்தது.
இசையின் இனிய மன அமைதியை அவர்கள் வெளிப்படையாய் கேட்க இயலவில்லை. ஏனெனில் இசை கூடாதென்று அவர்களுக்கு பொதுத்தடை வழங்கப்பட்டிருந்தது.
குறைந்தது கவிதைகள் மூலமாவது அவர்கள் தம் மனப்பாரத்தை இறக்கிவிட எத்தனித்தார்கள். பரிதாபம் கவிதை சொல்பவன் (pழநவசல) பொய்யன் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.தீர்வுகள் தேடி அலைந்து கடைசியில் தடுக்கப்பட்ட அத்தனையையும் கள்ளத்தனமாய் அல்லது குற்றம் செய்கின்றோம் என்ற மன உளைச்சலோடு செய்து அதற்குத் தீர்வாக தன்னை அணைத்துக்கொண்டு ஆறுதல் தரும் போதையை அணுகுகிறார்கள்;, அடிமையாகுகிறார்கள்.
தடுக்க நினைத்தாலும் தவிர்க்க முடியாதது இது.
பிரச்சாரகர்களை உருவாக்குவதில் முனைப்புக் காட்டிய சமூகங்கள் செயற்பாட்டாளர்களை உருவாக்க மறந்ததால் வந்த வினை இது.
மீள யோசிக்க வேண்டி இருக்கிறது. எங்கோ நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற தவறு ஒன்றிற்காய். குறைந்தது சட்டம் மூலமாகவேனும் போதைப் பாவனை நடமாடலைத் தடுப்பதற்கும் நாங்கள் தனியொரு சமூகமாக, தனியொரு இனமாக நின்று கோஷமெழுப்புவதோ அல்லது பரிந்துரைப்பதோ எந்த வகையிலும் தீர்வைப் பெற்றுத் தராது.
அதுவே ஒரு பிரதேச சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் அனைவருமாய் ஒன்று சேர்ந்து இப்படியான விடயங்கள் தொடர்பாக தத்தமது மதம் வலியுறுத்துவதை ஒன்று திரட்டி, அந்தப் புள்ளியில் ஒன்றினைந்து, ஒரு சமூகத் தீர்வுக்காய் ஒரு சமூகமாய்க் குரல் எழுப்பிப் பாருங்கள். பரிந்துரை செய்து பாருங்கள்.. உங்களது முயற்சி எந்தளவு தூரம் வியாபிக்கும் என்பதை!
Published by

Leave a comment