கொழும்பு: இலங்கையின் அண்மைக் கால வரலாற்றில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்ற விடயங்களில் ஒன்று தான் தேர்தல் முறை மறுசீரமைப்பு ஆகும். ஏனெனில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற விகிதாசாரத் தேர்தல் முறைமை நாட்டின் அரசியல் கலாசாரத்தில் பலவிதமாக பாதகங்களை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டுக்குப் பொருத்தமான தேர்தல் முறைமை மிக அவசியம் எனப் பல மட்டங்களிலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
அத்தோடு அதனை அடிப்படையாகக் கொண்ட கோரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான சூழலில் 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் பொது வேட்பாளராகக் களமிறங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “ஊழல் மோசடிகளுக்கும் வன்முறைகளுக்கும் மூல காரணியாக விளங்கும் இத்தேர்தல் முறைமையை மாற்றி விருப்பு வாக்கு முறைமையை நீக்கி ஒவ் வொரு தொகுதியும் பொறுப்பு மிக்க மக்கள் பிரதிநிதியைப் பெற் றுக் கொள்வதை உறுதிப்படுத்துவேன்.
தொகுதிவாரி முறைமை மற்றும் தோல்வியுற்ற அபேட்சகர்களின் விகிதாசார வாக்கெடுப் பும் கருத்தில் கொள்ளப்படும். இந்த யோசனையின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படாது. இதற்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் இணக்கப்பாட்டை என்னால் பெற்றுக்கொள்ள முடியும்” என்று தமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்ததும் தாம் தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு ஏற்ப தற்போது நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறைமையை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். இதனை அரசியல் யாப்புக்கான 20 வது திருத்தமாகக் கொண்டு வருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கேற்ப தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான அமைச்சரவை உப குழுவொன்று அமைக்கப்பட்டது. அக்குழு பல சந்திப்புக்களையும் நடத்தி தேர்தல் மறுசீரமைப்புக்கான வரைபை தயாரித்து ஜனாதிபதியிடம் அண்மையில் கையளித்தது.
நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் குறிப்பாக சிறுபான்மைக் கட்சிகளுக்கும் சிறு கட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இத்தேர்தல் முறைமையை மறுசீரமைப்பதில் ஜனாதிபதியும் அரசாங்கமும் விசேட கவனம் கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 20 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இத்தேர்தல் முறைமை மறுசீரமைப்பு குறித்து நீண்ட நேரம் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. கருத்துக்கள் பரிமாறப்பட்டன. தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான அமைச்சரவை உப குழுவின் வரைபும் இச்சமயம் கருத்தில் எடுக்கப்பட்டன. இருப்பினும் இக்கூட்டத்தில் தேர்தல் மறுசீரமைப்பு குறித்து முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.
இவ்வாறான நிலையில் இவ்வார அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்திலும் தேர்தல் மறுசீரமைப்பு குறித்து நீண்ட வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இச்சமயம் இத்திருத்தத்திற்கு மேலும் திருத்தங்களை உள்வாங்கவும் அவை குறித்தும் கலந்துரையாடி இறுதி வரைபைத் தயாரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கென ஜனாதிபதி மற்றும் பிரதமரை உள்ளடக்கிய விசேட குழுவொன்றும் இக்கூட்டத்தின் போது அமைக்கப்பட்டது.
இத்திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல அம்சங்களுக்கு இக்கூட்டத்தின் போது இணக்கம் காணப்பட்டுள்ளன. என்றாலும், இத்திருத்தத்திற்கு புதிதாகக் கிடைக்கப் பெறுகின்ற யோசனைகளையும் உள்ளடக்கி இறுதித் திருத்த வரைபை எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் இத்திருத்தத்திற்கு அங்கீகாரம் கிடைக்கப்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தொகுதிவாரி மற்றும் மாவட்ட விகிதாசார முறைமையைக் கொண்ட கலப்பு தேர்தல் முறைமையாகவே இத்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது. இத்தேர்தல் முறைமையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 255 ஆகும்.
இத்தேர்தல் முறைமையின் மூலம் மக்களுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கப் பெறும். அத்தோடு சிறப்பான அரசியல் கலாசாரமும் உருவாகும் தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளும் நீங்கிவிடும்.
தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமை முன்னாள் ஜனாதிபதி மறைந்த ஜே. ஆர். ஜயவர்த்தனவினால் தான் இந்நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டில் நிலவி வந்த சிறந்த அரசியல் கலாசாரம் வீழ்ச்சி அடைந்தது. தொகுதிக்குப் பொறுப்புக்கூறக் கூடிய மக்கள் பிரதிநிதி முறைமை இல்லாமலானது. ஒவ்வொரு அபேட்சகரும் முழு மாவட்டத்திலுமே வாக்கு வேட்டையில் ஈடுபடும் நிலை உருவானது. இது பணம் படைத்தவர்களே அபேட்சகர்களாக நிற்கும் தேர்தலானது.
அதேநேரம், இத்தேர்தல் முறைமையில் காணப்படும் விருப்பு வாக்கு முறைமையால் பணம் படைத்தவர்களே பாராளுமன்றம் செல்ல முடியும் என்ற நிலைமை உருவானது.
இதன் விளைவாக போதைப் பொருள் வர்த்தகர்களும், எதனோல்காரர்களும், சூதாட்டக்காரர் களும் மாத்திரமல்லாமல் ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்களும் மக்கள் பிரதிநிதிகளாகும் நிலைமை ஏற்பட்டது. புத்திஜீவிகளும் உண்மையான மக்கள் சேவகர்களும் மக்கள் பிரதநிதிகளாக முடி யாத நிலைமை உருவானது. இவ்விருப்பு வாக்கு முறைமையினால் ஒரே கட்சி அபேட்சகர்களுக்கிடையில் மனக்கசப்புக்களும் முரண்பாடுகளும் மாத்திரமல்லாமல் சண்டை சச்சரவுகளும் கூட ஏற்பட்டுள்ளன. இவை மறைக்க முடியாத அனுபவங்கள்.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தான் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பொருத்தமானதும் நன்மை பயக்கக் கூடியதுமான தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்துவதற்குரிய நடவடிக்கை களை ஜனாதிபதியும் அரசாங்கமும் முன்னெடுத்து உள்ளனர். நாட்டு நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களது இப்பணி வெற்றிபெற சகலரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
Published by

Leave a comment