‘ஐக்கிய மக்கள் ஒன்றியம்’ எனும் அமைப்பினரால் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்

notice handbill‘ஃபீஸஃபீலில்லாஹ்’ – அழ்ழாஹ்வின் பாதையில் ஒன்றுபடுவோம் – 02

(வெளியீடு: ஐக்கிய மக்கள் ஒன்றியம், ஊர் வீதி, காத்தான்குடி 01 – 29.05.2015)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அழ்ழாஹ்வின் திருப்பெயரால் தொடங்குகின்றோம்.

அன்புக்கும், மதிப்புக்கும் உரிய காத்தான்குடி வாழ் உலமாக்களே, கல்விமான்களே, பெரியார்களே, நண்பர்களே.. அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுழ்ழாஹி வபறகாதுஹு.

கடந்த 17.03.2011ம் திகதி நமது மண்ணில் நடைபெற்ற இரண்டாவது நகர சபைத் தேர்தலில் ‘ஐக்கிய மக்கள் ஒன்றியம்’ சார்பாக ‘போர் வாள்’ சின்னத்தில் சுயேட்சைக்குழுவாகப் போட்டியிட்ட நாம், உங்களின் ஆணைகள் கிடைக்காமையினால், உங்களது ஆணைகளைப் பெற்று நமது நகரத்தின் நிர்வாகத்தைப் பொறுப்பேற்றவர்களுடைய ஆட்சிக்காலம் முடியும் வரை இவ்வூரின் பொது நிர்வாக விடயங்களில் எதிலும் தலையிடாது அமைதியாக ஒதுங்கியிருந்தோம்.

அத்தேர்தலின்போது ஏனைய சராசரி அரசியல் வியாபாரிகள் மக்களிடம் சொன்னதைப் போன்று பில்லியன், மில்லியன் கணக்கிலான அபிவிருத்திகளைச் சொல்லி நாம் வாக்குக் கேட்கவில்லை. வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்களைத் தருவதாகக்கூறி எம் இளைஞர்களை ஏமாற்றவில்லை. மக்களின் வாழ்க்கையில் வறுமையை முற்றாக ஒழித்து வற்றாத வசந்தத்தை ஏற்படுத்துவோம் என புருடா விடவில்லை.
நமது இஸ்லாமிய மார்க்கத்தின் விழுமியங்கள் இந்த மண்ணில் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் மேடை போட்டுப் பேசினோம். நமது ஈமானை மழுங்கடிக்கின்ற விடயங்களில் உயிரைக்கொடுத்துக் காப்பதற்கும் நாம் பின் வாங்க மாட்டோம் என்று எழுத்தில் விஞ்ஞாபனம் வெளியிட்டு உறுதியளித்தோம்.

எனினும் இடியப்பச் சட்டிகளுக்கும், புட்டுக் குழல்களுக்கும், புத்தகப் பைகளுக்கும், கிறவல் ஒழுங்கைகளுக்கும், கொங்றீட் வீதிகளுக்குமாக உங்களின் பெறுமதி மிக்க வாக்குகளைப் போட்டுக் கொடுத்தீர்கள். பொய்யர்களின் YKKபிரட்டல் பேச்சுக்களைப் பெரிதாக நம்பிய உங்களிடம் நாம் எடுத்துரைத்த சத்திய ஈமானும், சன்மார்க்க விழுமியங்களும் எடுபடவில்லை. அதனால் எங்களைக் கருத்தில் எடுக்காது அவர்களையே உங்களின் பாதுகாவலர்களாகவும், போஷகர்களர்களாகவும் ஆக்கிக் கொண்டு அமோகமாக வாக்களித்தீர்கள்.

இப்போது நாம் மீண்டும் உங்கள் முன் வந்திருக்கின்றோம். எமது மீள் வருகையானது அரசியலுக்காகவோ, இந்த ஊரின் ஆட்சியைப் பிடிப்பதற்காகவோ அல்ல. நமது மண்ணின் மரியாதையையும், சத்திய ஈமானின் மானத்தையும், தீனுல் இஸ்லாத்தின் விழுமியங்களையும் பேணி அவற்றையெல்லாம் முழுமையாகப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே!

இம்மாதம் 08ம் திகதி வெள்ளிக்கிழமை இம்மண்ணின் சங்கைக்குரிய சிரேஷ்ட உலமாவும், சாத்வீக வழியில் ‘தப்லீஃ’ எனும் இஸ்லாமிய ‘தஃவா’ அழைப்புப் பணியில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து வாழ்ந்து வருபவருமான அல்ஹாஜ் மௌலவி ஏ.எல். ஆதம்லெப்பை (பலாஹி) ஹஸ்ரத் அவர்கள் முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாசலில் குத்பா பிரசங்கம் செய்யும்போது, நமதூரில் அமைக்கப்பட்டுள்ள ‘பூர்வீக நூதனசாலை’யிலுள்ள சிலைகள் தொடர்பாக பிரஸ்தாபித்தது எமது கவனத்தை ஈர்த்தது.

அவர்கள் ஜும்ஆ மேடையில் நின்று கண்ணீர் வடித்து அழுதவாறு அந்த நூதனசாலையில் உருவச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளது ‘ஹறாம்’ என்று பிரகடனப்படுத்தியது மாத்திரமன்றி, தனது மார்க்கக் கல்வியறிவின்படி இவ்வாறு ஜும்ஆவில் தான் பகிரங்கமாக அறிவித்ததற்கு இவ்வூர் மக்கள் அனைவரும் மறுமையில் சாட்சியாளர்களாக இருப்பீர்கள் என்றும், நீங்களும் உங்களின் சந்ததியினருக்கு இவ்வாறே ‘வசிய்யத்’ எனும் இறுதி உபதேசம் செய்து விட்டே மரணித்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியது எங்களையும், ஏனையோரையும் மன உறுத்தலுக்குள்ளாக்கி கண்ணீரை வடிக்கச் செய்தது.

நமது இம்மண்ணின் உண்மையான மரியாதைக்குரிய ‘மண்ணின் தந்தை’ அஷ்ஷஹீத் அல்ஹாஜ் ஏ. அஹமது லெப்பை சேர்மன் அவர்கள் உருவாக்கிய காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தோற்றம் பற்றியும், அதில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் பங்களிப்புப் பற்றியும் எழுத்து மூலம் ஏற்கப்பட்டிருந்த ஒப்பந்தத்தையும் நமது பெருமதிப்புக்குரிய ஆதம்லெப்பை ஹஸ்ரத் அவர்கள் அங்கு விவரித்தார்கள்.

notice handbill

‘காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவினால் வழங்கப்படுகின்ற ‘பத்வா’ எனும் மார்க்கத் தீர்;ப்புக்களை சம்மேளனம் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் கொள்ளாது நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்றும், அதனடிப்படையில் ‘ஜம்இய்யதுல் உலமாவினால் நியமிக்கப்படுகின்ற உலமா ஒருவருக்கே சம்மேளனத்தின் செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும்’ என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுத்தான் சம்மேளனம் என்கிற எமது சமூகத்தின் தாய் நிறுவனம் அன்று அஷ்ஷஹீத் அவர்களால் உருவாக்கப்பட்டது என்ற விவரங்களையும் ஹஸரத் அவர்கள் மிகத்தெளிவாக எடுத்துரைத்தார்கள்.

(அழ்ழாஹ் அவர்களின் சிந்தனைகளையும், செயற்பாடுகளையும் பொருந்திக் கொண்டு இம்மையிலும், மறுமையிலும் அவரை கண்ணியப்படுத்துவானாக!)

அன்றைய ஜும்ஆவின் பின்னர் இவ்வூரின் முக்கியஸ்தர்கள், வர்த்தகர்கள், சங்கைக்குரிய உலமாக்கள், இளைஞர்கள் எனப் பலரும் எம்மைச் சந்தித்தனர். அனைவருமே இந்த உருவச்சிலை விவகாரத்தில் மேலும் காலதாமதமின்றி ஒரு இறுதித் தீர்மானத்திற்கு வர வேண்டும் என்பதனை ஏகோபித்து வலியுறுத்தினார்கள்.
கடந்த காலங்களில் இம்மண்ணில் பயங்கரவாத வன்முறைகள், இயற்கையின் அழிவுகள், மார்க்கப் பிரச்சினைகள், ஈமானியப் போராட்டங்கள் போன்ற பல்வேறு அனர்த்தங்களும், நெருக்கடிகளும் நிறைந்த கால கட்டங்களில் எல்லாம் இச்சமூகத்தை வெகுவாக நேசித்து எமது கால நேரங்களையும், பொருளாதாரங்களையும், மனித சக்தி வளங்களையும் அர்ப்பணித்துச் செயற்பட்ட எம்மால், மீண்டும் மார்க்க ரீதியாக எமது மண்ணை மையப்படுத்தி நாடு முழுவதிலும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் கொழுந்து விட்டெரிகின்ற இந்த ‘உருவச் சிலை’ விவகாரத்தில் தலையிடாமல் இருக்க முடிய வில்லை. எமது மனச்சாட்சியின் வழிகாட்டலுக்கமைய மீண்டும் காத்தான்குடிச் சமூகக் களத்தில் கால் பதிப்பதற்குத் தீர்மானித்தோம்.

இதனடிப்படையில் கடந்த 10ம் திகதி ஒரு கடிதத்தை வரைந்து காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவுக்கும், சம்மேளனத்திற்கும் நாம் கையளித்தோம். அதில் முன்று கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்:

கோரிக்கை:01. இந்நூதனசாலை தொடர்பாக ஜம்இய்யதுல் உலமா வழங்கிய ‘பத்வா’ மார்க்கத் தீர்ப்பினை சம்மேளனம் மறுகருத்தின்றி உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

கோரிக்கை:02. இந்நடைமுறைப்படுத்தலென்பது, சம்பந்தப்பட்ட அரசியல் அதிகாரமுள்ளவர் களுக்கும், ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திற்கும், அமைச்சரவைக்கும், அரசியல் ஆலோசனை சபைக்கும் உச்சபட்ச அழுத்தங்களைக் கொடுத்து இந்நூதன சாலையிலுள்ள அனைத்து உருவச்சிலைகளையும் உடனடியாக அகற்றச் செய்ய வேண்டும். அல்லது முஸ்லிம்களின் பூர்வீகத்தையும், வரலாற்றையும் பாதுகாப்பதற்கென ‘இஸ்லாம்’ எனும் எமது சன்மார்க்கத்தின் புனிதப் பெயரால் நிறுவப்பட்டிருக்கும் இந்நூதனசாலையிலிருந்து எமது மார்க்கத்தின் அடையாளப் பெயரை நீக்குவதுடன் அதனை இவ்வூரிலிருந்து அப்புறப்படுத்தி வேறெங்காவது எடுத்துச் செல்லுமாறு வலியுறுத்த வேண்டும்.

கோரிக்கை:03. மேற்கண்டவாறு சம்மேளனம் இதை நடைமுறைப்படுத்தத் தவறும் பட்சத்தில் சம்மேளனத்திற்கு காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா வழங்கி வரும் பிரதிநிதித்துவமான அதன் பொதுச் செயலாளரை உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொண்டு சம்மேளனத்தில் இருந்து விலகிக் கொள்வதுடன், ஜம்இய்யாவின் மார்க்க வழிகாட்டலுக்குட்பட்ட சகல பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்கள் என்பனவும் சம்மேளனத்தின் அங்கத்துவத்திலிருந்து உடனடியாக விலகிக் கொள்ளவும் வேண்டும்.

இக்கடிதத்தை சம்மேளனத்திற்குச் சென்று அதன் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். சபீல் (நளீமி) அவர்களிடம் நாம் கையளித்ததுடன், ஜம்இய்யாவின் தபால் பெட்டியினுள் நாம் செலுத்திய கடிதம் ஜம்இய்யா நிர்வாகத்தினருக்கு கிடைக்கவில்லை என்ற தகவலறிந்து, மற்றுமொரு கடிதத்தை அதன் செயலாளர் அஷ்ஷெய்க். ஏ.ஜீ.எம்.ஜலீல் (மதனி)யிடமும் நாம் நேரில் சென்று கையளித்தோம்.

alba nazar (2)

எமது கடிதத்திற்கான முடிவுகளை சம்மேளனம் மற்றும் ஜம்இய்யாவிடம் இருந்து நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில்தான், முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இந்த உருவச்சிலைகள் தொடர்பாக (கடந்த 15ம் திகதி வெள்ளிக்கிழமை) கலாசார மண்டபத்தில் உரையாற்றவிருப்பதாக இணையதளங்களில் செய்தி வெளியாகி இருந்தது.

இதனால் நாம், அந்தக் கூட்டத்தில் இந்த நூதன சாலைகள் குறித்து அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதையும் அறிந்து கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என முடிவெடுத்திருந்தோம். இதனால் ஏற்கனவே நாம் கையளித்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தவாறு 14.05.2015 வியாழக்கிழமை வரையான காலக்கெடுவைப் பற்றி நாம் கவனம் செலுத்தவில்லை.

குறித்த கூட்டத்தில் நூதனசாலை விடயமாகப் பேசிய முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா அவரது நியாய வாதங்களை முன்வைத்து உரையாற்றியதோடு, வெளிப்படையாகவே மதிப்புக்குரிய ஆதம்லெப்பை ஹஸரத் அவர்களையும் விமர்சித்துப் பேசினார். ஆதம்லெப்பை ஹஸரத் அவர்கள் தொடர்பான அவரது விமர்சனங்கள் குறித்து நாமும் கவலையடைந்தோம்.

இந்நிலையில் சம்மேளனத்திற்கு நாம் 10ம் திகதி கையளித்த கடிதம் 17ம் திகதி நடைபெற்ற சம்மேளன நிர்வாக சபைக்கூட்டத்திலேயே பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. அதுதொடர்பில் கருத்துத் தெரிவித்த சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் எம்.ஐ.எம். சுபைர் ஊஊ, இது ஐக்கிய மக்கள் ஒன்றியம் என்ற அமைப்பின் பெயரிலேயே அனுப்பப்பட்டுள்ளது. இதன் தலைவர், செயலாளர் யார் என்று குறிப்பிடப்படவில்லை. எனவே இவ்வாறான கடிதங்கள் குறித்து நாம் கவனம் செலுத்தத் தேவையில்லை என்றவாறாக கூறியுள்ளார்.

அவரது கருத்தை மறுத்துப் பேசிய சம்மேளனச் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். சபீல் நளீமி, ‘அனாமதேய நபர்கள் யாரும் இக்கடிதத்தை என்னிடம் தரவில்லை. கடிதத்தைக் கையளித்தவர்கள் யார் என்பதை நானறிவேன். தேவைப்படும் நேரத்தில் அவர்களை நான் அடையாளப்படுத்தவும் தயாராகவுள்ளேன். எனவே நாம் இக்கடிதம் குறித்து ஆராய்ந்து தகுந்த தீர்;மானத்தையே எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து கடிதம் சபையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி அல்ஹாஜ் ஏ.எல். அப்துல் ஜவாத் அவர்கள் இந்த நூதனசாலைத் திறப்பு விழாவில் பங்கேற்றது, முன்னாள் ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவரும், இந்நாள் ஆலோசகருமான காதி நீதிபதி அல்ஹாஜ் எஸ்.எம். அலியார் (பலாஹி) அவர்கள் வழங்கிய ‘பத்வா’வின் அடிப்படையில்தான் எனும் தகவலும் இக்கலந்துரையாடலின்போது சபையில் அம்பலமாகியதாகத் தெரிய வந்தது.

எமது கடிதம் தொடர்பான கலந்துரையாடலின்போது சட்டத்தரணி அப்துல் ஜவாத் அவர்கள் வாய் திறந்து ஒரு வார்த்தையேனும் கருத்துரைக்காது மௌனமாக தலைகவிழ்ந்து இருந்ததாககவும், எமது கடிதம் மிகவும் நியாயமான முறையிலேயே எழுதப்பட்டிருப்பதாக சபையோர்கள் சாட்சி பகர்ந்ததை அடுத்து அக்கடிதம் தொடர்பாகத் தீர்மானமொன்று எடுக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

அதாவது, உடனடியாக ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் யார் என்பதை உறுதிப்படுத்திய இக்கடிதத்தின் மற்றுமொரு பிரதியைப் பெறுவதென்றும், அதன் பின்னர் இது தொடர்பாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவுக்கு சம்மேளனத்தினால் கடிதம் ஒன்று எழுதுவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இத்தீர்மானம் குறித்து நாம் அவசரமாக அன்றே ஆராய்ந்தோம். காத்தான்குடி மக்களுக்கு ஐக்கிய மக்கள் ஒன்றியம் என்றால் அவர்கள் யார் என்பது ஓரளவுக்குத் தெரிந்த விடயமே. அதிலும் குறிப்பாக சம்மேளனத் தலைவர் சுபைர் ஊஊக்கு எமது ஒன்றியத்தைப் பற்றியும், அதன் தலைவர் யார், செயலாளர் யார் என்பது பற்றியும் மிகவும் நன்றாகவே தெரியும்.

ஏனெனனில் நாம் கடந்த நகர சபைத் தேர்தலில் காத்தான்குடி முதலாம் குறிச்சியை மையப்படுத்தியே களம் இறங்கியிருந்ததுடன், முதலாம் குறிச்சி மார்க்கட் சதுக்கத்தில் எமது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தையும் நடாத்தியிருந்தோம். மாத்திரமன்றி, எமது காரியாலயம் முதலாம் குறிச்சி ஆற்றங்கரை முகப்பில் ஈமான் பள்ளிவாசலுக்கு அருகில் இன்றும் பெயர்ப்பலகையுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்த சுபைர் CC இப்போது முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசலுக்கு தலைவராக இருக்கிறார். இவர் 2011ம் ஆண்டிலும் அப்பள்ளிவாசலுக்குத் தலைவராக இருந்தபோதுதான் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா நியமித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நவக்கிரக வேட்பாளர்களில் அவரும் ஒரு வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தார்.

ஆக, அவரது வெற்றிக் கழுத்திற்கே ‘போர்வாள்’ சின்னத்துடன் அப்பிரதேசத்தில் வெளிப்படையாக எதிர்த்துப் போட்டியிட்ட எமது ஐக்கிய மக்கள் ஒன்றியத்தைப் பற்றியும், அதன் நிர்வாகிகளான எங்களைப் பற்றியும் அவருக்குத் தெரியாதிருக்க நியாயமில்லை. அவர் எதுவுமே தெரியாதவர் போல் சம்மேளனத்தில் நடித்துள்ளார்.

alba nazar

அவரது றூஹ் பிரியும் நேரத்தில் அவர் கலிமாவைச் சொல்வதற்கு மறந்தாலும் எமது ஒன்றியத்தை நினைக்காமல் அவர் மௌத்தாகவே மாட்டார்.

ஏனெனில் அவரது வாழ்க்கையில் முதல் தடவையாகப் பள்ளிவாசல் தலைமைப் பதவியை இராஜினாமாச் செய்து, அதன் மூலம் சம்மேளனம் எனும் நமதூரின் பிரதான தாய் நிறுவனத்திற்குத் தலைவராகச் செல்லக்கூடிய வழியையும் அடைத்துவிட்டு தேர்தலில் களமிறங்கிய அவர், அனைத்து வேட்பாளர்களிலும் ஆகக் கடைசியாக மிகக் குறைந்த வாக்குகளையே பெற்றுப் படுதோல்வியடைந்தார் என்பது வரலாறாகும்.
இவ்வூரில் புத்திஜீவி என்றும், OLD IS GOLD (பழைய தங்கம்) என்றும் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவினால் அவர் புகழ்ந்து அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அவரது சகல அரசியல் அதிகாரங்களையும் அடாவடித்தனமாகப் பயன்படுத்தி, தேர்தல் பிரச்சார முறைகேடுகளில் ஈடுபட்டும்கூட, ஒரு ஜும்ஆப் பள்ளிவாசலின் தலைவராக இருந்த அவரால் வெற்றி பெற்று கேவலம் ஒரு உறுப்பினராகக் கூடத் தெரிவாக முடியாதவாறு நடுத் தெருவில் நிறுத்தப்பட்டார்.

இவ்வாறு அவரது அரசியல் வாழ்வுக்குச் சாவுமணியடித்த எம்மைப்பற்றி நன்கு தெரிந்திருந்த அவர் எமது கடிதத்தைத் தட்டிக்கழிக்கும் நோக்கத்துடன்தான் அவ்வாறு தலைவர், செயலாளர் யார் என்பது தனக்குத் தெரியாது என்று தான்தோன்றித்தனமாக கூறியிருக்கிறார் என்பது நன்கு வெளிச்சமாகியுள்ளது.
அதுமட்டுமன்றி, நாம் சம்மேளனச் செயலாளரிடம் 10ம் திகதி கையளித்த கடிதம், மறுநாள் அவரது கையில் எமது ஒன்றியத்தின் முத்திரை பதித்த கடிதக் கவருடன் காணப்பட்டதாக பலரும் எமக்குத் தகவல் தெரிவித்தனர். இதற்கு அவரால் மறுப்புக்கூற முடியுமா? சம்மேளனத்தில் செயலாளரிடம் உத்தியோபூர்வமாகக் கையளிக்கப்பட்ட எமது கடிதம் எவ்வாறு சம்மேளன அலுவலகத்திற்கு வெளியே அவரால் எடுத்துச் செல்லப்பட்டது? யாரிடம் காட்டுவதற்காக அதனை அவர் எடுத்துச் சென்றார்? என்றெல்லாம் எம்மிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

சம்மேளனத்தில் கையளிக்கப்படுகின்ற கடிதங்கள், சம்மேளன அலுவலகத்திலேயே முறையாக, ஆவணங்களாகக் கோப்பிடப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மாறாக, சுபைர் CC தலைவர் என்கிற அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரது வீட்டுக் கோழி இட்ட முட்டையை வெளியில் எடுத்துக் கொண்டு செல்வது போன்று, எமது கடிதத்தை எடுத்துக் கொண்டு ரெலிகொம் வீதிச் சந்தியில் எவ்வாறு நடமாட முடியும்? அது எந்த வகையில் நியாயம்?
சம்மேளனத்தின் யாப்பில் இல்லாத பிரதித் தலைவர் பதவியை சட்டத்தரணி அப்தல் ஜவாத் வகித்து வருவதாகச் சுட்டிக்காட்டும் பாவலர் சாந்தி முகைதீன், சம்மேளனத்தில் கையளித்த கடிதமொன்றை தலைவர் சுபைர் ஊஊ வெளியில் எடுத்துச் செல்வது எப்படி என்றும் கேள்வி எழுப்புவாரா? அதற்கு அவருக்குத் தைரியம் உண்டா?

மேலும், சம்மேளனத்திற்கு தபாலில் வருகின்ற ஊர் பேர் தெரியாத மொட்டைக் கடிதங்களைக் கூட கடந்த காலங்களில் சம்மேளன நிர்வாகிகளின் கவனத்திற்கு எடுக்கப்பட்டு மிக்க கரிசனையுடன் இராப்பகலாக அவசரக் கூட்டங்கள், நிர்வாக சபைக் கூட்டங்கள், குழு நிலைக் கூட்டங்கள் என்றெல்லாம் நடாத்தி விசாரிக்கப்பட்டும், தீர்ப்புக்கள் வழங்கப்பட்டும் இருக்கின்றன.

அவ்வாறு விசாரிக்கப்பட்டு பிழையாகவும், பாரபட்சமாகவும், முகஸ்துதியாகவும் வழங்கப்பட்ட தீர்;ப்புகளை மீண்டும் திருத்தி, மாற்றித் தீர்ப்பளிக்கப்பட்ட வரலாறுகளும் எம்மத்தியில் உள்ளன.

ஐக்கிய மக்கள் ஒன்றியம் என்ற பெயர், முகவரி மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு, அதனை எமது ஒன்றியத்தின் அங்கத்தவர்களான முக்கிய வர்த்தகப் பிரமுகர்கள் இருவர் நேரில் சென்று சம்மேளனச் செயலாளர் சபீல் நளீமியிடம் கையளித்திருந்த நிலையில், தனக்குத் தலைவர், செயலாளரைத் தெரியாது என்று இந்த சுபைர் ஊஊ கூறியிருப்பதும், தலைவர் செயலாளர்களின் பெயர்கள் குறிப்பிட்டு இன்னொரு கடிதம் பெற வேண்டுமென சம்மேளனக் கூட்டத்தில் தீர்மானித்திருப்பதும் அப்பட்டமான பாரபட்சமாகும்.
சம்மேளனத்தின் இந்த ஓரவஞ்சனைச் செயற்பாட்டிற்கும், தீர்மானத்திற்கும் நாம் தனியாக பின்னர் பதிலளிப்போம்.

2011ம் ஆண்டு நடைபெற்ற நகர சபைத் தேர்தலில் தலைவராகவோ, உப தலைவராகவோ, உறுப்பினராகவோ தெரிவாகலாம் எனப் பேராசைப்பட்டு தான் வகித்து வந்த பள்ளிவாசல் தலைவர் பதவியையும் இராஜினாமாச் செய்து ஒரு வேட்பாளராகக் களமிறங்கிய இந்த சுபைர் ஊஊ, இறுதியில் ஒரு உறுப்பினராகக் கூட வர முடியாமல் படுகேவலமாகத் தோற்றுப் போய் நடு வீதியில் தனியாளாக நின்றார்.

மீண்டும் எந்த வழியிலாவது ஊருக்குள் இவர் தலையெடுக்க வேண்டுமென்றால் இவருக்கிருந்த ஒரே வழி, முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு எப்படியாவது மீண்டும் தலைவராக வேண்டும் என்பதுதான்.

அதற்காக அப்பள்ளிவாசல் மஹல்லாவாசிகள், ஜமாஅத்தார்களினது விருப்பத்திற்கும், கோரிக்கைகளுக்கும் மாறாக முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி முறைகேடாகவும், கள்ளத்தனமாகவும் பள்ளிவாசலுக்குத் தலைவராகி, அதன் மூலமே மீண்டும் சம்மேளனத்திற்கும் தலைவராகி இன்று ஊருக்குள் மறுபடியும் ‘தான்தோன்றித் தலைவராக’ தலையெடுத்திருக்கின்ற வரலாறை மக்கள் மறந்து விடக்கூடாது. இது இவருக்கு அழகா? பெருமையா??

இந்த நூதனசாலையிலுள்ள உருவச்சிலைகள் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் கடந்த 15.04.2015 அன்று நகர சபையின் தவிசாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை 17.04.2015ம் திகதி வெள்ளிக்கிழமை சகல ஜும்ஆப்பள்ளிவாசல்களிலும் வாசிக்குமாறு கையளிக்கப்பட்டிருந்தது.
முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசலுக்கும் அவ்வாறே அன்று காலை 09:45க்கு அக்கடிதம் கையளிக்கப்பட்டிருந்தது. எனினும், அப்பள்ளிவாசலின் தான்தோன்றித் தலைவரான சுபைர் CCயும், செயலாளர் அனீஸ் அகமதும் உரிய நேரத்தில் அக்கடிதம் கிடைக்கவில்லை என்று காரணம் கூறி அன்றைய ஜும்ஆவில் அதனை வாசிக்காமல் இருட்டடிப்புச் செய்து இந்த உருவச் சிலைகளை ஊருக்குள் பாதுகாக்கும் வேலையில் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கொடுத்துள்ளனர் என்பதையும் நாம் இவ்விடத்தில் பகிரங்கப்படுத்திக் கூற வேண்டியுள்ளது.

சம்மேளத்தில் கையளிக்கப்பட்ட எமது கடிதம் அதன் தலைவர் சுபைர் CC மூலமாக மறுநாளே வெளியில் கொண்டு செல்லப்பட்டதன் காரணமாகத்தான், அன்று வரையிலும் தூங்கிக் கொண்டும், ‘பூனைக்கு மணி கட்டுவது யார்?’ என்ற கேள்வியுடன் பலரின் முணுமுணுப்பாகவும், ஊர்மக்களின் உள்ளக்குமுறலாகவும் இருந்து வந்த இந்த ‘நூதனசாலை உருவச்சிலை விவகாரம்’, மீண்டும் அவசர அவசரமாக முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தரப்பினரின் கவனத்தை ஈர்த்து, கடந்த 15ம் திகதி நடைபெற்ற நகர சபை நிகழ்வில் அவரை அதுபற்றிப் பேசவும் வைத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

காரணம், அவருக்கு எமது ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் மக்கள் பலம், துணிவு, வெளிப்படையாகவே ஈமானிய உணர்வை வெளிக்காட்டிப் போராடும் பண்பு என்பன பற்றி மிக நன்றாகவே தெரியும்.
சுபைர் ஊஊயின் கடிதக் கடத்தலும், ஹிஸ்புல்லாவின் உரையும் ஒரு பக்கமிருக்க, ஜம்இய்யாவில் இடம்பெற்ற கடிதத் திருட்டு பற்றியும் நாம் இங்கு விவரித்தாக வேண்டும்.

எமது ஒன்றியத்தின் இரண்டு உறுப்பினர்கள் ஜம்இய்யாவின் தபால் பெட்டிக்குள் கடிதத்தை இட்டது பற்றி நாம் மேலே குறிப்பிட்டுள்ளோம். இதனடிப்படையில் பூட்டப்பட்டிருந்த ஜம்இய்யா அலுவலக தபால் பெட்டியினுள் நாம் கடிதத்தை இட்ட விடயம் எமது ஒன்றியத்தின் மேற்படி உறுப்பினர்கள் இருவருக்கு மாத்திரமே தெரியும். வேறு எவருக்கும் தெரிந்திருக்க முடியாது.

இந்நிலையில், தபால் பெட்டிக்குள் செலுத்தப்பட்ட கடிதத்தைக் காணவில்லை என ஜம்இய்யா தரப்பினர் கூறியது எமக்குப் பெரும் ஆச்சரியமாக இருந்தது.

அப்படியானால் இக்கடிதத்தை ஜம்இய்யாவின் கதவையும், தபால் பெட்டியையும் திறந்து திருடியது யார்? சங்கைக்குரிய உலமாக்களைத் தவிர வேறு நபர்களும் ஜம்இய்யா அலுவலகத்தினுள் ‘திறந்த வீட்டிற்குள் ஏதோவொன்று போய் வருவது போல’ போக்குவரத்துச் செய்யும் நடைமுறையும் அங்கு இருக்கிறதா? என்பன போன்ற வினாக்களும் எமக்குள் எழுந்திருக்கின்றன.

எமது கடிதம் கிடைக்கவில்லை என அறிந்ததும் நாம் மற்றுமொரு கடிதத்தை உத்தியோகபூர்வமாக ஜம்இய்யாவின் செயலாளர் மௌலவி ஏ.ஜீ.எம். ஜலீல் மதனி அவர்களிடம் மறுதினம் 11ம் திகதி கையளித்தோம்.

அவர்களும் நாம் குறிப்பிட்ட கால வரையறைக்குள் எந்தவிதமான பதில்களையும் தராமல், ஜம்இய்யாவின் தலைவர் அல்ஹாஜ் மௌலவி ஏ.எம். அப்துல்காதர் (பலாஹி) அவர்கள் உம்ராவுக்குச் சென்றுள்ளதாகவும், அவர் 15ம் திகதி ஊருக்கு வந்த பின்னரே எமது கடிதம் குறித்து ஆராயப்படும் எனக் கூறிய தகவலும் கிடைத்தது.

அப்படியானால் ஜம்இய்யாவின் தலைவர் ஊரில் இல்லாமல் போனால் அந்தச் சபை அவர் வரும் வரைக்கும் அப்படியே செயலிழந்து போவதா?

அவர் ஊர் திரும்புகின்ற வரையில் மார்க்கம் சம்பந்தப்பட்ட எந்தவொரு பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து விசாரிக்க, நடவடிக்கை எடுக்க, தீர்ப்பு வழங்க தலையும், மூளையும் உள்ள ஆட்கள் எவரும் அங்கு இல்லையா?

அவ்வாறானால் ஏன் ஆயுட்காலத் தலைவர் ஒருவரையும், உப தலைவர்கள் இருவரையும், தலைவர் தவிர ஏனைய பதவிகளுக்கு நிர்வாகிகளையும், 27 உலமாக்கள் கொண்ட பலாஹிக்கள், மதனிக்கள், மக்கீக்கள், நளீமிக்கள், றஷாதிக்கள், ஹாஷிமிக்கள் போன்றவர்களையும், ஆலோசகர்களாக மௌலவிகளான எஸ்.எம். அலியார் (பலாஹி), ஏ.எம். அலியார் (றியாதி), எம்.எச்.எம். புஹாரி (பலாஹி), எம்.ஐ. அப்துல் கையூம் (ஷர்க்கி), ரி.எம்.எம். அன்ஸார் (நளீமி) போன்றோரையும் நியமித்து ஊருக்கும், உலகத்திற்கும் ‘சோபனா’ காட்ட வேண்டும்?

இவர்கள் எல்லோரும் எம்மைப்போன்று வியாபாரத்திலும், விவசாயத்திலும், மீன்பிடியிலும் ஈடுபடுகின்ற சாதாரணமானவர்களா?

இவர்களின் பெயர்களுக்குப் பின்னால் JP,BA, என்றெல்லாம் ஆங்கில எழுத்துக்களிலான பெரும் பட்டங்களும், பதவிகளும் குறிப்பிடப்படுகின்றனவே, இப்பேர்ப்பட்ட ஊர்மெச்சும் புத்திஜீவிகளால் எமது இரு பக்கக் கடிதத்தைப் படித்து, விளங்கி, ஆராய்ந்து ஒரு நீதியான நேர்மையான தீர்வைச் சொல்ல முடியாத அளவுக்கு இவர்களின் ஆளுமைகள் எல்லாம் மட்டுப்படுத்தப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றனவா?

இவர்களையெல்லாம் சாவி போட்டு இயக்குவதற்கு ஜம்இய்யாவின் தலைவர்தான் சபையில் சமூகமளித்திருக்க வேண்டுமா?

இவ்வாறான கேள்விகளுடன் நாம் இருக்கையில், கடந்த 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு ஜம்இய்யாவின் கூட்டம் அவர்களது அலுவலகத்தில் இடம்பெற்றது.

அதன்போது எமது கடிதம் பரிசீலனைக்கு எடுக்கப்படவில்லை. மாறாக, அங்கு சமூகமளித்திருந்த ஜம்இய்யாவின் நிர்வாக சபை உறுப்பினரான மௌலவி ஒருவர் ஒரு பிரேரணையை முதன்மைப்படுத்தி முன்மொழிந்தாராம்.

15ம் திகதி நடைபெற்ற நகர சபை விழாவில் உரையாற்றிய ஹிஸ்புல்லா, இப்பிரதேசத்தின் மூத்த உலமாவான ஆதம்லெப்பை ஹஸ்ரத் அவர்களைப் பெயர் குறிப்பிட்டு விமர்சித்தமைக்கு ஜம்இய்யாவின் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்பதே அவரது பிரேரணையாக இருந்ததாகவும், அதனை அங்கிருந்த உலமாக்கள் யாவரும் வரவேற்று ஆமோதித்ததாகவும் தெரிய வருகிறது.

இப்பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்படவிருந்த வேளையில் மெத்தைப்பள்ளிவாயலில் பேஷ் இமாமாக இருந்தபோது, அப்பள்ளிவாசல் மத்ரஸா மாணவர்கள் தனவந்தர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று கத்முல் குர்ஆன் ஓதித் தமாம் செய்த வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணத்தொகைகளை வீட்டுக்கு வெளியே வந்ததும் முழுவதுமாகப் பறித்துக் கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, உள்ளுர் பத்திரிகையிலும் பல வாரங்களாக நீடித்து வந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டு பதவியிறக்கப்பட்டவரும், ஜம்இய்யாவின் நிர்வாக சபை உறுப்பினருமான மௌலவி ஏ.எம். காலித் ஹஸன் (பலாஹி), காத்தான்குடி மத்திய கல்லூரி ஆசிரியரும், ஜம்இய்யாவின் உப தலைவர்களில் ஒருவருமான மௌலவி எச்.எம். ஷாஜஹான் (பலாஹி), முன்னாள் நகர சபை உறுப்பினரும், ஜம்இய்யாவின் நிர்வாக சபை உறுப்பினருமான மௌலவி எம்.ஐ.எம். முபாறக் (பலாஹி) போன்றவர்களும் அந்தப் பிரேரணைக்கு எதிராகத் துள்ளிக்குதித்து, போர்க்கோலம் கொண்டு, சபைக்கு மத்தியில் நின்று தாண்டவமாடியதாகவும் கூறப்படுகிறது.

இந்த அமளியின் காரணமாக ஜனநாயக வழியில் இப்பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கூட அங்கு நடைபெறாது கண்ணியமிக்க உலமாக்கள் ஆளுக்கொரு பக்கமாகக் கலைந்து சென்றதாகவும் தகவல் கிடைத்தது. இந்தக் களேபரத்தினால் எமது கடிதம் அன்றையக் கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுக்கப்படவில்லை. எமக்கொரு முடிவை அறிவிக்கவுமில்லை.

இவ்விடத்தில் இந்த காலித் ஹஸன் மௌலவியைப் பற்றியும் நாம் சிறிது குறிப்பிட வேண்டும்.
2011ம் ஆண்டு நகர சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் நாம் ‘போர்வாள்’ சின்னம் ஏந்தி எதிர்த்து நின்ற நவக்கிரக டே;பாளர்களுக்கு ஆதரவாக இவர் மெத்தைப்பள்ளிவாசல் மிம்பரில் நின்றுகொண்டு ஜும்ஆப்பிரசங்கம் செய்த இறையச்சமில்லாதவர்.

பணத்திற்காகவும், பட்டம் பதவிகளுக்காகவும் அநியாயம் செய்யும் அரசியல் வியாபாரிகளை மக்கள் மத்தியில் அதிலும் ஜும்ஆப்பிரசங்கத்தின் மூலமாக ‘நல்லவர்கள், வல்லவர்கள்;’ என்று பொய்ச்சாட்சிப்பத்திரம் வழங்கியவர்.

இவ்வாறான பின்னணிகளைக் கொண்ட இந்த காலித் ஹஸன் மௌலவியின் தலைமையில்தான் நமது பிரதேசத்தின் மூத்த உலமாவை விமர்சித்த ஹிஸ்புல்லாவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட கண்டனப் பிரேரணைக்கு எதிராக, சபையிலிருந்த ஏனைய மூத்த உலமாக்களையும் மதிக்காது ஆவேசமாகப் பொங்கியெழுந்து, ஆக்ரோஷமாகக் கூக்குரலிட்டு, அனைத்து உலமாக்களையும் அங்கிருந்து ஆளுக்கொரு பக்கமாக ஓடச் செய்திருக்கின்றனர்.

உலமாக்களின் சபை ஒழுங்கை அப்பட்டமாக இவர்கள் மீறியிருக்கின்றனர். உலமாக்களுக்கு மத்தியில் நின்று சண்டித்தனம் புரிந்திருக்கின்றனர். எம்மைப் பொறுத்தவரை இந்த காலித் ஹஸன் மௌலவியும், அவருக்கு முட்டுக் கொடுத்து நின்ற ஏனைய மௌலவிமார்களும் ஒரு சாதாரண மூக்குப்பொடித் தும்மலுடன் இந்த ஊரில் அடக்கப்பட வேண்டியவர்களாகும்.

ஜம்இய்யாவின் இக்கூட்டம் குழப்பத்தில் முடிந்த பின்னர், இதே காலித் ஹஸன் மௌலவி யாரோ ஒருவருடன் தொலைபேசித் தொடர்பை ஏற்படுத்தி சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக மகிழ்ச்சியாகவும், சிரித்துக் கொண்டும் சந்தோஷமாக உரையாடியதாகவும் எமக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதன் பின்னரே இவர் அன்று காலையிலிருந்து பலரது வழிகாட்டலுக்கமைய திட்டங்கள் தீட்டி இந்த ஜம்இய்யாவின் கூட்டத்தில் இவ்வாறு குழப்பம் விளைவித்து குறித்த பிரேரணையை நிறைவேற்றாமல் செய்வதற்கு அரும்பாடுபட்டுள்ளார் என்பதும் எமக்குத் தெரிய வந்தது.

ஹிஸ்புல்லாவின் விமர்சனப் பேச்சுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட இப்பிரேரணையைக் குழப்பியடித்து உலமாக்களைத் தலைதெறிக்க ஓட வைத்த குஷியில் இவர் யாருடன் அப்படி நீண்ட நேரம் உரையாடியிருப்பார்?

குறித்த திகதியில், குறித்த நேரத்தில் இவரது தொலைபேசி இலக்கம் 45 நிமிடங்களுக்கும் மேலாக யாருடைய இலக்கத்துடன் இணைந்திருந்தது? என்பதெல்லாம் இன்னும் சில வாரங்களில் எமக்குக் கிடைக்கும்போது, மறுமுனையில் இவரை குஷிப்படுத்தியது யார்? என்ற விபரங்களையும் நாம் அம்பலப்படுத்துவோம்.

இவ்வாறான பல நகர்வுகளுக்கு மத்தியில் கடந்த 19ம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு சம்மேளனத்திற்கு முதலாம் குறிச்சி தரீக்காவாதிகளால் ஒரு கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதன் விபரம் என்னவெனில், கடந்த 22.05.2015 அன்று காத்தான்குடி முதலாம் குறிச்சியில் தேசிய தௌஹீத் ஜமாஅத்தினர் ஏற்பாட்டில் மார்க்க விளக்கக்கூட்டம் ஒன்று நடைபெறும் என சுவரொட்டிகள் மூலம் முன்கூட்டியே பிரச்சாரப்படுத்தப்பட்டிருந்ததைப் பார்த்த இத்தரீக்காவாத அமைப்பு, அவ்வாறு கூட்டம் நடைபெற்றால் பிரச்சினைகள் இடம்பெறும் என்றும், அதனால் அக்கூட்டத்தை தடைசெய்யுமாறும் அக்கடிதத்தில் கேட்டிருந்தது.

அதனைக் கவனத்திற்கெடுத்த சம்மேளன நிர்வாகிகள், ஜம்இய்யதுல் உலமாவின் சார்பாகப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சம்மேளனத்தின் செயலாளர் சபீல் நளீமிக்குக்கூட அறிவிக்காமல் உடனடியாக அவசரக் கூட்டத்தைக் கூட்டித் தீர்மானம் எடுத்து அக்கூட்டத்தை தடை செய்யுமாறு கேட்டு மறுநாளே காத்தான்குடி நகர சபையின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள்.

இந்தக் கடிதத்தில் சம்மேளனத்தின் பிரதித் தலைவரான சட்டத்தரணி ஏ.எல். அப்துல் ஜவாத் அவர்களும், உதவிச் செயலாளருமே கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்குப் பின்னர் நாம் எமது கடிதத்தைக் கையளித்தபோது, காலையில் நிர்வாக சபைக் கூட்டம் நடைபெற்று முடிந்து விட்டதே.. இனி அடுத்த வாரம் 17ம் திகதி நடைபெறும் நிர்வாக சபைக் கூட்டத்தில்தான் இதனைப் பரிசீலிக்க முடியும் என்று கருத்துக்கூறிய சம்மேளன முக்கியஸ்தர்கள், 19ம் இரவு கையளிக்கப்பட்ட இத்தரீக்காக்காரர்களின் கடிதத்தையும் 24ம் திகதி நடைபெறும் நிர்வாக சபைக்கூட்டத்தில்தான் நாம் பரிசீலனைக்கு எடுக்க முடியும் என்று சொல்லவில்லை.

மாறாக, உடனடியாகவே உப செயலாளரை வைத்து அவசரக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் எடுத்து மறுநாளே தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கூட்டத்தை தடை செய்யுமாறு கேட்டு நகர சபைக்கும் கடிதம் அனுப்பி விட்டார்கள்.

தரீக்காவாதிகளின் இந்த எதிர்ப்புக் கடிதம் முதலாம் குறிச்சி ஜும்ஆப்பள்ளிவாசலில் இருந்துதான் தயாரிக்கப்பட்டதாகவும், தொலைபேசி மூலம் தரீக்கா அங்கத்தவர்களுடன் தொடர்பு கொண்டு இக்கடிதத்தில் கையொப்பமிடுமாறு கேட்டுக் கொண்டதாகவும், பின்னர் வீடு வீடாகச் சென்று அவர்களிடம் கையொப்பம் பெறப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

மதிப்புக்குரிய சட்டத்தரணி அப்துல் ஜவாத் அவர்களே..!

இந்த ஊர் மக்கள் உங்களின் சகோதரர் அஷ்ஷஹீத் அல்ஹாஜ் ஏ. அஹமது லெப்பை அவர்கள் மீது வைத்திருந்த பற்றையும், பாசத்தையும், மரியாதையையும் அவரது மறைவின் பின்னர் உங்கள்மீதுதான் வைத்துள்ளார்கள் என்பதனை நீங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

உங்களின் சகோதரரால்; இந்த நாட்டுக்கே முன்னுதாரணமாக இவ்வூரில் உருவாக்கப்பட்ட சம்மேளனத்தை பலரும் பலவதமாக விமர்சித்து வருகின்ற போதிலும், இந்த ஊர் மக்கள் யாவரும் சம்மேளனம் என்றதும் உங்களைத்தான் முதலில் மனதில் நினைத்து அதனை மதிப்புடன் நோக்கி வருகின்றனர்.

சம்மேளனம் எத்தகைய உதவிக் கோரிக்கைகளை மக்களிடம் முன்வைத்தாலும் அங்கு நீங்கள் ஒருவர் படித்த மனிதராக, சட்டம் தெரிந்தவராக, நேர்மையாளராக, சேர்மனின் பின் வாரிசாக அங்கே இருக்கிறீர்கள் என்று கருதித்தான் மக்கள் தமது முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகிறார்கள்.
இந்த யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளாமல் நீங்கள் ஏன் இப்படியெல்லாம் பாரபட்சமாக, மௌனமாக எல்லாம் நடந்து உங்கள்மீதுள்ள மதிப்பையும், மரியாதையையும் கேள்விக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாக்கிக் கொள்ள வேண்டும்?

நூதனசாலையைத் திறப்பதற்கு சகோதரர் ஹிஸ்புல்லாவுக்கு சம்மேளனத்தின் தலைவரான சுபைர் CC கண்முன்னே இருக்கத்தக்க, பிரதித் தலைவரான உங்களை ஏன் அங்கு அழைத்துச் சென்றார் என்பது பற்றி நீங்கள் இன்று வரைக்கும் சற்றேனும் சிந்தித்துப் பார்த்தீர்களா?

சுபைர் CC பட்டத்திற்கும், பதவிக்குமாக ஏற்கனவே ஹிஸ்புல்லாவுக்கு வழிப்பட்டு வழிகெட்டவராகவும், அவரது வழிகேட்டில் வீழ்ந்தவராகவும் இந்த மண்ணில் ஓர் நடைப்பிணமாக நடமாடுவது யாவருக்கும் தெரியும்.

நீங்களோ மக்களின் மனங்களில் நேர்மையாளராகவும், மதிப்புக்குரியவராகவும் இன்னமும் இருப்பதன் காரணமாகவே இப்போது உங்களையும் அவரது வழியில் தந்திரோபாயமாக அழைத்துச் சென்று, நூதனசாலையைத் திறக்கச் செய்து, வழிகேட்டில் பகிரங்கமாக விழச் செய்து மக்களின் மனதில் உங்களை வெறுப்புக்குரியவராக ஆக்கியிருக்கின்றார் என்பதை ஏன் இன்னமும் நீங்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள்?

17ம் திகதி நடைபெற்ற சம்மேளனக் கூட்டத்தில் நீங்கள் எமது கடிதம் குறித்து ஒரு வார்த்தையேனும் நியாயத்தைப் பேசாமல் தலைகுனிந்து மௌனமாக இருந்தது ஏன்?

சம்மேளனத்தின் சட்டச் சிங்கமாக கடந்த காலங்களில் கர்ஜித்து அனைவரையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வழிநடாத்தி வந்த உங்களால் இனிமேல் வாய் திறந்து பேச முடியாத அளவுக்கு உங்களை மௌனிக்கச் செய்தது யார்?

இஸ்லாத்தின் கண்ணியத்தையும், ஈமானின் உறுதிப்பாட்டையும், உலமாக்களின் கௌரவத்தையும், சம்மேளனத்தின் யாப்பையும் நிலைநிறுத்துமாறு கடிதம் அனுப்பிய நாங்களா?

மலை எழுந்தாற்போன்று கண்ணெதிரே சம்மேளனத்தின் தலைவர் சுபைர் CC இருக்கையில், நரித்தந்திரமாக உங்களை உடன் அழைத்துச் சென்று உருவச் சிலையகத்தைத் திறந்த பாவத்தில் உங்களையும் கூட்டாக்கி உங்களின் சமூகப் பணி முகத்தில் கரியைப் பூசிக்கொள்ளச் செய்த ஹிஸ்புல்லாவா?
உங்களை இவ்வாறெல்லாம் பகிரங்கமாக வழிகெடுத்து மௌனிக்கச் செய்தால்தான் அல் மனார் அறிவியல் நிலையத்தைப் போல எமது ஊரின் பொதுச் சொத்தான சம்மேளனத்தையும் வருங்காலத்தில் தனக்கு வாசியாகச் செயற்படக்கூடிய அலுவலகங்களாகச் செயற்பட வைக்கலாம் என்கிற அவரது நரித்தந்திரம் இந்த மண்ணில் ஒருக்காலும் எடுபடாது.

சம்மேளனம் அமைக்கப்பட்டபோது ஏறபடுத்திக்கொள்ளப்பட்ட ஜம்இய்யதுல் உலமாவுடனான ஒப்பந்தம் முழுமையாகவும், அர்த்தமுள்ளதாகவும் இதன் பிறகேனும் இந்த மண்ணில் சம்மேளனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இன்றேல் ஜம்இய்யதுல் உலமா உட்பட இவ்வூரிலுள்ள இஸ்லாமிய நாமத்தைச் சுமந்துள்ள அமைப்புக்கள் அனைத்தும் சம்மேளனக் கூட்டிலிருந்து விலகிக் கொள்ள நேரிடலாம்.

சங்கைமிகு உலமாக்களே…!

நீங்களும் மீனுக்குத் தலையையும், பாம்புக்கு வாலையும் காட்டி விலாங்குகளாகவும், விலங்குகளாகவும் வாழும் வாழ்க்கையிலிருந்து முற்றாக விடுபட வேண்டும்.

உங்களின் வாழ்வாதார வசதி வாய்ப்புக்களுக்காக, பட்டம் பதவிகளுக்காக, பொன்னாடைகளுக்காக, பண முடிப்புக்களுக்காக நீங்கள் கற்றறிந்த மார்க்கத்தைக் கொச்சைப்படுத்துகின்ற, சுயநல அரசியல்வாதிகளிடம் காட்டிக் கொடுக்கின்ற கேவலமான செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது.

கடந்த காலத்தில் நமது மண்ணில் நிகழ்ந்த ஈமானியப் போராட்டம் குறித்து அப்துர் றவூப் மௌலவி கருத்து வெளியிடும்போது, சவூதி அரேபியா போன்ற அரபு நாடுகள் வீசியெறியும் பிஸ்கட்டுக்களுக்காகவே இங்கே மதனிகளும், நளீமிகளும் செயற்பட்டு நமது இளைஞர் சமூகத்தை வழிகெடுக்கிறார்கள் என்று கூறியதை இவ்விடத்தில் நினைவுபடுத்த விரும்புகிறோம்.

அன்றைய கால கட்டத்தில் ஈமானிய எழுச்சியில் இந்த மண்ணின் முஸ்லிம் இளையோரும், முதியோரும் தமது கடைகளை ஒன்பது தினங்களாகத் தொடராக இழுத்து மூடிவிட்டு இஸ்லாத்திற்கு விரோதமான வழிகேடான விடயங்களை அழித்தொழிப்பதற்காக ஒன்றிணைந்து முன் நின்றபோது, அவர்களை வழிநடாத்தியது எமது மதனீக்களும், நளீமிகளும்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அப்போது அப்துர் றவூப் மௌலவி தெரிவித்த அந்தக்கருத்தை ஏற்க மறுத்த நாம், இப்போது ஒரு வேளை அப்படித்தான் இருந்திருக்குமோ? என்றும் சந்தேகப்படுகின்றோம்.

ஏனெனில் ஈமானிய எழுச்சியின் பின் இந்த மண்ணில் காலத்திற்குக் காலம் இடம்பெற்று வருகின்ற மார்க்க ரீதியான செயற்பாடுகளை அவதானிக்கும்போதும், எமது அரசியல் தலைமைகளின் கொள்கை மாறுபட்ட நகர்வுகளை நோக்குகின்ற போதும் அவ்வாறானதொரு சந்தேகம் எழுவதை எம்மால் தவிர்க்க முடியாமலிருக்கின்றது.

இந்நிலையில், ‘நான் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுடன் தொழில் ரீதியாகத்தான் சேர்ந்து செயற்பட்டு வருகின்றேன். மார்க்கம் சம்பந்தமான அவரது செயற்பாடுகளில் எனக்கு உடன்பாடு கிடையாது’ என்று தனது நெருங்கிய நண்பர்களிடம் இரகசியமாகத் தெரிவித்து வரும் அல்மனார் அதிபர் மௌலவி ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி அவர்கள், முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவினால் நிறுவப்பட்டுள்ள இந்த நூதனசாலையில் உருவச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளமை குறித்து அவரது சொந்தக் கருத்தையும், அவர் கற்றறிந்த மார்க்க அறிவின்படியான ‘பத்வா’ மார்க்கத் தீர்ப்பையும் மேலும் தாமதமின்றி இக்காத்தான்குடிச் சமூகத்தின் முன் பகிரங்கமாக முன்வைக்க வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

அவ்வாறு நீங்கள் முன்வைக்கத் தவறும் பட்சத்தில், அப்துர் றவூப் மௌலவி அன்று கூறிய ‘அறபு நாடுகள் வீசியெறியும் பிஸ்கட்டுக்களுக்காகவே’ நீங்கள் எல்லாம் இவ்வூர் மக்களை தவறான வழிகளில் அன்று வழி நடாத்தியுள்ளீர்கள் என்று நாம் தீர்;ப்பு எழுத நேரிடும்.

அதுபோல, முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களும் இஸ்லாமிய மார்க்க உணர்வலைகளுக்கு பெரும் மதிப்பளித்து, ஆதரவளித்து அன்றைய ஈமானிய எழுச்சியின்போது தன்னால் முடியுமான பங்களிப்புக்களையும் மறைமுகமாகச் செய்திருந்தார்.

அவ்வாறில்லையென்றால் அன்றும் அவரிடமிருந்த அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தி ஈமானிய எழுச்சியில் ஈடுபட்ட எமது மண்ணின் இளைஞர்களை இராணுவத்தினரையும், பொலீசாரையும் கொண்டு ஓரிரவிலேயே அவரால் நசுக்கி அடக்கி ஒடுக்கி இருக்க முடியும். அவர் அவ்வாறு செய்யவில்லை. ஈமானிய எழுச்சிக்கு அவரது ஆதரவுக்கரம் மிகப் பலமாக மறைமுகமாக இருந்ததை மறுக்க முடியாது.

மார்க்கப் பிரச்சினைக்குத் தீர்வை ஏற்படுத்தி, இவ்வூர்ப் பிறந்த மக்களை ஒற்றுமைப்படுத்தியது என்பது புறப்பார்வைக்கு நல்ல விடயம்தான். ஆனால் மார்க்கப் பிரச்சினை தீர்;ந்ததா? அவரால் தீர்க்கப்பட்டதா? இல்லையே..!

கேவலம், இந்த ஊரில் நாட்டிய ஈச்சை மரங்களிலும், அலங்காரச் சுற்றுவட்டத்திலும், பிரதான வீதி விஸ்தரிப்பு நடவடிக்கையிலும் இவர் காட்டிய அரசியல் அதிகார அக்கறையை, ‘நீதிபதியை மாற்றியேனும் நான் விரும்புகின்றவாறு எனது நடவடிக்கைகளுக்குச் சாதகமாகத் தீர்ப்பு எழுதக்கூடிய நீதிபதியைக் கொண்டு வந்து நான் நினைத்ததைச் சாதிப்பேன்’ என்று மேடைகளில் ஓங்காரித்துப் பேசிய அளவுக்கு, இந்த இஸ்லாமிய மண்ணில் மீண்டும் வேர்விட்டு விருட்சமாக வளர்ந்திருக்கும் வழிகேடுகள் நிறைந்த ‘பித்அத்’துக்களை வேரறுப்பதில் இவர் அக்கறை காட்டத் தவறியது ஏன்?

காலத்திற்குக் காலம் தனது அரசியல் வெற்றிக்காக நம் சமூகத்தையும், மார்க்கத்தையும் விற்றுப்பிழைத்து, எமது மக்களைப் பிழையாக வழிநடாத்துவது ஏன்?

கெலிஓயா பட்டுப்பிட்டியிலுள்ள தரீக்காவாதிகளின் பள்ளிவாசலும், அரபுக்கல்லூரியுமான ‘ஜாமிஅதுல் மின்ஹாஜிய்யா’வின் வெள்ளி விழா மலரில் இவரது ஆசிச் செய்தி இடம்பெற்றிருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

காத்தான்குடி 1ம், 2ம், 3ம், 4ம் குறிச்சிகளில் ஒரு முகம், 5ம், 6ம் குறிச்சிகளில் இன்னொரு முகம், புதிய காத்தான்குடி எச்.ஐ. புரத்தில் ஒரு முகம், பட்டுப்பிட்டியில் வேறோர் முகம்..

இப்படி எத்தனை முகங்களுடன் இந்த மண்ணின் மைந்தன் தனது சுயநல, தனிநபர் அரசியல் இலாபத்திற்காக நம்மையும், நமது மார்க்கத்தையும் விற்றுக் கொண்டிருக்கின்றார் என்பதை இனியாவது நமது சமூகம் உணர முனைய வேண்டும்.

எமது பார்வையில் இவ்வூரின் இரு கண்களான ஜம்இய்யாவும், சம்மேளனமும் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா என்கிற தனி மனிதரைப் புகழ்பாடும் நிறுவனங்களாகவே இன்று காட்சியளிக்கின்றன.

இவரது புகழ்பாடுவதற்காகவும், இவரிடமிருந்து பொன்னாடைகளும், பணமுடிப்புக்களும் பெறுவதற்காகவும் இவ்விரு சமய, சமூக நிறுவனங்களும் இந்த இஸ்லாமிய மண்ணில் உருவாக்கப்படவில்லை.

எனவே, இந்நிறுவனங்களின் நிர்வாகிகளின் நோக்கும், போக்கும் உடனடியாக மாற்றம் பெற்று அழ்ழாஹ்வுக்காகவும், அவனது சத்திய மார்க்கத்திற்காகவும், இச்சமூகத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட முன்வர வேண்டும்.

அவ்வாறானதொரு மாற்றம் இம்மண்ணில் நிகழுமாயின் நாமும் எமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் ‘ஃபீஸபீலில்லாஹ்’ அழ்ழாஹ்வின் பாதையில் அர்ப்பணம் செய்து உலமாக்கள், ஊர்ப்பெரியவர்களான உங்களினதும், இந்த மண்ணினதும் கண்ணியத்தையும், நாம் விசுவாசித்துள்ள சங்கைமிகு ஈமான், இஸ்லாம் என்பவற்றையும் எதிர்காலத்தில் முழு நாட்டிற்குமே முன்னுதாரணமாக இம்மண்ணில் நிலைநிறுத்திட அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்குத் தயாராக இருக்கின்றோம் என்பதனை வல்ல அழ்ழாஹ்வின் மீதாணையாகத் தெரிவிக்கின்றோம். அழ்ழாஹு அக்பர்! வலில்லாஹில்ஹம்து!!

(மின்னஞ்சல்: புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்)

Published by

Leave a comment