கொழும்பு: நாட்டில் குற்றச் செயல்கள் வேகமாக அதிகரித்து வருவதன் காரணமாக மரண தண்டனையை செயற்படுத்துமாறு மக்களிடமிருந்து கோரிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அது தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் மாணவியொருவர் துஷ்பிரயோத்திற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு எதிப்புத் தெரிவித்து நேற்றைய தினம் (24) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற மெழுகுவர்த்திப் போராட்டத்தின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
எமது நாட்டு மக்கள் மரண தண்டனையினை மீள அமுல்படுத்துமாறு மிகப் பரந்த அளவில் கோரிக்கை விடுத்துள்ளனர். மரண தண்டனையை மீள அறிமுகம் செய்வதன் மூலம் அதிகரித்துவரும் குற்றச் செயல்களைக் குறைக்க முடியும் என்ற எண்ணம் எமது நாட்டு மக்களின் மனதில் தோன்றியுள்ளது. அந்த அடிப்படையில் அரசு என்ற வகையில் அது பற்றி நாமும் சிந்திக்கவுள்ளோம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இம் மெழுகுவர்த்திப் போராட்டத்தை ஏற்பாடு செய்த அமைச்சர் ரோஸி சேனநாயக்க கருத்துத் தெரிவிக்கையில் பெண்கள் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தப்படுவது சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு பிரதிப் பொலீஸ்மா அதிபரொருவரின் பொறுப்பின் கீழ் விசேட பொலீஸ் பிரிவொன்றை ஆரம்பிப்பது சம்பந்தமாக பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்தார்.
Published by

Leave a comment