லாஹூர்: பாகிஸ்தான்-சிம்பாப்வே அணிகளுக்கு இடை யில் இன்று ஆரம்பமாகும் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெறவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு பாக். அணி முகம்கொடுத்துள்ளது. இதில் ஒரு போட்டியில் தோற்றால் கூட பாக். அணியின் ஐ.சி.சி. ஒருநாள் தரநிலை புள்ளிகள் குறைவடையும்.
ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசையில் தற்போது ஒன் பதாவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி தன்னை விடவும் 42 புள்ளிகள் குறைவதாக 11 ஆவது இடத்தில் இருக்கும் சிம்பாப்வே அணியையே எதிர்கொள்கிறது. இதனால் சிம்பாப்வேயி டம் தோல்வியடையும் ஒவ்வொரு போட்டியிலும் பாக். அணியின் தரநிலை புள்ளிகளும் சரிவடையும்.
இதன்படி பாக். அணி சிம்பாப்வேயுடனான தொடரை 3-0 என முழுமையாக வென்றால் அது 87 தர நிலை புள்ளிகளை தக்கவைத்துக் கொள்ளும். ஆனால் அது தொடரை 2-1 என வென்றால் கூட தரநிலை புள்ளிகள் 85ஆக சரிவடையும். அதுவே சிம்பாப்வே அணி தொடரை 2-1 என வென்றால் பாக். அணியின் தரநிலை புள்ளிகள் 83 ஆக வீழ்ச்சி காணும்.
ஐ.சி.சி. தரவரிசையில் 7ஆவது இடத்தில் இருக்கும் மேற்கிந்திய அணியிலிருந்து 9ஆவது இடத்தில் இருக்கும் பாக். அணி வரை வெறும் ஒரு புள்ளிதான் வித்தியாசம் உள்ளது. இதில் 2015 செப்டெம்பர் 30 திகதிவரையான ஐ.சி.சி. தரவரிசை அடிப்படையிலேயே 2017 சாம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான முதல் எட்டு அணிகளும் தேர்வுசெய்யப்படவுள்ளன. இந்த நிலையில் சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கு தகுதி பெற வேண்டுமானால் சிம்பாப்வேயிடம் பாக். தோற்காமல் இருப்பது கட்டாயமாகும்.
சிம்பாப்வேயுடனான தொடர் முடிய பாகிஸ்தான் அணி வரும் ஜூலையில் இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதேபோன்று தரவரிசையில் எட்டாவது இடத்தில் இருக்கும் பங்களாதேஷ் அணி இந்தியா, தென்னாபிரிக்காவுடன் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. எனினும் ஐ.சி.சி. சம்பியன் தொடருக்கான தகுதிகாண் காலத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எந்த ஒருநாள் தொடரும் இல்லை. இந்த நிலையில் சம்பின்ஸ் கிண்ண தொடரில் தகுதி பெறுவதற்கு இந்த மூன்று அணிகளுக்கும் இடையில் அடுத்த நான்கு மாதங்களிலும் கடும் போட்டி நிலவுகிறது.
சாம்பியன்ஸ் கிண்ண தொடர் வரும் 2017 ஜூன் மாதம் இங்கிலாந்தில் இடம்பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment