பாலைவனத்து வெனிஸ் பல்மைரா

palmyra syriaலண்டன்: பல்மைரா நகரைப் பார்ப்பவர்களுக்கு முதலில் எழும் சந்தேகம் இந்த பாலைவனத்தின் மத்தியில் நீண்ட நெடிய தூண்களும், கலைநயமிக்க தோரணவாயில்களும் எப்படி வந்தன என்பது. பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் இந்த வழியாகச் செல்ல நேர்ந்த பயணிகள் தாங்கள் பார்த்த காட்சியைக் கண்டு மீண்டும் மீண்டும் பிரமித்தனர்.

சிரியாவின் பாலைவனத்தின் மத்தியில் பாழடைந்த பழம்பெரும் நகரம். மத்திய தரைக்கடலுக்கும் யுப்ரடிஸ் நதிக்கும் இடையிலான வழியில் சரிபாதி தூரத்தில் பல்மைரா அமைந்திருக்கிறது.

பாலைவனத்தின் மத்தியில் இப்படியொரு செல்வச் செழிப்பு மிக்க பழம்பெரும் நகர் எப்படி உருவானது என்று வியப்பவர்களுக்கான பதில்-பாலையை ஒட்டிய பேரீச்சமர பசுஞ்சோலையின் எல்லையில் இது அமைந்திருக்கிறது.

மத்திய தரைக் கடலைப் பயனபடுத்திய வர்த்தகர்கள் தங்கி இளைப்பாறும் இடமாகவும், தங்கள் வழிப்பயணத்துக்குத் தேவையான தண்ணீரை நிரப்பிக்கொள்ளும் இடமாகவும்தான் ஆதியில் பல்மைரா உருவானது. இந்த பகுதியெங்கும் வளர்ந்து நிற்கும் பேரீச்சம்பழ மரங்களின் பெயரான பல்மைரா என்பதே இந்த நகரின் பெயராகவும் அமைந்துவிட்டது.

எங்கோ ஒரு பாலைவனத்தின் மூலையில் பல்மைரா அமைந்திருந்தாலும் மத்திய கிழக்குப்பிராந்தியத்தின் சரித்திரத்தில் இதற்கு அதிமுக்கிய இடம் உண்டு.

வர்த்தகர் உருவாக்கிய சாம்ராஜ்ஜியம்

இந்த நகரின் தோற்றம் ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக துவங்குகிறது. ரோம சாம்ராஜ்ஜியத்தின்கீழ் படிப்படியாக வளர்ந்த பல்மைரா, கிறிஸ்து பிறந்த பிறகு மூன்றாம் நூற்றாண்டில் ரோம சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்து தனி சாம்ராஜ்ஜியம் அமைக்கும் அளவுக்கு வளர்ந்த்து. பல்மைராவின் சாம்ராஜ்ஜியம் என்பது துருக்கியில் துவங்கி எகிப்துவரை படந்து வளர்ந்தது.

palmyra syria

ரோமப்பேரரசன் அவ்ரெலியனை எதிர்த்து போரிட்ட பல்மைராவின் பேரரசி செனோபியாவின் கதை மிகவும் பிரசித்திபெற்றது. ஆனால் அந்த அளவுக்கு அதிகம் தெரியாத கதை ஒன்றும் உண்டு. அது சாசேனிய பெர்சிய பேரரசையும் பல்மைரா எதிர்த்து போரிட்டது என்பது பலருக்கும் தெரியாது.

மூன்றாம் நூற்றாண்டின் மத்தியில் சாசேனியர்கள் ரோமப்பேரரசை கைப்பற்றி அதன் பேரரசன் வலேரியனைக் சிறைப்படுத்தியபோது பல்மைரியர்கள் தான் அவர்களை போரில் வீழ்த்தி யூப்ரடீஸ் நதியை தாண்டி புறமுதுகிட்டு ஓட வைத்து ரோமானியப் பேரரசை மீட்டுக்கொடுத்தனர்.

அதன்பிறகும் பல நூற்றாண்டுகள் கிழக்கே சரிந்துவந்த தனது செல்வாக்கைத் தூக்கி நிறுத்த ரோமப்பேரரசு, பல்மைரியர்களைத்தான் நம்பவேண்டியிருந்தது.

பல்மைராவின் தனித்துவம்

மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் மிகப்பெரும் சாதனை பல்மைரா. அந்தக்காலத்தில் இருந்த ரோமப்பேரரசின் மற்ற நகரங்களைப் போன்றதல்ல பல்மைரா.

காரணம் இந்த நகரம் கலை ரீதியிலும் கலாச்சார ரீதியாகவும் தனித்தன்மை கொண்டிருந்தது. மற்ற நகரங்களில் நிலச்சுவாந்தார்கள் தான் அந்த நகரின் அனைத்து அம்சங்களையும் நிர்ணயித்தனர். ஆனால் பல்மைராவில் வர்த்தகர்களே அந்நகரின் அரசியல் அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்தினர். தமது பாலைவனத்தை கடக்கும் வர்த்தகர்களின் பொதிகள் சுமந்த வண்டித்தொடரணிகளை பாதுகாப்பதில் இவர்கள் தனிக்கவனம் செலுத்தினார்கள்.

வெனிஸ் நகரம் எப்படி உலக வர்த்தக கட்டமைப்பின் ஒரு அங்கமாக உருவாகி வளர்ந்ததோ, அதேபோல வர்த்தகத்தால் வளர்ந்தது பல்மைரா. வெனிஸுக்கு கடல் வழி வாணிபம் என்றால், பல்மைராவுக்கு பாலைவனத்துப் பாய்மரக்கப்பல்களாக இருந்தவை ஒட்டகங்கள்.

அதுமட்டுமல்ல, பல்மைராவுக்கும் கடல்வழிவாணிகத்துக்கும் தொடர்பு இருந்ததையும் தொல்லியல் சான்றுகள் காட்டுகின்றன. பல்மைரா நகரவாசிகள் யூப்ரடிஸ் நதியில் பயணித்து வளைகுடாவுக்குச் சென்று அதன் வழியாக இந்தியா முதல் எகிப்தின் செங்கடல் வரை கடல்வழி வாணிபம் செய்தனர்.

palmyra syria (2)

கீழைத்தேய நாடுகளில் அவர்கள் வாங்கி வர்த்தகம் செய்த அரும்பொருட்களில் கிடைத்த மிகப்பெரிய செல்வத்தைப் பயன்படுத்தி, தங்களின் சொந்த ஊரில் மிகப்பிரம்மாண்டமான கலைநயமிக்க மாளிகைகளைக் கட்டினார்கள்.

இன்றுவரை பத்திரமாக பாதுகாக்கப்பட்டிருக்கும் பல்மைரைனிய கடவுளர்களுக்கான பிரம்மாண்டமான கோயில்கள், நெடுந்தூண்களைக் கொண்ட ராஜவீதிகள், திறந்தவெளி கலையரங்கம் போன்றவையெல்லாம் பல்மரைனியர்களின் கலைஉணர்வுக்கும், கட்டிடக்கலை நிபுணத்துவத்துக்கும் சான்றுகளாக நிலைத்து நிற்கின்றன.

பல்மைராவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தனித்துவ அடையாளத்துடனான கலாச்சாரம் நிலவியதை வெளிக்கொணர்ந்திருக்கின்றன.

பல்மைரேனியர்கள், அந்த காலத்தில் நடைமுறையில் இருந்த கிரேக்கம் அல்லது லத்தீன் மொழி வரி வடிவங்களுக்கு பதிலாக, தங்கள் கட்டிடங்களின் முகப்பில் செமெடிக் மொழி மற்றும் எழுத்துவடிவங்களைக் கொண்டு அலங்கரித்தார்கள்.

பல்மைரா தனக்கேயுரிய கலைவடிவங்களையும், கட்டிடக்கலையையும் உருவாக்கிக் கொண்டது. பல்மைரா நகரவாசிகளின் அலங்காரம் மற்றும் அவர்களின் கட்டிடங்களின் அலங்காரங்களை கவனிக்கும்போது அவர்களிடம் கீழைத்தேச நாடுகளின் தாக்கமும் மேற்கத்திய நாடுகளின் தாக்கமும் இணைந்தே காணப்பட்டன.

பல்மைராவின் கல்லறைகளில் புதைக்கப்பட்டிருந்த பாடம் செய்யப்பட்ட சடலங்கள் சீனத்துப் பட்டுத்துணியால் சுற்றப்பட்டிருந்தன.

ஆனாலும் கூட, ஒப்பீட்டளவில் பல்மைரா குறித்து நமக்கு மிகவும் குறைவான தகவல்களே தெரியும்.

காரணம் பல்மைராவின் மிகச்சிறிய பகுதியே அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளது. இத்தனைக்கும், இந்த பிரதேசத்தின் தொல்லியல் சான்றுகள் பூமியின் ஆழத்தில் புதையுண்டு போய்விடவில்லை. நிலத்திற்கு அடியில் மேம்போக்காக தோண்டினாலே அதை வெளிக்கொண்டுவரமுடியும். அதனாலேயே, அதை யாரும் கொள்ளையடித்துச் செல்ல முடியும் என்கிற ஆபத்து நிலவுகிறது.

சிரியாவில் இருக்கும் எத்தனையோ வேறு இடங்களைப் போலவே தற்போதைய மோதல்களின்போது பல்மைராவிலும் சந்தேகமில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.

அதேசமயம், ஈராக்கில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் நடந்துகொண்டதை வைத்துப் பார்க்கும்போது, பல்மைரா நகர் அவர்களின் வசமானால், இந்த ஒட்டுமொத்த நகரும் திட்டமிட்டு கொள்ளையடிக்கப்பட்டு அழிக்கப்படும் என்று அஞ்சுவதற்கான காரணங்கள் இருக்கின்றன.

ஏற்கனவே எண்ணெய்க் கிணறுகளைக் கைப்பற்றி கொள்ளை இலாபமீட்டி வரும் இத்தீவிரவாதிகள், பல்மைராவைக் கைப்பற்றி, இப்புராதன சின்னங்களையும், விலைமதிப்பற்ற பொருட்களையும் கொள்ளையடித்து, தனது பக்க பலமாக ykkஇருக்கும் நாடுகளுக்கு கள்ளச் சந்தையில் விற்று மென்மேலும் அதிக இலாபமீட்டிக் கொண்டு, எச்சங்களை இஸ்லாமிய பெயரால் அழித்துவிடுவார்கள். இது இத்தீவிரவாதிகளின் அண்மைய புதிய யுத்திகளாக அமைந்து வருவது விசேட அம்சமாகும்.

Published by

Leave a comment