நான்கு அமைச்சர்கள் நேற்று இராஜினாமா

ministersகொழும்பு: ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிரதிநிதித்துவப் படுத்திய நான்கு அமைச்சர்கள் நேற்று தங்களது அமைச்சுப் பொறுப்புகளில் இருந்து இராஜினாமா செய்தனர்.பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன, சமுர்த்தி வீடமைப்புத்துறை இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, பொதுநிர்வாக, ஜனநாயக

ஆட்சி இராஜாங்க அமைச்சர் சி.பி. ரத்னாயக்க ஆகியோரே நேற்று தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தவர்களாவர்.

தாங்கள் பதவி விலகுவதற்கான காரணங்களை தெளிவுபடுத்தி இவர்கள் நால்வரும் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளனர். அவ்வாறே, தாங்கள் இராஜினாமா செய்வதற்கு மூன்று காரணங்கள் இருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.

அமைச்சுப் பதவிகளை துறந்தமைக்கான காரணங்களை தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளுக்கு அமையவே நாங்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டோம். சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் சகல அங்கத்தவர்களின் அனுமதியுடனே தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதென தீர்மானிக்கப்பட்டதுடன் அமைச்சுப் பதவிகளையும் ஏற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

எனினும் மிகக் குறுகிய காலத்தில் இந்த அமைச்சுப் பதவிகளை துறப்பதற்கு மூன்று பிரதான காரணங்கள் உள்ளன. உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்பட்டமை, நீதிமன்ற சுதந்திரம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி வழங்குவதில் புதிய அரசாங்கம் கவனம் செலுத்தாமை ஆகிய விடயங்களே தாங்கள் பதவி விலகுவதற்கான பிரதான காரணமாகும்.

ministers

இம்மாதம் 15ஆம் திகதி உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டு ஆணையாளரின் கீழ் நிர்வாகம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த செயற்பாடானது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். ஏனெனில் பிரதேச அபிவிருத்திக்கு தங்கள் உறுப்பினர்களை தெரிவு செய்யும் உரிமை காணப்படும் மக்களுக்கு வாக்களித்து தெரிவு செய்யப்படாத ஒருவரின் கீழ் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு உடனடியாக தேர்தலை நடத்தியிருக்கலாம். ஆனால், மக்களின் உரிமையை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

அவ்வாறே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க சட்ட ஆலோசனையை பெறுவதற்காக பொதுநலவாய நாடுகளின் உதவியை நாடியுள்ளார். இந்நாட்டின் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சர்வதேச நாடுகளின் உதவியை நாடியிருப்பது இந்நாட்டு நீதிமன்ற கட்டமைப்பை மீறும் செயலாகும்.

இவ்வாறான ஓர் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்க விரும்பவில்லை. மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியானது இன்றுவரை எமக்கு வழங்கப்படவில்லை. இடைக்கால வரவு செலவு திட்டத்தில் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு கோடி ரூபா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. குறிப்பாக கடந்த அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டிருந்த 50இலட்சம் ரூபா பணம் கூட கிடைக்கவில்லை.

இவ்வாறான நிலையில் நாம் கிராமங்களுக்கு சென்று எவ்விதம் சேவை செய்வது. எமது மக்களுக்கு சேவை செய்ய முடியாமல் நாங்கள் அமைச்சுப் பதவியை வைத்துக் கொள்வதில் எவ்வித பயனும் இல்லை.

ஆனால், ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்தவர்கள் மாத்திரம் பிரதேச மட்டங்களில் புதிய திட்டங்களை ஆரம்பித்து மக்கள் சேவை செய்து வருகிறார்கள். ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நாம் தொடர்ந்து அமைச்சுப் பதவிகளில் இருப்பதற்கு பதிலாக அமைச்சுப் பதவிகளை துறந்து விரைவில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்கு தயாராக வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Published by

Leave a comment