யாழ்ப்பாணம்: புங்குடுதீவு மாணவியின் படுகொலையை கண்டித்து நேற்று யாழ். குடாநாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டன. குடாநாட்டில் கடையடைப்பு காரணமாக ஸ்தம்பிதமடைந்த நிலை காணப்பட்டது.புங்குடுதீவு மாணவியை காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்த கொலையாளிகளுக்கு உச்ச தண்டனையை பெற்றுக் கொடுக்க வேண்டும்
என்பதை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.சந்தேக நபர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட விருந்த நிலையில் நீதிமன்றத்தை சூழவுள்ள பகுதியில் அமைதியின்மை நிலவியது.
சுமார் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கம்புகள், தடிகள், கற்கள், போத்தல்களுடன் நீதிமன்றத்தையும் சிறைச்சாலை வாகனத்தையும் தாக்கினர். முதலில் வீதிகள் மூடப்பட்டிருந்த நிலையில் அத்துமீறி நீதிமன்ற வளவுக்குள் நுழைந்தவர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டனர்.
“எங்களை உள்ளே நுழைய விடுங்கள்” என்று கூறியவாறு தகாத வார்த்தைகளால் ஏசியபடி அவர்கள் தாக்குதல்களை நடத்தினர். யாழ். நீதிமன்ற நீதவான் பொ. சிவகுமார்,நிலைமையை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டதற் கமைய விசேட அதிரடிப்படையினரும், கலகம் அடக்கும் பொலிஸாரும் ஸ்தலத்துக்கு விரைந்தனர். முன்னேறிவரும் கலகக்காரர்களை அடக்குவதற்காக பொலிஸார் கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டனர். அத்துடன் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.
பொலிஸ் நிலைய வீதி, வேம்படி வீதி, பிரதான வீதி, நூலக வீதி, நீதிமன்ற வீதி ஆகியவற்றில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களின் கல் வீச்சு, போத்தல் வீச்சு காரணமாக நீதிமன்ற கட்டட கண்ணாடிகள் நொருங்கின. நீதிமன்ற வளவில் நிறுத்தப்பட்டிருந்த சிறைச்சாலை வாகனம் சேதமாக்கப்பட் டுள்ளது. சட்டத்தரணிகளின் வாகனங்களும் தாக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று சென்று முற்போக்கு தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சுதர்சிங் விஜயகாந்த், ஸ்ரீடெலோ கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் எஸ். செந்தூரன் உட்பட சுமார் 30 பேர் நேற்று கைது செய்யப் பட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களின் கல் வீச்சு காரணமாக 5 பொலிஸாரும் சட்டத்தரணி ஒருவரும் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவு மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி அரச அதிபர் மற்றும் வட மாகாண முதலமைச்சர் ஆகியோருக்கு மகஜர்களும் கையளிக்கப் பட்டன.
யாழ். குடா நாடெங்கும் வர்த்தக நிலையங்கள் இழுத்து மூடப்பட்டிருந்தன. பெண்கள், மாணவர்கள், மதகுருமார், பொது அமைப்புகள், கல்விசார் ஊழியர்கள், வர்த்தக சமூகம் என அனைத்து தரப்பினரும். ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்தினர்.
சந்தேக நபர்கள் எட்டுப் பேரும் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட வேண்டிய நிலையிலேயே இந்த கல் வீச்சுகள் நடத்தப்பட்டன. இவர்களது ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் எதுவென இதுவரை அறியப்படவில்லை. எனினும் இவர்கள் நீதிமன்றத்தினுள் எங்களை நுழைய விடுங்கள் என்பதை மட்டுமே தெரிவித்தபடி கல்வீச்சுகளில் தாக்குதல்களில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக சந்தேக நபர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படவில்லை.
இதேவேளை, யாழ். சட்டத்தரணிகள் சங்கம் நேற்று பிற்பகல் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது தென்னிலங்கையிலுள்ள சில சக்திகளின் உந்துதல்களாலேயே இவ்வாறான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன என்று தெரிவித்தனர்.
மேலும் காட்டுமிராண்டித்தனமாக புங்குடுதீவு மாணவியை சீரழித்து படுகொலை செய்த நபர்களுக்கு எவரும் ஆஜராவதில்லை என்றும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாகவே ஆஜராவதாக அனைத்து சட்டத்தரணிகளும் நேற்று தெரிவித்தனர்.
Published by



Leave a comment