காத்தான்குடியில் ஹெரோயின் ஏற்றுமதி; பலியாடுகளாக வெளிநாட்டுப் பணியாளர்கள்!

kattankudy main road– முஹம்மது நியாஸ்

காத்தான்குடி: இஸ்லாமிய மணம் கமழுகின்ற, இஸ்லாமிய கலாச்சார விழுமியங்களுக்கும் நெறிமுறைகளுக்கும் கால்கோளாகத் திகழ்கின்ற ஒரு முன்மாதிரிமிக்க ஊர் என்று கடந்த ஓரிரு தசாப்தங்களுக்கு முன்னர் மார்தட்டிப்பேசப்பட்ட காத்தான்குடிப் பிரதேசம் சமகால சூழலில் பல்வேறுபட்ட குற்றச்செயல்களுக்கும் கலாச்சார சீரழிவுகளுக்கும் பிரசித்திபெற்ற பிரதேசமாகவும்,

அடிக்கடி ஊடகங்கள் வாயிலாக மேற்கோள் காட்டிப்பேசப்படுகின்ற ஓர் ஊராகவும் மாறிக்கொண்டிருப்பதை அண்மைக்காலமாக நாம் அவதானித்து வருகிறோம்.

இஸ்லாமிய சமூகம் மாத்திரம் செறிவாக சூல் கொண்டுள்ள இப்பிரதேசத்தில் கடந்த சில வருடங்களாக கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், சிறுவர் துஷ்பிரயோகம், சூதாட்டம், வட்டி, தற்கொலை, மோசடிகள் மற்றும் மதுபானம் உள்ளிட்ட போதைவஸ்த்துப்பாவனைகள் போன்ற சகலவிதமான சட்ட, மார்க்க, சமூக விரோத செயற்பாடுகள் அனைத்துமே அடிக்கடி நடைபெற்றுவருவதை நாம் காண்கிறோம்.

பல்வேறுபட்ட இஸ்லாமிய தஃவா அமைப்புக்களும் அமையப்பெற்றுள்ளதுடன் உள்நாட்டிலும் பல வெளிநாடுகளிலும் மார்க்கக் கல்வி பயின்ற பல உலமாக்கள் பணியாற்றுகின்ற, ஆண்களுக்கும் பெண்களுக்கும் மார்கக்கல்வியை பயில்வதற்கு தனித்தனியான பல அரபுக்கலாசாலைகள் மற்றும் இப்பிரதேச சமூகத்தை நெறிப்படுத்தி வழிநடாத்துவதற்கென பள்ளிவாயில் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் ஜம்மியத்துல் உலமா போன்ற மிகப்பெரும் அமைப்புக்களையும் நிறுவப்பெற்றுள்ள இப்பிரதேசத்தில் ஏன் இவ்வாறான சமூக விரோத செயற்பாடுகள் தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன? என்ற அதிசயிக்கத்தக்க கேள்விகளும் அது தொடர்பிலான இப்பிரதேசத்தினுடைய வழிநடாத்துனர்(?)களின் மயிர் பிளக்கும் மாநாடுகளும் ஆய்வுகளும் ஒருபக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்க,

கடந்த சில மாதங்களாக காத்தான்குடி பிரதேசத்தை ஒரு இஸ்லாமிய நகரம் என்று வெளியில் சொல்வதற்கே வெட்கப்படுகின்ற அளவிற்கு சில அசிங்கமான நடவடிக்கைகளும் நடைபெற்றே வருகின்றன.

அவற்றில் ஒன்றுதான் காத்தான்குடி பிரதேசத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு குறிப்பாக கட்டார் நாட்டிற்கு ஹெரோயின் போன்ற சட்டவிரோத போதைப்பொருட்களை கடத்துகின்ற ஒரு தேசவிரோத, சமூக விரோத செயற்பாடாகும். கட்டார் நாட்டில் தொழில்புரிகின்ற இலங்கையர்களில் விகிதாசாரத்தின் அடிப்படையில் பார்த்தோமானால் காத்தான்குடி பிரதேசத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகும் கொண்ட இலங்கையர்களின் தொகையே முன்னணியில் இருக்கிறது. அந்த வகையில் காத்தான்குடியிலிருந்து சராசரியாக நாளொரு நபர் வீதம் தொழில் வாய்ப்பிற்காக கட்டார் நாட்டிற்கு செல்கின்றனர்.

இவ்வாறு கட்டார் நாட்டிற்கும் இன்னும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கும் தொழில் வாய்ப்பிற்காக செல்கின்ற நபர்களை இலக்கு வைத்து காத்தான்குடியில் இயங்கிவருகின்ற சில போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தமது நாசகார வேலைகளை முன்னெடுத்து வருவது அண்மையில் நடைபெற்ற சில சம்பவங்கள் வாயிலாக ஊர்ஜிதமாகியுள்ளது.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு சம்பவம்:

அண்மையில் காத்தான்குடியைச் சேர்ந்த ஒரு நபர் கட்டார் நாட்டிற்குச் செல்வதற்கான ஒழுங்கில் அனைத்து ஏற்பாடுகளையும் முடித்துக்கொண்டு விமான நிலையம் செல்வதற்காக காத்தான்குடி பஸ் நிலையத்திற்கு வந்து உறவினர்களுடன் நின்று கொண்டிருந்தபோது முன்னறிமுகமில்லாத ஒரு நபர் அவசரமாக அவ்விடத்திற்கு வந்து ஒரு சிறிய பொதியை (Parcel) கையில் கொடுத்து “இதை கொண்டு செல்லுங்கள். கட்டாரிலுள்ள எனது நண்பர் அங்கே உங்களுடைய இருப்பிடத்திற்கு வந்தே இதனை பெற்றுக்கொள்வார்” என்று கூறியுள்ளார். வெளிநாட்டுப் பயணத்தில் முன் அனுபவம் இல்லாத அந்த நபர் சிறிய பொதிதானே என்று அதனை வாங்கிக்கொண்டார். இருந்தபோதிலும் உடனிருந்த அவருடைய உறவினர் ஒருவர் அப்பொதியின் மீது சந்தேகம் கொண்டவராக அதனை சோதனையிட்டபோது அப்பொதியினுள்ளே மிகவும் சூட்சுமமான முறையில் ஒரு குறிப்பிட்ட அளவு போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார். அடுத்த சில நாட்களில் அப்பொதியை ஒப்படைத்த நபரை சந்தித்து ஏதோவொரு பொய்யான காரணத்தை கூறி அதனை திருப்பிக்கொடுத்துள்ளார்.

இதனை வெளியில் கூறினாலோ அல்லது பொலிசாரிடத்தில் புகாரளித்தாலோ வெளிநாடு செல்கின்ற தனது உறவினருக்கு சட்டரீதியான ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும் என்பதை பயந்து கொண்டு அந்த சம்பவத்தை மறைத்துக்கொண்டார்.

இன்னும் இதேபோன்று கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் அதாவது 16. 05. 2015 அன்று காத்தான்குடி பொலிசார் மேற்கொண்ட ஒரு தேடுதல் நடவடிக்கையில் புதிய காத்தான்குடி பரீத் நகர் பிரதேசத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் தமது காற்சட்டைகளில் மறைத்து வைத்திருந்த பல இலட்சக்கணக்கான ரூபாய்கள் பெறுமதி கொண்ட ஹெரோயின் வகையைச் சேர்ந்த போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபர்கள் மூவரும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள். இன்னும் ஓரிரு நாட்களில் கட்டார் நாட்டிற்கு பயணிக்க இருந்தவர்கள். காத்தான்குடியில் இருந்து கட்டார் நாட்டிற்கு கொண்டு செல்வதற்காக தமது டெனிம் காற்சட்டையில் மறைத்து வைத்து கொண்டு சென்ற வேளையில் சந்தேகத்தின் பேரில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு இறுதியில் அவர்கள் கட்டார் நாட்டிற்கு கடத்திச் செல்வதற்காகப் பதுக்கி வைத்திருந்த போதைப்பொருட்கள் மொத்தமாகக் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேபோன்று காத்தான்குடியில் நடைபெற்றதாகக் கூறி இன்னும் பல சம்பவங்கள் தொலைபேசி வாயிலாக என்னிடம் தெரிவிக்கப்பட்டு வெளிநாடு செல்கின்ற நபர்களுடைய விழிப்புணர்வு கருதி இணையதளத்தின் வாயிலாக “பகிரங்கப்படுத்துங்கள்” என்று பலர் வேண்டிக்கொண்டபோதிலும் அவ்வாறான சம்பவங்கள் இணையதளங்களில் வெளிப்படுத்துகின்ற அளவிற்கு போதிய ஊர்ஜிதத்தன்மை இல்லாமல் இருப்பதன்காரணமாக மேற்படி ஆதாரபூர்வமாக கிடைக்கப்பெற்ற இரண்டு சம்பவங்களை மாத்திரம் இங்கே எடுத்துக்காட்டாக வெளிப்படுத்தியுள்ளேன்.

இந்த இரண்டு சம்பவங்களிலும் தொடர்புபட்டவர்கள் ஒரே குழுவாகவும் இருக்கலாம். அல்லது வெவ்வேறு குழுக்களாகவும் இருப்பதற்கு வாய்ப்புண்டு. இவர்கள் இன்று நேற்றுத்தான் இந்த கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா, அல்லது நெடுநாள் கள்ளன் ஒரு நாள் பிடிபட்டது போன்று இன்று மாட்டிக்கொண்டார்களா, என்பதை நாம் அறியவில்லை. இன்னும் இவ்வாறு பொலிசாரினால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் பல இலட்சகணக்கான ரூபாய்கள் மதிப்புள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவ்வாறு பல இலட்சக்கணக்கான ரூபாய்களை முதலீடு செய்வதற்கு வசதியுள்ளவர்கள் எதற்காக கட்டார் நாட்டிற்கு சென்று அங்கே தாங்க முடியாத வெயிலிலும் குளிரிலும் பணியாளர்களாக தொழில் புரிய வேண்டும்?

ஒரு வேளை குறித்த பெறுமதியையுடைய போதைப்பொருளானது சமூகத்தில் முக்கிய “புள்ளி” என்னும் கௌரவ(?)ப்பெயரில் உலாவருகின்ற ஒரு பணமுதலைக்குச் சொந்தமானதாகவும் இருக்கலாம்.

அப்”பெரும்புள்ளி” கட்டார் நாட்டிற்கு தொழில் நிமித்தம் செல்கின்ற ஏழை இளைஞர்களை விற்பனை முகவர்களாகப் பயன்படுத்தி தனது இந்த நாசகார செயற்பாட்டினை மேற்கொள்ளுகின்ற இழிபிறவியாகும் இருப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.

ஏனெனில் இவ்வாறான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் ஒருபோதும் தம்மை நேரடியாகத் தொடர்புபடுத்தி அதில் ஈடுபடுவதில்லை. மாறாக போதைப்பொருள் பாவனையில் ஈடுபடாத, காவல்த்துறையினருக்கு சந்தேகம் வராத சாதாரண நபர்களை பகடைகளாகப் பயன்படுத்தியே இந்த நாசகார வேலைகளில் ஈடுபடுகின்றனர். அதன் காரணமாகத்தான் இவர்கள் வெளிநாடுகளுக்கு புதிதாக வேலைக்குச் செல்வோர்களை தேர்வு செய்து அவர்கள் மூலம் தமது கடத்தல் தொழிலை மேற்கொள்ள எத்தனிக்கின்றனர்.

எது எவ்வாறாக இருப்பினும் இந்த போதைபொருள் கடத்தல் மூலம் தனது பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் மென்மேலும் வளப்படுத்திக்கொள்வது ஒரு கொழுத்த செல்வந்தனாக இருந்தாலும் அதன் மூலம் ஒட்டுமொத்தமாக பாதிப்படைவது தமது பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக குடும்பத்தை இழந்து, இன்னும் எத்தனையோ துன்ப துயரங்களை மனதில் சுமந்துகொண்டு வெளிநாடு செல்கின்ற, செல்லவிருக்கின்ற, ஏழைகுடும்பங்களின் குடும்பச்சுமைகளையும் பொறுப்புக்களையும் தோளிலும் மனதிலும் சுமந்துள்ள அப்பாவிகளே என்பதில் மாற்றுக்கருத்தில்லை

ஆகவே இவ்வாறான சதிகாரர்களின் சூழ்ச்சிகளில் இருந்து பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருப்பது அவசியமானது.

இன்று காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த அதிகமான நபர்கள் கட்டார் மற்றும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிகின்ற காரணத்தினால் ஒருவர் வெளிநாடு செல்கின்ற போது அவரிடம் பலரும் தொடர்பு கொண்டு தங்களுடைய உறவினர்களுக்கும் வேண்டப்பட்டவர்களுக்கும் அன்பளிப்புக்களை, உணவுப்பொதிகளை, மருந்துகளை இன்னும் ஏனைய அத்தியாவசியமான பொருட்களை பொதிகளாக கொடுத்து அனுப்புவது ஒரு சாதாரணமான விடயமாகும். தனது பிரதேசத்திலுள்ள நபருக்கு, சகோதரருக்கு உதவி செய்யும் நன் நோக்கிலேயே இங்கிருந்து செல்பவர்களும் அவற்றை மறுக்காமல் எடுத்துச் செல்கின்றனர்.

அதேநேரம் புதிதாக வெளிநாடு செல்பவர்கள் அங்கிருக்கின்ற நபர்களோடு ஒரு நட்பை ஏற்படுத்திக்கொள்வதற்கும் கூட இந்த உதவி ஒரு வழியை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலும் மறுக்காமல் அவற்றை ஏற்றுக்கொள்கின்றனர்.

ஆனாலும் இந்த உதவி செய்யும் மனப்பான்மையைத்தான் சில சமூக விரோதிகள் தமது இழிவடைந்த செயற்பாடுகளுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

இவ்வாறு நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுக்கும்படி பொதிகளாக வழங்கப்படுகின்ற பொருட்கள் விடயத்தில் அவதானத்துடன் நடந்துகொள்ளாது போனால் கடைசியில் கைசேதப்படுவது உதவிசெய்ய எத்தனித்த நல்லுள்ளங்களாகவே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

தாங்கமுடியாத பொருளாதார நெருக்கடிகள், கடன் சுமைகள் மற்றும் இன்னோரன்ன பொருளாதார தேவைப்பாடுகளுக்காக பிறந்த மண்ணில் அனுபவிக்க வேண்டிய எத்தனையோ சுகங்களை, இன்பங்களை துறந்து, தியாகம் செய்து அன்பான மனைவி, ஆசையாய் பெற்றெடுத்து வளர்த்த குழந்தைகள், நண்பர்கள், உறவினர்களை பிரிந்து கடல்கடந்து செல்கின்ற சகோதரர்கள், தம்முடைய பிரதேசத்தை சேர்ந்த ஒரு நபருக்கு செய்ய நினைத்த ஒரு சிறிய உதவியின் காரணமாக வருடக்கணக்கில் சிறை வாசம் அனுபவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு ஆளாக நேரிட்டால் அந்த துயரத்தை தாங்குகின்ற சக்தியை பெற்றவர்கள் நம்மில் எத்தனை பேர் இருக்கிறோம்?

கணவன் ஒரு நல்ல தொழிலில் இணைந்து மாதாமாதாம் பணம் அனுப்புவார் கடன்களை அடைத்து விடலாம், கஷ்டமின்றி வாழலாம் என்று நம்மை நம்பி வழியனுப்புகின்ற மனைவிமார்கள்,

தனது மகனுடைய வெளிநாட்டு வருமானத்தின் மூலம் திருமண வயதை எட்டிவிட்ட தன்னுடைய மக்களுக்கு ஒரு வீட்டைக் கட்டி திருமணம் முடித்து கொடுத்துவிட்டு நாம் விடுதலையாகிவிடலாம் என்ற எதிர்பார்ப்புடன் நம்பியிருகின்ற தாய் தந்தையர்கள்,

தனது தந்தை எங்கே செல்கிறார், எப்போது வீட்டுக்கு திரும்பி வருவார் என்ற எதுவித அறிவும் இல்லாமல் சிரித்த முகத்தோடு கையசைத்து வழியனுப்பும் நமது குழந்தைகள்

இன்னும் ஏனைய உறவுகளுக்கு வழியனுப்பிய மறுநாளே “உங்களுடைய கணவர், தந்தை, சகோதரர் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்” என்ற செய்தி வந்தடைந்தால் அதன் பின்விளைவுகள் நமது குடும்பங்களில் எத்தகைய பிரளயங்களை ஏற்படுத்தும் என்பதை நாம் எல்லோரும் ஒரு கணம் நமது உள்ளத்தில் கைவைத்து கேட்டுப்பார்க்க வேண்டும்.

நமது நாட்டில் கைது செய்யப்பட்டால் ஐந்தாண்டுகளோ பத்தாண்டுகளோ சிறைவாசத்தை அனுபவித்துக்கொண்டு உயிரோடேனும் இருக்கலாம். ஆனால் அதுவே இலங்கை விமானநிலையத்தில் அகப்படாமல் தப்பித்து சவூதி அரேபியா போன்ற ஷரீஆ சட்டமுறைமை அமுல்ப்படுத்தப்படுகின்ற நாடுகளின் சுங்கப்பிரிவுகளில் அகப்பட்டால் நிலைமை என்னவாகும் என்பதை நாம் அனைவரும் ஒரு கணம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அண்மையில் இலங்கை வம்சாவழி-அவுஸ்த்ரேலிய பிரஜையான மயூரன் சுகுமாரன் என்ற ஒரு தமிழ் இளைஞர் இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்திய சுற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டபோது அந்த இளைஞனின் குடும்பத்தவர்கள் கதறியழுத காட்சிகளை அத்தனை தமிழ் மீடியாக்களும் பகிரங்கப்படுத்தியிருந்தன.
இவ்வாறான ஒரு பரிதாப நிலைமை ஒரு பாவமும் அறியாத நமது குடும்பத்தவர்களுக்கும் ஏற்பட வேண்டுமா?
நம்முடைய மனைவிமார்களை, குழந்தைகளை, தாய், தந்தையர்களை, சகோதர, சகோதரிகளை நாம் இவ்வாறனதொரு நிர்க்கதிரான நிலையில் விட்டுச் செல்லவேண்டுமா?

எனவே வெளிநாடு செல்கின்ற நபர்களிடம் இவ்வாறு பொதிகளை ஒப்படைக்கின்ற நபர்கள் யாராக இருப்பினும் அவர்கள் யார், அவர்களுடைய பின்னணிகள் என்னவென்பது தெரியாமல் அவற்றை பாரமேற்காதீர்கள்.

ஒரு நபருக்கு கையளிக்கவேண்டிய பொதியை அவருடைய தாய், தகப்பன் அல்லது மனைவி ஆகிய நபர்கள் அல்லாமல் வேறு எந்த உறவினரிடம் இருந்தோ அவருடைய நண்பர்களிடம் இருந்தோ எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

எப்பேர்ப்பட்ட நண்பர்கள் உறவினர்களாக இருப்பினும் இவ்வாறான போதைப்பொருள்களை கடத்துகின்ற கும்பல்கள் என இனம்காணப்பட, சந்தேகிக்கப்படுகின்ற நபர்களுடன் தொடர்புள்ளவர்களாக இருந்தால் அவர்களிடம் இருந்து பொதிகளை பாரமேற்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

அதேபோன்று வீட்டிலிருந்து புறப்படுகின்ற நேரத்தில் அவசரமாக வந்து கொடுக்கப்படுகின்ற பொதிகளை எக்காரணம் கொண்டும் பொறுப்பேற்காதீர்கள். அவசரமாக கொடுக்கின்ற போது பெரிதாக அலட்டிக்கொள்ளமாட்டார்கள் என்ற ஆயுதத்தைத்தான் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது தற்போது நடைபெற்றுள்ள சில சம்பவங்கள் வாயிலாக நிரூபணமாகியுள்ளது.

ஆனாலும் இந்த விடயத்தில் அறிவுரைகள் என்பதை என்னால் வெறும் எழுத்துக்களில் மாத்திரம்தான் பதிவு செய்ய முடியும். ஆனால் நமது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உரிய நேரத்தில் எவ்வாறு செயற்படவேண்டும் என்பதை அந்தந்த நேரங்களையும் நபர்களையும் கவனத்தில் கொண்டே அனைவரும் செயற்படுதல் அவசியமாகும். ஆகவே நம்முடைய பாதுகாப்பையும் எதிர்காலத்தையும் உறுதி செய்த பின்னரே அடுத்தவர்களுக்கு செய்கின்ற உதவிகளைப் பற்றி யோசியுங்கள். அதுவே காலசூழலின் அவசியப்பாடு கருதிய எனது இறுதியான உபதேசமாகும்.

Published by

Leave a comment