ஊரார் கோழியறுத்து இருவர் பெயரிலும் கத்தம்…?

samousa– அப்துல் அஸீஸ்

காத்தான்குடி: ‘ஊரார் கோழியறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதுவது’ – இப்படியொரு பழமொழி நமது சமூகத்தில் வழக்கில் இருந்து வருகிறது. இதனை உண்மைப்படுத்தும் வகையில் நமதூரில் பல்வேறு விடயங்கள் அவ்வப்போது நடந்தேறி வருவதையும் நம்மால் அவதானிக்க முடிகிறது. இதிலொன்றுதான் நேற்று (17.05.2015) காலை இடம் பெற்ற கத்தமாகும்.

இந்தக் கத்தத்திற்கும், ஏற்கனவே ஓதப்பட்ட பல்வேறுபட்ட கத்தங்களுக்கும் சாப்பாடு வழங்கியிருக்கிறார்கள் புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தினர்.

அதாவது, புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளுக்கும் உட்கட்மைப்பு அபிவிருத்திக்கென ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.

அந்தந்தக் கிராம சேவையாளர் பிரிவில் என்ன தேவை முக்கியமாக அடையாளப்படுத்தப்படுகிறதோ அதனை அந்தப் பகுதி கிராம சேவையாளரின் பங்களிப்புடன் செய்யப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

இது இப்படியிருக்க, இந்தச் செயற்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி தெற்கு 167 சீ கிராம உத்தியோகத்தர் பிரிவில் மையவாடிக் காணியொன்று தெரிவு செய்யப்பட்டு, அந்தக் காணியைச்சுற்றி மதில் கட்டுவதென முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த மார்ச் மாதம் மதில் கட்டுவதற்கு அன்றைய காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம். பாக்கீர் அழைக்கப்பட்டு, கிராம சேவையாளரின் பங்குபற்றுதலுடன் மேற்படி பள்ளிவாயல் செலவில் தேனீர் விருந்துபசாரமும் வழங்கப்பட்டு மக்கள் பிரதிநிதி பாக்கீர் அவர்களினால் அடிக்கல்லும் நடப்பட்டது. மேலும் அன்று பாக்கீர் இட்ட குறித்த அத்திவாரக்கல் இன்று வரை நித்திரை செய்வதையும் அவதானிக்க முடிகிறது.

இந்நிலையில், வழமை போலவே நமதூர் அரசியல் அதிகாரவாதிகளால் திறந்ததைத் திறந்துவைப்பதும், அடிக்கல் நாட்டிய இடத்தில் மீண்டும் அடிக்கல் நாட்டுவதும், வருடா வருடம் ஒரே இடத்தில் மரக்கன்றுகளை நடுவதுமாகப் பழகிப்போன சூழ்நிலையில்…

கடந்த மார்ச் மாதம் பாக்கீர் அவர்களினால் அடிக்கல் நடப்பட்டு பள்ளிவாயல் நிர்வாகத்தினால் சிற்றுண்டி தன்சல வழங்கப்பட்ட அதே இடத்தில் அதே தேவைக்காக மீண்டும் இன்று காலை முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் அடிக்கல் நடப்பட்ட வினோதம் அரங்கேறியுள்ளது.

வெட்கமில்லாமல் அதே அரசியல்வாதிகளும் அவர்களது அல்லக்கைகளும் இதில் கலந்து கொண்டு மீண்டும் சிற்றுண்டி தன்சல உண்டுகளித்துச் சிறப்பித்துள்ளார்கள்.

இதனை அவதானித்த இப்பிரதேச மக்கள், ‘ஒரே பிள்ளை என்பதற்காக ஒன்பது முறை கத்னா செய்வதா..?’ என்று பலர் முன்னிலையில் முகஞ:சுளித்து கேள்வியெழுப்பியதையும் காண முடிந்தது.

மேற்குறிப்பிட்ட ஒரே இரண்டு நிகழ்வுகளையும் கையில் விளக்கை ஏந்திக் கொண்டு; முன்நின்று செயற்படுத்தியவர் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மெய்விசுவாசியான காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரான அல்ஹாஜ் எம்.எஸ்.எம். அப்துல்லாஹ் அவர்களாகும்.

இந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்தான் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து இப்பிரதேசத்தில் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட அனைத்துப் பிரச்சாரக் கூட்டங்களுக்கும் அவ்வப்பிரதேச சமுர்த்திப் பயனாளிகளான பெண்களிடம் சென்று, ‘குறித்த கூட்டங்களுக்கு சமூகமளித்தால் மாத்திரமே ‘வாழ்வெழுச்சி’ திட்டத்தின் கீழ் 2500 ரூபா வழங்கப்பட்டு மீதியாக இருக்கின்ற 7500 ரூபாவும் வழங்கப்படும்’ என வீடு வீடாகச் சென்று அச்சுறுத்தும் வகையிலான அழைப்பு விடுத்து ஆட்சேர்ப்புச் செய்து கொடுத்தவர் என்று உள்ளுர்ப் பத்திரிகையொன்று குற்றஞ்சாட்டி செய்தி வெளியிட்டிருந்ததும், அச்செய்திக்கு இன்று வரை அவரால் மறுப்புத் தெரிவிக்க முடியவில்லை என்பதும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டத்தக்கது.

பள்ளிவாயல் சொத்துக்கள் அமானிதமானது. அதனை உரிய முறைப்படி தேவைக்கு மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும். மாறாக கண்ட கண்ட நிகழ்வுகளுக்கும், தேவையற்ற விடயங்களுக்கும், தமது அரசியல் சுயலாபத் தேவைகளுக்காகவும் செலவு செய்பவர்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும்.

Published by

Leave a comment