வடமாகாணமெங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

mullivaikkal-may19[1]யாழ்ப்பாணம்: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கின் பல்வேறு பகுதிகளில் அமைதியான முறையில் உணர்ச்சிபூர்வமாக இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் உள்ளிட்ட வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் நினைவஞ்சலி நிகழ்வுகள் மற்றும் விசேட மத வழிபாடுகள் என்பன இடம்பெறுகின்றன.

நினைவஞ்சலிக் கூட்டங்கள் மாத்திர மன்றி முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த வர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி இந்துக் கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட மத வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் அவர்களின் ஆத்ம ஈடேற்றத்திற்காக விளக்கேற்றி தமிழ் மக்களைப் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.

வடமாகாணசபை ஏற்பாடு செய்திருக்கும் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலைக்கு அருகில் இன்று காலை 10 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெறுகிறது.

மும்மதத் தலைவர்களின் ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளும் நினைவஞ்சலிக் கூட்டமும் நடை பெறவுள்ளன. இதில் கலந்துகொள்ளு மாறு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பொதுமக்களுக்கு மாகாணசபை அழைப்புவிடுத்துள்ளது.

முள்ளிவாய்க்காலில் கொல்லப் பட்டவர்களின் நினைவாக கடந்த ஒரு வாரமாக நினைவேந்தல் வாரம் அனுஷ் டிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு யாழ் நகரில் அமைந்துள்ள தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபிக்கு முன்னால் தீபங்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.

mullivaikkal-may19[1]

இதனைவிட யாழ் பல்கலைக்கழக சமூகம் ஏற்பாடு செய்துள்ள நினைவஞ்சலி நிகழ்வுகள் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளன.

கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான பிதிர்க்கடன்களைச் செய்வதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஜனநாயக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்துள்ள விசேட மோட்ச அர்ச்சனை கொழும்பு பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் இன்று காலை நடைபெறுகிறது.

அதேநேரம், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் நினைவாக திருகோணமலை சிவன்கோவிலடியில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு மண்டபத்துக்கு முன்னால் நேற்று தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுமாத்திரமன்றி மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் தீபங்கள் ஏற்றி உயிரிழந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மதஸ்தலங்களில் விசேட வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன.

இது இவ்விதமிருக்க முல்லைத்தீவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த பேரணியை நடத்துவதற்கு முல்லைத்தீவு மஜிஸ்திரேட் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாலும் ஏனையவர்களாலும் ஏற்பாடு செய்யப்படும் பொதுமக்கள் பேரணிகள் தடுத்து நிறுத்தப்படாவிட்டால் அது சமாதானத்துக்கு குந்தகத்தை ஏற்படுத்திவிடும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

வடபகுதியில் உயிரிழந்தவர்களை அமைதியான முறையில் நினைவுகூர்வதற்கு எதுவித தடையும் இல்லையென அரசாங்கம் அறிவித்திருக்கும் நிலையிலேயே நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

mullivaikal[1]

இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் புலிகளுக்காக அஞ்சலி நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது சட்டத்திற்கு முரணானது என பொலிஸ் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை, உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் மதஸ்தலங்களிலோ அல்லது வீடுகளிலோ அமைதியான முறையில் பிரார்த்தனைகளில் ஈடுபட முடியுமெனவும் அவர் மேலும் கூறினார்.

எல்.ரீ.ரீ.ஈ.ஐ பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்துள்ள நிலையில் அதன் பெயரை பயன்படுத்தி எந்தவொரு நிகழ்ச்சியையும் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்க இயலாது என முல்லைத்தீவு மஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளது.

அதேபோன்று நாட்டின் எந்தவொரு பகுதியிலும் எல்.ரீ.ரீ.ஈ. என்ற பயங்கரவாத அமைப்பின் பெயரை பயன்படுத்தி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு சட்டத்தை மீறி செயற்படுபவர்களை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுப்பரெனவும் அவர் தெரிவித்தார்.

Published by

Leave a comment