கொழும்பு: நாட்டில் பிரிவினை வாதம் தோற்கடிக்கப்பட்ட ஆறாண்டு நினைவு தினம் நாளை மறுதினம் 19ஆம் திகதி மாத்தறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறுகிறது. இவ்வைபவத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் முப்படைத்தளபதிகள், பொலிஸ் மாஅதிபர், இராஜதந்திரிகள் முதலானோர் பங்குபற்றுகின்றனர்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தைப் போலன்றி யுத்த வெற்றி விழாவாக அன்றி இதனைப் பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்ட நாளாகக் கருதி, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சகலரையும் நினைவுகூர நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்த ஞாபகார்த்த வைபவத்தில் முப்படைகள், பொலிஸ், சிவில் பாதுகாப்புப் பிரிவினர் ஆகியோரின் அணிவகுப்பும் நடைபெறும்.
இதேவேளை, மே 18ஆம் திகதி போரில் உயிர் நீத்தோர் நினைவாக அவர்களின் ஆத்ம ஈடேற்றத்திற்காக விளக்கேற்றி பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில் “உயிர் நீத்தோருக்கு ஈமக்கடன் செய்வதும், ஆன்ம ஈடேற்றத்திற்காகப் பிரார்த்தனை செய்வதும், அவர்களை நினைவுகூர்ந்து கோவில்களில், வீடுகளில், பொது இடங்களில் கூடி நின்று உறவினரும், பொதுமக்களும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து பங்கேற்பதும் அந்தந்த மத நம்பிக்கை கொண்டவர்களின் வழக்கமாகும்.
இவ்வாறான நினைவுகள் மக்களின் பாரம்பரியமும் பொது நம்பிக்கையுமாகும். இழந்த தமது உறவுகளுக்காக கண்ணீர் சிந்தி அஞ்சலி செய்வது அந்த மக்களின் உணர்வும் உரிமையும் ஆறுதலும் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.
Published by
![stock-footage-sri-lanka-flag-loop[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/01/stock-footage-sri-lanka-flag-loop1.jpg?w=150&h=84)
Leave a comment