ஹிஸ்புல்லாவின் விமர்சனங்களுக்கு புவி றஹ்மதுழ்ழாஹ்வின் சாட்டையடி!

hizbullahகாத்தான்குடி: உருவச் சிலைக்கும், உருவப்படத்திற்கும் இடையிலான வித்தியாசம் தெரியாமல் கலைமானிப் பட்டம் பெற்றுக் கொண்டதாகக்கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்..எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா எம்மைப்பற்றி விமர்சித்திருப்பது அவரது அறிவியல் சூனியத்தை அம்பலப்படுத்தியுள்ளது என ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல மத்திய குழுவின் பொதுச் செயலாளர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

காத்தான்குடியில் நேற்று (15.05.2015) வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஐம்பெரும் விழா நகழ்வில் பங்கேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, கடந்த 13ம் திகதி காத்தான்குடி நூதனசாலையிலுள்ள உருவச்சிலைகளை அகற்றுமாறு கோரி நகர சபைக்கு முன்னால் நடாத்தப்பட்ட மக்கள் அழுத்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்த ஜனநாயகக் கட்சியினர், அக்கட்சியின் தலைவர் ‘ஃபீல்ட் மார்ஷல்’ சரத் பொன்சேகா அவர்களின் உருவப்படத்துடன் கூடிய பதாதையை ஏந்தியிருந்தது பற்றி விமர்சனம் தெரிவித்திருந்தார்.

அத்துடன், குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் கடந்த காலத்தில் தன்னுடன் இணைந்திருந்து அனைத்து சுகபோகங்களையும் அனுபவித்த பின்னர், தமது தேவைகள் நிறைவேறாததன் காரணமாகவே இப்போது தனக்கு எதிராக வீதியில் இறங்கியிருப்பதாகவும், இவர்கள் உருவச் சிலைகளை எதிர்த்து வீதியில் இறங்கினார்களா? அல்லது என்னை அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் நோக்குடன் வீதியில் இறங்கினார்களா? என்பதற்கு பதில் சொல்ல வேண்டும் எனவும் கேட்டிருந்தார்.

இவ்விரு விடயங்களுக்கும் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு, ஜனநாயகக் கட்சியின் மத்திய குழு செயலாளர் என்ற வகையில் தமக்கு இருப்பதால் அதுதொடர்பாக இந்த அறிக்கையை விடுத்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள புவி. றஹ்மதுழ்ழாஹ், அவ்விரு விடயங்கள் குறித்தும் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

உருவச் சிலையும், உருவப்படமும்

கடந்த 13ம் திகதி நகர சபைக்கு முன்னால் நடைபெற்ற மக்கள் அழுத்தப் போராட்டத்தில் எமது ஜனநாயகக் கட்சியினர் ஏந்தியிருந்த பாதாதையில் கட்சியின் தலைவர் ‘ஃபீல்ட் மார்ஷல்’ சரத் பொன்சேகா அவர்களின் உருவப்படம்தான் பொறிக்கப்பட்டிருந்ததே தவிர, நாம் அவரின் உருவச்சிலையை அங்கு வைத்துக் கொண்டு அப்போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பதை சகோதரர் ஹிஸ்புல்லா முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இஸ்லாத்தின் பார்வையில் உருவச் சிலைக்கும், உருவப் படத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடு குறித்து அவர் உலமாக்களிடம் விளக்கம் பெற்றுக்கொள்ள வேண்டும். முகநூல்களில் முகத்தை மறைத்துக் கொண்டு கருத்துக்களைப் பதிவிடும் அநாமதேயப் பேர்வழிகள் கிறுக்கும் கருத்துக்களைக் காப்பியடித்து தலையில் ஏற்றிக் கொண்டு வந்து பகிரங்க மேடைகளில் மடத்தனமாக விமர்சனம் செய்யக்கூடாது. உருவப்படத்திற்கும், உருவச் சிலைக்கும் இடையிலான இஸ்லாமிய ஷரீஆவின் ‘ஹுகும்’ மார்க்கச் சட்ட விதிகளை அவரது பிரதான அரசியல் ஆலோசகராக இருக்கும் காத்தான்குடி அப்துர் றவூப் மௌலவியிடமோ அல்லது மும்தாஸ் மதனியிடமோ அவர் கேட்டுப் படித்து தெளிந்து கொள்ள வேண்டும்.

mumthaas moulavi

இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ள படத்தில் சகோதரர் ஹிஸ்புல்லாவின் பிரதான அரசியல் ஆலோசகரான காத்தான்குடி அப்துர் றவூப் மௌலவியின் அறையில் மாட்டப்பட்டிருப்பது, அவரால் மதிக்கப்படும் அஜ்மீர் ஹாஜா முயீனுத்தீன் என்பவரின் கற்பனையாக வரையப்பட்ட ஒரு உருவப்படமேயன்றி, அவரது உருவச் சிலையல்ல. சரத் பொன்சேகாவின் உருவச் சிலையுடன் நாம் வீதியில் இறங்கி ‘உருவச்சிலைகளுக்கு எதிரான’ போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால்தான், சகோதரர் ஹிஸ்புல்லாவின் இந்த விமர்சனம் அர்த்தமுள்ளதாக இருக்க முடியும்.

காத்தான்குடி பிரதான வீதிச் சந்திகளில் மஹிந்த ராஜபக்ஷவினதும், பஷில் ராஜபக்ஷவினதும் உருவப்படங்களை ஹிஸ்புல்லா நிறுவியபோதும், ஏனைய அரசியல் தலைவர்களின் படங்களைக் கொண்ட பதாதைகள் கட்டப்பட்டபோதும் நாம் அது குறித்து விமர்சிக்கவில்லை. காத்தான்குடியில் அவரால் நிறுவப்பட்டிருக்கும் நூதனசாலையில் முஸ்லிம்களான எமது முன்னோர்கள் என அடையாளப்படுத்தி உருவச்சிலைகளைச் செய்து வைத்திருப்பதையே நாம் எதிர்த்தோம்.

unnamed1

இந்த எதிர்ப்பைக்கூட அ.இ.ஜ.உ. சபையின் பத்வாக்குழு இணைப்பாளர் எம்.ஏ.எம். ஹாரிஸ் ரஷாதி அவர்கள் 15.04.2015ம் திகதியிட்டு தெரிவித்திருந்த அவரது பகிரங்கமான மார்க்கக் கருத்துக்களின் அடிப்படையிலேயே நாம் வெளிப்படுத்தினோம். எனவே, எமது கட்சித் தலைவரின் உருவப்படம் பொறித்த பதாதையை நாம் ஏந்தியிருந்ததைப்பற்றி கலைமானி பட்டம் பெற்றதாகக் கூறிக்கொள்ளும் சகோதரர் ஹிஸ்புல்லா, சிறுபிள்ளைத்தனமாக இனிமேலும் விமர்சிக்கக்கூடாது என்பதைப் பகிரங்கமாக அவருக்குச் சொல்லி வைக்க விரும்புகிறேன்.

நக்குண்டு நன்றி மறந்தவர்களும், வாக்குறுதி மறந்த நயவஞ்சகர்களும் யார்?

இந்த மக்கள் அழுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அவருடனிருந்து உண்டு, குடித்து, சுகபோகங்களை அனுபவித்த பின் அவர்களது தேவைகள் நிறைவேறாததன் காரணமாகவே அவரை எதிர்த்து வீதியில் இறங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட சகோதரர் ஹிஸ்புல்லாவின் கருத்தை ஜனநாயகக் கட்சியின் சார்பில் கலந்து கொண்ட எம்மால், அதிலும் குறிப்பாக காத்தான்குடி மத்திய குழுவின் பொதுச் செயலாளனாகிய என்னால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அவருடன் நானும், எமது கட்சியைச் சேர்ந்தவர்களும் இணைந்திருந்த காலத்தில் அப்படி எதனையும் நாம் அனுபவித்து நக்குண்டுவிட்டு இன்று நன்றி மறந்தவர்களாக வீதியில் இறங்கியிருக்கவில்லை. அவர்தான் எனக்கும், என்போன்ற இப்பிரதேச மக்களுக்கும் வாக்குறுதியளித்த பல்வேறு விடயங்களையும் நிறைவேற்றாமல் வாக்குறுதி மீறிய நயவஞ்சகராகச் செயற்பட்டிருக்கின்றார்.

1989ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுழற்சிமுறைப் பிரதிநிதித்துவ வாக்குறுதியை மீறியது மாத்திரமல்லாமல், அப்படியொரு ஒப்பந்தமே தான் செய்து கொள்ளவில்லை என்று இன்றும் ஊடகங்களில் பகிரங்கமாக அவர் அறிக்கையிட்டு வருவது அவரது நயவஞ்சகத்தனத்தின் மிகப் பெரும் காட்சியும், சாட்சியுமாகும்.

மு.கா.விலிருந்து கட்சி மாறி மஹிந்தவின் கூட்டில் விழுந்து முதலாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ‘நானே முஸ்லிம் முதலமைச்சர்’ என்று கிழக்கு மாகாணம் முழுவதும் வாக்களித்து விட்டு, தேர்தல் முடிந்ததும் இந்த மாகாண முஸ்லிம் சமூகத்தை ஜம்பருடன் ஓடி ஏமாற்றியது அவரது மாகாணம் தழுவிய நயவஞ்சகத்தின் சாதனையும், சாட்சியமுமாகும்.

செலிங்கோ ப்ரொஃபிட் செயாரிங் நிதி நிறுவனத்தில் மனைவிக்குப் பிணை நின்று கடன் பெற்றுக் கொண்டு அதனை மீளச் செலுத்தாமல் அந்நிறுவனத்தில் சேமித்த பல்லாயிரம் முஸ்லிம் குடும்பங்களை ஓட்டாண்டிகளாக்கியது அவரது மூன்றாவது நாடு தழுவிய நயவஞ்சகத்தின் வெளிப்பாடாகும்.

இதுபோலவே அவரது அரசியல் ஆலோசகரான காத்தான்குடி அப்துர்றவூப் மௌலவியை, நீதிமன்றம் குற்றவாளியாகக் கண்டு தண்டனை வழங்காமல் அவர் தந்திரமாகக் காப்பாற்றிய கதையும் மறுமை நாள் வரைக்கும் அவருக்கும் எனது குடும்பத்திற்கும் இடையில் நீண்டு அழ்ழாஹ்வின் தீர்ப்பைப் பெறவிருக்கின்ற அவரது முனாபிக் தனத்தின் உலக வரலாறாகும்.

எனது மனைவியின் பெயரில் இருந்த மூன்று ஆதனங்களையும், அதிலிருந்த எனது பெண் மக்களுக்குரிய வீடுகளையும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி அப்துர்றவூப் மௌலவி தனது பெயருக்கு மாற்றி உறுதி எழுதிப் பெற்றிருந்தார். இன்றைய சம்மேளனத்தின் பிரதித் தலைவராக இருக்கும் சட்டத்தரணி அப்துல் ஜவாத் அவர்களால்தான் இந்த உறுதிகள் எழுதப்பட்டன.

2000மாம் ஆண்டு பொதுத் தேர்தலில் நான் முன்னாள் அமைச்சர் சிறிசேனகுரேயின் ‘பிஜைகள் முன்னணி’ கட்சி சார்பாகப் போட்டியிட்டு சகோதரர் ஹிஸ்புல்லாவைத் தோற்கடித்ததன் காரணமாக, அவரது அரசியல் அடிவருடிகளின் பழிவாங்கலுக்குப் பயந்து நான் சில மாதங்கள் தலைமறைவாக வாழ நேரிட்ட காலப்பகுதியில்தான் இந்த ஆதன அபகரிப்புச் சம்பவம் நடைபெற்றது.

Rauff-Moulavi-&-Hizbullah-2

தலைமறைவு வாழ்க்கையை முடித்துக் கொண்டு சில மாதங்களின் பின் ஊர் திரும்பிய நான், அப்துர்றவூப் மௌலவி எனது மனைவி மக்களுக்குச் செய்த இந்த அநியாயத்தை எதிர்த்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தேன். இந்த வழக்கு நடைபெற்று வந்து அப்துர்றவூப் மௌலவி குற்றவாளியாகக் காணப்படக்கூடிய நிலைமை காணப்பட்டபோது, அவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினருக்கும் இடையில் ஏற்பட்டிருந்த மார்க்கக் கருத்து வேறுபாட்டை சகோதரர் ஹிஸ்புல்லா தந்திரமாக முடிவுக்குக் கொண்டு வந்ததையடுத்து ஊரில் இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு வகையான சமாதானம் தோன்றியது.

இந்தச் சந்தர்ப்பத்தில் எனது வீட்டுக்கு வந்த சகோதரர் ஹிஸ்புல்லா, குறித்த வழக்கை வாபஸ் பெறுமாறும், எம்மிடமிருந்து அப்துர் றவூப் மௌலவியால் பலாத்காரமாகப் பறிக்கப்பட்ட மூன்று ஆதனங்களுக்கும், வீடுகளுக்கும் பதிலாக தன்னால் கட்டப்பட்டு வரும் சுனாமி வீடுகள் மூன்றைத் தருவதாக வாக்குறுதியளித்தார்.

இதனடிப்படையில் வழக்குச் செலவாக இரண்டு இலட்சம் ரூபா பணம் கொழும்பு பெயர் லங்கா ட்ரவல்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ் ஏ.எம்.எம். மஹ்றூப் மற்றும் அப்துர் றவூப் மௌலவியின் மகன் ஏ.ஆர். தஹ்லான் ஆகியோரால் எமக்குத் தரப்பட்டதையடுத்து, நாம் பேச்சுவார்த்தையில் இணங்கியபடி அடுத்த தவணையிலேயே அப்துர் றவூப் மௌலவிக்கு எதிராகத் தாக்கல் செய்திருந்த வழக்கை வாபஸ் பெற்று அவர் நீதிமன்றத்தால் குற்றவாளியாக்கப்பட்டு தண்டிக்கப்படவிருந்த நிலைமையைத் தவிர்த்துக் கொண்டோம்.

ஆனால் சகோதரர் ஹிஸ்புல்லாவோ நாம் பணம் கொடுத்து வாங்கி, இப்போது ரிதிதென்ன கிராமத்தில் 800 மாடுகள் கொண்ட பெரும் பண்ணைக்காரராகக் கொழுத்து விளங்கும் சகோதரர் ஹிஸ்புல்லாவின் பொருளாதார அபிவிருத்தி பினாமியான றஹீம் மௌலவியின் பெயருக்கு எழுதிக் கொடுத்த எச்.ஐ. புரக் காணியில் எமக்கு ஒரு சுனாமி வீட்டைத்தான் தந்தார். இன்னும் இரண்டு வீடுகளை அவர் இது வரையில் எமக்குத் தரவில்லை.

DP Puvi 2

கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றாத, இஸ்லாத்தின் பார்வையில் கலப்படமில்லாத சுத்த முனாபிக்கான இந்த ஹிஸ்புல்லாதான் இன்று, எங்களைப்பார்த்து இப்படி தேவைகள் பூர்த்தியாகாததால் வீதிகளில் அவருக்கு எதிராக இறங்கியிருப்பதாக விமர்சனம் தெரிவிக்கிறார்.

இவர் அழ்ழாஹ்வுக்குப் பயந்தவராக தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பவராகவும், முன்னெடுத்தவராகவும் இருந்தால் என் போன்ற அவரை நம்பிய மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்ற வேண்டும்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்றாதவன் இஸ்லாத்தின் பார்வையில் எப்படிப்பட்டவன் என்பதையும், மறுமையில் அவனுக்கும், அழ்ழாஹ்வின் சுவர்க்கத்திற்கும் இடையில் எப்படிப்பட்ட இடைவெளி ஏற்படும் என்பதையும் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவரது அரசியல் ஆலோசகர்களான அப்துர்றவூப் மௌலவி மற்றும் மும்தாஸ் மதனி போன்றவர்களிடம் படித்தறிந்து அழ்ழாஹ்வையும், மறுமையையும் உண்மையாகவே பயந்து கொள்ள வேண்டும்.

hizbullah asfar

இந்த அறிக்கை மூலம் இந்த ஊரும் உலகமும் அறிய நான் தெளிவாக ஒரு விடயத்தைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். இதற்குப் பின்னரும் எம்மைப்பற்றி சகோதரர் ஹிஸ்புல்லாஹ் எம்மைப்பற்றி பொய்யான விமர்சனங்களைச் செய்யக்கூடாது. அதற்கு அவருக்கு சத வீதம் தானும் தகுதியில்லை. என்னுடைய வாழ்வில் நான் கண்ட மகா அரசியல் அயோக்கியனும், பொய்யனும், ஏமாற்றுக்காரனும் அவர் ஒருவராகவே இருக்க முடியும். இதனை அவர் மறுக்கத் துணியமாட்டார் என்றே நம்புகிறேன் – என புவி. றஹ்மதுழ்ழாஹ் தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment