தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தராக கலாநிதி சபீனாவை நியமிக்கவும்! ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல மத்திய குழு அவசரத் தீர்மானம்!!

democratic party kattankudy puviகாத்தான்குடி: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு புதிய உபவேந்தராக கலாநிதி சபீனா இம்தியாசை நியமிக்குமாறு கோரி ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல மத்திய குழு அவசரத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. நேற்று (14.05.2015) வியாழக்கிழமை மாலை நடைபெற்ற மத்திய குழுவின் அவசரக்கூட்டத்தில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உப வேந்தர் நியமனம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு,

தமது கட்சியின் தலைவர் ‘ஃபீல்ட் மார்ஷல்’ சரத் பொன்சேகா அவர்களின் கவனத்தை இவ்விடயத்தில் ஈர்க்கும் பொருட்டு மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மத்திய குழுவின் பொதுச் செயலாளர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மான அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தற்போது பதவியிலுள்ள உபவேந்தரின் இரண்டாவது பதவிக்காலம் எதிர்வரும் ஜுன் மாதத்துடன் முடிவடைவதால் புதிய உபவேந்தரைத் தெரிவு செய்யும் நிகழ்வு கடந்த வாரம் நடைபெற்றபோது, பல்கலைக்கழகத்தின் கவுன்ஸில் மூவரைத் தெரிவு செய்து பல்கலைக்கழக மான்ய ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ளது.

அவர்களில் ஒருவர் கலாநிதி சபீனா இம்தியாஸ் என்பவராகும். இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த 5 வருடங்களாக விஞ்ஞானபீடத்தின் தலைவியாக இருந்து வருகின்ற, சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவராகும். இதுவரையில் எத்தகைய ஊழல் மோசடிகளிலும் சம்பந்தப்படாதவராக இருந்து வருவதுடன், இப்பல்கலைக்கழகத்தின் புவிசார் நிலைமைகளிலும் ஏனைய விடயங்களிலும் அனுபவத் தேர்ச்சியும் கொண்டவராகும். அரசியல்கட்சிகளின் செயற்பாடுகளில் ஆர்வங்காட்டாத, கல்முனைப் பிரதேசத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர்.

democratic party kattankudy puvi

நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களாக நியமிக்கப்படுவோரில் அதிகமானோர் விஞ்ஞான பீடத்தின் தலைவர்களாக இருந்தவர்களாக இருந்துள்ள போதிலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைப் பொறுத்த வரையில் அரசியல்வாதிகளின் சிபார்சுக்கமையவே தகுதி இல்லாதவர்களும்கூட உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பது கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ள கசப்பான அனுபவங்களாகும்.

எனவே, நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுள்ள இக்கால கட்டத்திலாவது இந்த நிலை மாற வேண்டியது அவசியமாகும்.

அந்தவகையில் தற்போது இப்பல்கலைக்கழக செனட் சபையினால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் மூவரில் கலாநிதி சபீனா இம்தியாஸ் அவர்கள் மாத்திரமே உப வேந்தர் பதவிக்கு சகல தகுதிகளும் கொண்டவராகும். மேலும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அதிகமான முஸ்லிம் யுவதிகளும் தமது துறைசார் பட்டப்படிப்பை இப்பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருவதனால், பெண்ணொருவர் உப வேந்தராக நியமிக்கப்படுவதன் மூலம் இப்பல்கலைக்கழகத்தின் ஒழுக்க விழுமியங்களில் பாரிய மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட வழிகோலுவதாகவும் அமையும்.

ஏனைய தெரிவாளர்கள் இருவரும் ஒவ்வொரு வகையில் உரிய தகுதிகள் இல்லாதவர்களாகவே காணப்படுகின்றனர். ஒருவர் எந்தச் சந்தர்ப்பத்திலும் டீனாகவோ அல்லது தலைமைப் பொறுப்புக்களையோ வகிக்காத வெளியூர்வாசி. அவர் உபவேந்தராக நியமிக்கப்பட்டால் அடிக்கடி விடுமுறை பெற்று அவரது சொந்த ஊருக்குச் சென்று வர நேரிடும் எனவும், இதனால் உபவேந்தர் இல்லாத நிர்வாகமே நடக்கும் என்றும் கருதப்படுவதுடன், வெளியூரைச் சேர்ந்தவர்கள் உபவேந்தராக நியமிக்கப்படுவதால் வாரத்தில் 2-3 தினங்களை உபவேந்தர் விடுமுறையிலே கழித்து விடுவார் என்றும், அதனால் வளாகத்தின் நிர்வாகமும், மாணவர்களின் கல்வியும் பின்னடைந்து பாழடைந்து விடக்கூடிய அபாயம் இருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம். மற்றவர் கலாநிதிப் பட்டம் பெறாவதவர். அதனால் இவ்விருவரும் கலாநிதி சபீனா இம்தியாஸை விடவும் தகுதி குறைந்தவர்ளாகவே உள்ளார்கள்.

அடுத்த மாதத்துடன் தற்போதைய உபவேந்தரின் இரண்டாவது பதவிக் காலமான 6 வருடங்கள் முடிவடைவதால் கலாநிதி சபீனாவை புதிய உபவேந்தராக நியமிக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாம் தங்களை வேண்டுகின்றோம் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Published by

Leave a comment