சாய்ந்தமருது: 2015ம் ஆண்டுக்கான தமிழ், சிங்கள புத்தாண்டு சேமிப்பு வாரத்தில் சாய்ந்தமருது திவிநெகும சமுதாய அடிப்படை வங்கி கூடுதலான சேமிப்பு வைப்புக்களை சேமித்து அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
வீடமைப்பு, சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள திவிநெகும அபிவிருத்தித் திணைக்களம் நாடளாவிய ரீதியிலுள்ள திவிநெகும சமுதாய அடிப்படை வங்கிகளுக்கிடையில் ஏப்ரல் 14ம் திகதி தொடக்கம் 20ம் திகதி வரையில் அமுல்படுத்திய புத்தாண்டு சேமிப்பு வாரத்திலேயே சாய்ந்தமருது திவிநெகும சமுதாய அடிப்படை வங்கி அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இதற்கமைவாக சாய்ந்தமருது திவிநெகும சமுதாய அடிப்படை வங்கி 3,931,544.00 ரூபாவினை சேமித்து மாவட்டத்தில் முதலிடத்தையும், அம்பாறை வீரகொட திவிநெகும சமுதாய அடிப்படை வங்கி 3,250,021.00 ரூபாவினை சேமித்து இரண்டாம் இடத்தினையும், நாவிதன்வெளி திவிநெகும சமுதாய அடிப்படை வங்கி 2,988,450.00 ரூபாவினை சேமித்து மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
சாய்ந்தமருது திவிநெகும சமுதாய அடிப்படை வங்கி அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுக்கொள்வதற்கு ஒத்துழைப்பும் ஒத்தாசையும் வழங்கிய சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், திவிநெகும பிரதேச உத்தியோகத்தர் ஏ.சீ.ஏ.நஜீம், திவிநெகும முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி எஸ்.றிபாயா, உதவி முகாமையாளர்களான எம்.எம்.எம்.முபாறக், எம்.யூ.ஹில்மி, ஏ.எம்.எம்.றியாத், வங்கி கட்டுப்பாட்டுச் சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வவதோடு விஷேடமாக களத்தில் கடமையாற்றும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும், வங்கி பணிக்குழுவினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக சாய்ந்தமருது திவிநெகும சமுதாய அடிப்படை வங்கியின் முகாமையாளர் ஏ.ஆர்.எம்.பர்ஹான் தெரிவித்தார்.
சாய்ந்தமருது திவிநெகும சமுதாய அடிப்படை வங்கி கடந்த 2013ம் ஆண்டும் புத்தாண்டு சேமிப்பு வாரத்தில் அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment