காத்தான்குடி: இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக வரலாறை எடுத்தியம்புவதற்காக காத்தான்குடியில் அமைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய நூதனசாலையில், இஸ்லாத்திற்கு விரோதமான உருவச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், அவற்றை உடனடியாக அகற்றுவதற்கு ஆவன செய்யுமாறும் காத்தான்குடி நகர சபை நிர்வாகத்தினருக்கு
அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இன்றைய ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல மத்திய குழுவின் பொதுச் செயலாளர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது சமூகமளித்திருந்த ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது:
காத்தான்குடி நகர சபையின் அனுமதியுடன்தான் இந்த இந்த இஸ்லாமிய நூதனசாலை முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் இவ்வூரில் அமைக்கப்பட்டது.
இவ்வாறு ஒரு இஸ்லாமிய நூதனசாலையை நூறுவீதம் முஸ்லிம்கள் வாழும் இவ்வூரில் நிறுவுவதற்கு முயற்சியெடுத்த அவர், முதலில் இதுவிடயமாக இஸ்லாமிய வழிகாட்டல்களை வழங்குவதற்காக உலமாக்களையும், ஊர்ப் பெரியார்களையும் கொண்ட ஆலோசளைக் குழுவொன்றை அமைத்து அவர்களின் வழிகாட்டலுக்கமைய செயற்பட்டிருந்தால் இன்று இந்த விடயம் இவ்வளவு பூதாகாரமாகி இருக்காது.
அவரது அரசியல் ஆதரவாளர்கள் ஒரு சிலரின் அபிப்பிராங்களுடன் இந்த நூதனசாலையை இஸ்லாம் மார்க்கத்திற்கு முரணான வகையில் உருவச்சிலைகளையும் உள்ளடக்கி நிறுவியதனாலேயே இன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா மற்றும் பிரதேசத்திலுள்ள இஸ்லாமிய தஃவா அமைப்புக்கள் யாவும் ஒட்டு மொத்தமாக இந்த விடயத்தில் தமது அதிருப்தியையும், வன்மையான கண்டனங்களையும் தெரவித்து வருகின்றன. அந்த வகையில்தான் இன்று நடைபெறும் இந்த மக்கள் அழுத்த நடவடிக்கையில் எமது ஜனநாயகக் கட்சியும் அதன் பங்களிப்பை வழங்கியுள்ளது.
நாம் முஸ்லிம்களின் பூர்வீகத்தைப் பேசும் இஸ்லாமிய நூதனசாலையை வேண்டாம் என்று சொல்லவில்லை. அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள உருவச்சிலைகளை முற்றாக அகற்றி, முஸ்லிம்களின் வரலாறுகளைக் கூறும் புராதன கல்வெட்டுக்கள், ஏடுகள், பண்ட பாத்திரங்கள், அகழ்வுச் சின்னங்கள், வரலாற்று ஆவணங்கள் போன்றவற்றைக் கொண்டதாக அதனை மாற்றி அமைக்குமாறே வலியுறுத்துகின்றோம்.
உலமாக்களினதும், பொதுமக்களினதும் இந்த நியாயமான கோரிக்கையை காத்தான்குடி நகர சபை நிர்வாகமும், முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும் கவனத்திற்கெடுத்து அக்கறையுடன் மறுசீரமைப்புச் செய்ய உடனடியாக முன்வர வேண்டும். அவ்வாறின்றி இக்கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுமாயின் இவ்வாறான மக்கள் எழுச்சி நடவடிக்கைகள் காத்தான்குடியில் மாத்திரமல்லாது இலங்கையில் முஸ்லிம்கள் வாழுகின்ற ஒவ்வொரு பிரதேசங்களிலும் எதிர்காலத்தில் மேலும் வலுவாக இடம்பெறும்.
எதிர்வரும் 15ம் திகதி வெள்ளிக்கிழமை இந்த விடயம் தொடர்பில் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா அவரது கருத்துக்களை வெளியிடவுள்ளதாக அறிவித்திருக்கின்றார். அவரது கருத்துக்களை காத்தான்குடிச் சமூகம் மாத்திரமல்லாது முழு இலங்கை முஸ்லிம் சமூகமுமே மிக்க ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. அதில் உலமாக்களையும், முஸ்லிம் சமூகத்தையும் திருப்திப்படுத்தி அவரது இலட்சியமான இந்தனசாலையை முற்றாக மறுசீரமைத்து இந்த இஸ்லாமிய மண்ணில் ஒரு பெறுமதிமிக்க வரலாற்றுச் சொத்தாக இதனை மீள்நிர்மாணிப்பதற்கு முன்வருவார் என்றே பலரும் பரவலாக எதிர்பார்க்கின்றனர்.
இந்த விடயத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் யாருக்கும் கிடையாது. நாங்கள்தான் அரசியல் கட்சிகள் சார்ந்த செயற்பாட்டாளர்களாக களத்தில் இருக்கிறோம். உலமாக்களுமா அரசியலில் ஈடுபடுகிறார்கள்? கடந்த காலங்களில் உள்ளுர் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாக்களின் ஆலோசனைகளைக் கேட்டு அதற்கமைவாக தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்த முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, இப்போது இந்த நூதனசாலை விடயத்தில் மாத்திரம் உள்ளுர் மற்றும் அ.இ.ஜ. உலமாக்களை முற்றாகப் புறந்தள்ளி விட்டு வெளிநாட்டு உலமாக்களின் வழிகாட்டல்களையும், அவர்களது மார்க்கத் தீர்ப்புக்களையும் கையில் எடுத்துக் கொண்டு உருவச் சிலைகள் வைக்கலாம் என்பதற்கான காரணங்கள் சொல்லிக் கொண்டிருப்பதை எவ்வாறு ஏற்க முடியும்?
நூதனசாலையை நிறுவியதிலும் மோசடிகள் இடம்பெற்றிருக்க முடியும்
இந்த நூதனசாலையிலுள்ள உருவச் சிலைகள் விவகாரம் ஒருபுறம் இருக்க, இந்த நூதனசாலையை நிர்மாணித்த விடயத்திலேயே பல மில்லியன் ரூபாய்கள் மோசடிகள் இடம்பெற்றிருக்கக்கூடும் என இப்போது பலரும் சந்தேகம் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.
தற்போது நூதனசாலை அமைந்துள் கட்டிடம், முன்னாள் நகர சபை அமைந்திருந்த ஒரு கட்டிடமாகும். இந்தக் கட்டிடத்தின் சுவர்களை அழகுபடுத்தி, வர்ணக்கண்ணாடிகளைப் பதித்து, அலங்கார வேலைகளைச் செய்து இந்த நூதனசாலையை நிறுவியுள்ளார்களே தவிர, இதற்கான கட்டிடம் அத்திவாரம் முதற்கொண்டு கூரை வரை முழுமையாகப் புதிதாக நிர்மாணிக்கப்பட்டதல்ல என்பதையும் இப்போது காத்தான்குடிச் சமூகம் கவனத்தில் எடுத்துள்ளது.
எனவே, இந்தத் திருத்தப்பட்ட கட்டிடப் பணியிலும் பலவாறான தில்லுமுல்லுகள், மோசடிகள் இடம்பெற்றிருக்கக்கூடும் என நாமும் கருதுகின்றோம். இதுதொடர்பான ஓரு முழுமையான ஆய்வைச் செய்யுமாறு எமது ஜனநாயகக் கட்சியின் ஊடாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விரைவில் மனுச்செய்யவும் தயாராகி வருகின்றோம். இந்த நூதனசாலை நிர்மானத்திற்காக அரசாங்கத்தினால் எவ்வளவு நிதி வழங்கப்பட்டது? வெளிநாட்டு உதவிகள் எந்தெந்த வகையில் கிடைக்கப்பெற்றன? என்பது தொடர்பாக விரிவான விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு ஜனநாயகக் கட்சியின் மூலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரைக் கோரவுள்ளோம்.
ஏனெனில், முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் கடந்த கால அபிவிருத்திகளில் பலவாறான ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருப்பது இவ்வூர் மக்களுக்கு கண்கூடான விடயமாகும். சுனாமியின் பின்னர் அவரால் மேற்கொள்ளப்பட்ட குவைட் சிற்றி வீடமைப்புத்திட்டம் பாரிய மோசடிகளைக் கொண்டது. அதுதொடர்பாக காத்தான்குடி சம்மேளனம் மேற்கொண்ட விசாரணை அறிக்கைகூட இதுவரை வெளியிடப்பட முடியாத அளவுக்கு ஊழல்களும், மோசடிகளும் கொண்டதாக இருக்கின்றது.
அதேபோல் காங்கேயனோடையில் அமைக்கப்பட்ட ‘ஈரான் சிற்றி’ வீடமைப்புத் திட்டம், இப்பிரதேசங்களில் பரவலாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல்கள், மட்டக்களப்புப் பல்கலைக்கழகக் கல்லூரி, பொது நூலகக் கட்டிடம் போன்ற பல விடயங்கள் இருக்கின்றன. இவற்றையும் எமது கட்சியினால் நாம் எதிர்காலத்தில் தூசுதட்டிக் கையில் எடுத்து உண்மைகளைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என அவர் தெரிவித்தார்.
Published by


Leave a comment