கொழும்பு: வில்பத்து விவாகரத்தில் அரசாங்கம் நியாயமாகவும் பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ள வேண்டும், வில்பத்து தேசிய வனத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மறிச்சுக்கட்டி முஸ்லிம் கிராமம் முஸ்லிம்களது மீள் குடியேற்றத்திற்கு பெற்றுக் கொடுக்கப்படல் வேண்டும்.
வில்பத்து சரணாலயத்தின் எப்பகுதியும் வடமாகாணத்தில் உள்ளடக்கப்படவில்லை. வடமேல் மாகாணத்தில் அமைந்துள்ள இச்சரணாலயத்தையும் வடமாகாணத்தில் அமைந்துள்ள மன்னார் முசலிப் பிரதேசத்தையும் பிரிக்கும் எல்லையாக மோதரகம ஆறு (உப்பாறு) காணப்படுகிறது.
1990 ஆம் ஆண்டு மன்னார் மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குளி பிரதேசங்களிலிருந்து சுமார் 500 இற்கும் அதிகமான குடும்பங்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர். 25 வருடங்களின் பின்னர் தற்போது அவர்கள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளனர். இவ்வாறு அதிகரித்த மக்கள் தாம் குடியிருப்பதற்கு சரியான குடியிருப்ப நிலமின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மறிச்சுக்கட்டி மக்களின் 700 ஏக்கர் காணியும், மையவாடியும், முள்ளிக்குளக் கிராமமும் கடற்படை முகாம் அமைப்பதற்காக அரசாங்கத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இராணுவ ஆக்கிரமிப்புக்குதப்பட்ட காணிகளுக்கு பகரமாக மூன்று இனத்தவர்களது மீள் குடியேற்றத்திற்குமாக சுமார் 1/2 ஏக்கர் வீதம் சிறு தொகையினருக்கு மோதரகம ஆற்றிற்கு அப்பால் வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான காணிகள் அத்திணைக்களத்திடம் இருந்து முறைமுறையாக விடுவிக்கப்பட்டு, அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவும் விடுவிக்கப் பட்டு முசலி பிரதேச செயலாளரினூடாக மக்களுக்கு உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
வில்பத்து தேசிய வனத்தில் முன்னாள் அரச காலத்தில் இராணுவம் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி பாதைகள் அமைத்து, சுற்றுலா விடுதிகள் அமைத்து, இராணுவ முகாம்களையும் அமைத்துள்ளமை வில்பத்து தேசிய வன அழிப்புக்கு காரணமாகியுள்ளது.
மறிச்சுக்கட்டி கிராமத்தின் எல்லையிலிருந்து அதாவது மோதரகம ஆற்றின் தெற்காக சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் வில்பத்து சரணாலயத்திற்குள் கடற்கரை ஓரமாக சிங்கள மக்களைக் கொண்ட பூக்குளம் என்ற ஒரு கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 150 இற்கும் அதிகமான குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். இது குறித்து இதுவரை யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை.
வேறு எவரேனும் தனிநபர்கள், மற்றும் வர்த்தகர்கள் தமது செல்வாக்கைப் பிரயோகித்து கடந்த காலங்களில் அரச காணிகளை கையகப் படுத்தியிருந்தாலோ, அல்லது முறைகேடான விதத்தில் தனியார் காணிகளை கொள்வனவு செய்திருந்தாலோ அவை குறித்து அரசாங்கம் விசாரணைகள் நடாத்துவதில் தவறில்லை.
அதேவேளை வில்பத்து காடுகளில் சட்ட விரோதமாக மரங்களை வெட்டியும், மண் மேடுகளை அகற்றியும் இராணுவத்தின் துணையுடன் சட்ட விரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்னாள் அரச உயர்மட்டத்தினரை மற்றும் அவர்களோடு ஒத்துழைத்தவர்களை அரசு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
மறிச்சுக்கட்டி முஸ்லிம்களுக்கு சொந்தமான பூர்வீக இடங்களில் இருந்து இராணுவத்தையும் அரசு அகற்ற வேண்டும்.
வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கு கடந்த அரசாங்கங்கள் என்ன செய்துள்ளன, புதிய அரசாங்கம் என்ன செய்யவுள்ளது என்பதனையும் ஏக காலத்தில் அரசு ஆராய வேண்டும்!
மாவில் ஆறு முதல் ( 2006-2009) முள்ளி வாய்க்கால் வரை அதிக கவனத்தை செலுத்தியுள்ள LLRC அறிக்கை அதற்கு முன் புலம் பெய்ரந்தவர்களின் மீள் குடியேற்றம் பற்றி பேசாமையும் அதற்கான சர்வதேச அழுத்தம் இல்லாமையும் குறிப்பாக மீள் குடியேற்றம், புனர்வாழ்வு , புனரமைப்பு நடவடிக்கைகளில் குறிப்பிட்ட ஒரு சமூகம் (முஸ்லிம்) புறக்கணிக்கப்படுவதற்கு காரணமாக் இருக்கின்றது.
அவ்வாறான தொரு கையறு நிலை ஏற்படுவதற்கு கடந்த காலங்களில் போராட்ட முஸ்லிம் அரசியலை பதவிகள் சலுகைகளுக்காக சூதாட்டமாக மாற்றியமைத்த முஸ்லிம் அரசியல் குழுக்களும் காரணமாக இருந்துள்ளனர் என்பது கசப்பான உண்மையாகும்.
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்வட மேற்கில் மறிச்சுக்கட்டி போன்று வட கிழக்கில் புல்மோட்டை வெள்ளைமணல் என வடகிழக்கெங்கும் முஸ்லிம்களது காணி விவகாரங்கள் முழுமையாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இந்த சந்தர்ப்பத்தை முஸ்லிம் அரசியல் குழுக்கள் சரியாக அணுகி மைத்திரி அரசின் கவனத்தை உரிய மனித உரிமை மற்றும் சிவில் சமூக நடவடிக்கைகளின் பின்புலத்தில் LLRC இற்குள் அடங்காத போரினால பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூக விவகாரங்களை ஆராய்வதற்கான ஒரு ஆணைக்குழுவை நியமனம் செய்யுமாறு ஏகோபித்த வேண்டுகோளை முன்வைக்க வேண்டும்.
இது ஒரு தேசியப்பிர்ச்சினையாகும், தேசத்தில் உள்ள சகல முற்போக்கு சக்திகளினதும் கவனத்தை இந்த விவகாரத்தில் முஸ்லிம் அரசியல் மற்றும் சிவில் தலைமைகள் ஈர்த்தல் ஆரோக்கியமான நகர்வாகும்.
Published by



Leave a comment