மன்னார்: 1990 ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் யுத்தம் நிறைவுற்றதோடு இரு தசாப்த அகதி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து வடக்கில் தமது சொந்த காணி பூமிகளில் மீள்குடியேறி வருகின்ற நிலையில் சில அரசியல் வாதிகளும் இராணுவ புலனாய்வினரும் ஊடகங்களும் இணைந்து இம்மக்களது மீள்குடியேற்றத்தை தடுக்கும் வகையில் பல்வேறு பொய்களை பரப்பி வருகின்றனர்.
இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டில் ஆண்டாண்டு காலமாக சுயம் தனித்துவ அடயாளங்கள் கொண்ட மக்களாக வாழ்ந்து வரும் நிலையில் யுத்தத்தின் போது வடக்கு முஸ்லிம்கள் இழந்த உரிமைகள் சலுகைகள் யாவும் ஏனைய தரப்பினரைப் போன்று மீளவும் நிறைவாக அனுபவிக்க அனுமது வழங்கப்பட வேண்டும்.
ஆனால், அண்மைக்காலமாக கடந்த மகிந்த அரசாங்கத்தில் பகிரங்கமாக இனவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த பொதுபல சேனா போன்ற அமைப்புக்கள் தற்போது மிகவும் இரகசியமாக முஸ்லிம்களுக்கெதிரான இன அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒரு அம்சமாக, முஸ்லிம் அரசியல் வாதிகளின் தலைமையில் வில்பத்து வனப்பகுதிகள் அழிக்கப்படுவதாகவும் அவ்விடங்களில் முஸ்லிம்களுக்கு மட்டுமே வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொய்ப் பிரசாரங்களை பேரின வாதிகள் சிங்கள தமிழ் மக்கள் மத்தியில் பரப்பிவருகின்றனர்.
இத்தகைய நாசகார வேலைகளில் ஹிரு போன்ற சில சிங்கள தமிழ் ஊடகங்களும் செயற்பட்டு தற்போது இலங்கை முழுவதும் நல்லாட்சி மலர்ந்துள்ள வேளையில், வடக்கிலும் தமிழ் முஸ்லிம் சிங்களவர்கள் ஒற்றுமையுடனும் இன ஐக்கியத்தோடும் வாழ்ந்துவரும் இச்சூழலில் மேற்குறிப்பிட்ட சில ஊடகங்கள் இத்தகைய மோசமான இனவிரோத கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருவதானது பல்லின சமூகத்தில் பிளவையும் பிரச்சினைகளையும் உண்டுபண்ணவே வழிவகுக்கும்.
மாண்புமிகு வடக்கு முதலமைச்சர் அவர்களே…!
தங்களது நிறைவான ஆளுமை மற்றும் அறிவால் வடமாகாணம் அபிவிருத்தி கண்டு வரும் நிலையில் வடக்கு முஸ்லிம்களது மீள்குடியேற்றம் தொடர்பாக தடைகளை ஏற்படுத்துகின்ற இனவாத மதவாத சக்திகளின் சதி நாச வேலைகளை தடுத்து நிறுத்தும் படியும் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் ஒற்றுமையை பலப்படுத்தும்படியும் வினையமாக வேண்டுகிறோம்.
தங்களது உயர்ந்த அர்பணிப்பால் தமிழ் மக்களது வீடு காணிப் பிரச்சினைகள் உரிமைகளுக்கான பல்வேறு தீர்வுகளை பெற்றுக் கொடுத்துள்ளீர்கள். இந்தவகையில், இரு தசாப்த அகதி வாழ்கையின் பின்னர் தமது பூர்விக நிலங்களில் மீளக் குடியேறுகின்ற வடக்கு முஸ்லிம்களது உரிமைகள் பேணப்பட வழிவகை செய்யும்படி வேண்டுகிறோம்.
மன்னார் சிலாவத்துறையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பெருமளவு காணிகளை ஆக்கிரமித்து விஸ்தரிக்கப்பட்டுள்ள கடற்படை முகாமை அவ்விடத்திலிருந்து அகற்றும் படியும் குடியிருப்பாளர்களது வீட்டுக் காணிகளை திரும்ப ஒப்படைக்கும் படியும் வேண்டுகிறோம்.
அவ்வாறே முஸ்லிம்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மரிசுக்கட்டி மக்களின் 700 ஏக்கர் காணியை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதில் குறிப்பாக மரிக்காயர் தீவு மையவாடிக் காணிஇ வீட்டுக் காணி விவசாயக்காணி என்பவற்றில் கடற்படையினர் முகாம் அமைதுள்ளனர். முள்ளிக்குள கிராமதிலும் கடற்படையினர் முகாம் அமைத்துள்ளனர். இவ்வாறு வடக்கில் இராணுவமும் கடற்படையினரும் கைப்பற்றியுள்ள முஸ்லிம்களின் காணிகளை மீட்டு திரும்ப அவர்களிடமே ஒப்படைக்க வழி செய்யுமாறு வேண்டுகிறோம்.
Published by

Leave a comment