கொழும்பு: “we are not an electrically safe country” ‘மின்சாரத்தில் நாம் பாதுகாப்பான நாடல்ல’ பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர்களில் ஒரு வரான நிலாந்த இப்படிக் கூறுகிறார்.நம் நாட்டில் தினமும் நடக்கின்ற சம்பவங்கள் இந்தக் கூற்றுக்கு அங்கீகாரம் வழங்குவது போல் இருக்கின்றன. மின்சாரம் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
மின்சாரம் என்றால் மரணப்பொறி என்று அச்சமடையும் அளவுக்கு இங்கு நிலைமை பாரதூரமாகியிருக்கிறது. காலத்துக்கு ஏற்ற மாற்றம், நவீனத்துவம், அபிவிருத்தி ஆகியவற் றிற்கு மின்சாரம் அவசியம் தேவைப்படுகிறது. மின்சாரம் இன்றேல் மனிதனின் இயக்கமும் இல்லாமல் போய்விடும் அளவுக்கு இதன் அத்தியாவசியம் வாழ்வோடு இரண்டறக் கலந்து விட்டது.
ஆம், மின்சாரம் இன்றேல் எதுவுமே அசையாது என்பது ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் யதார்த்தமாகிவிட்டது. என்றாலும், இலங்கை யில் தினமும் நடக்கும் கோரச் சம்பவங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தையே கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
மின்சாரத்தினால் உயிரிழப்பு ஏற்படுவதற்கு அடிப்படையில் பல்வேறு குறைபாடுகள் இருக்கின்றன. ஒன்று பாதுகாப்பற்ற மின் இணைப்பு, இரண்டாவது சட்டவிரோத மின் பாவனை, மற்றது பாவனை யாளர்களின் கவனயீனம். இந்த மூன்றுமே மின்சாரம் தாக்கி உயிரி ழப்புக்கள் ஏற்படுவதற்குக் காரணங்களாக அமைந்திருக்கிறதென பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அழுத்திச் சொல்கிறது. என்றாலும், அப்பாவிகளின் உயிரிழப்புக்கள் குறைந்ததாகவே இல்லை.
யாழ்ப்பாணம், சுன்னாகம், ஐயனார் கோவிலடியில் நேற்று முன்தினம் நடந்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது மட்டுமல்ல, சமூக சிந்தனையாளர்களிடையே பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.காலநிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த வேளையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 28 வயதுடைய தந்தையும் எட்டு வயதுடைய மகனும் மின்சாரம் தாக்கி, துடிதுடித்து உயிரிழந்துள்ளனர்.
வீதியில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வயர் அறுந்து விழுந்ததிலேயே இருவரும் உயிரிழந்திருக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நாளாந்தம் நடந்த வண்ணமே இருக்கின்றன. இதனை ஒரு சாதாரண பிரச்சினையாகக் கொள்ள முடியாது.
இலங்கை மின்சார சபையும் பொறுப்புள்ள அரசாங்கமும் இதற்குப் பொறுப்புக் கூறியே ஆகவேண்டும். சக்தி வாய்ந்த மின்சாரத்தைக் காவிச் செல்லும் மின் கம்பிகளை பாதுகாப்பற்ற விதத்தில் பொருத்தி இருப்பது மிகவும் தவறான விடயம் என்பதை நாம் இங்கு அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறோம்.
மக்களின் தேவை கருதி மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இத னால் இலட்சக்கணக்கான மக்கள் நன்மையடைகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. ஆனால் உயர் மின் அழுத் தத்துடன் கூடிய மின் இணைப்பை பாதுகாப்பற்ற முறையில் பொருத்தி இருந்ததுதான் இந்த இரு அப்பாவிகளின் உயிரிழப்பு க்களுக்குக் காரணமென்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். மின்சாரம் வழங்குவதாகக் கூறி வீதிகளில் மரணப்பொறி வைத்ததுக்கு ஒப்பான சம்பவமாகவே இதனைப் பார்க்க முடிகிறது.
திடீர் காற்று, மழை, இடி, மின்னல் ஏற்படுகின்ற போது மின் இணை ப்பைத் துண்டிப்பதற்கு மின்சார சபை நடவடிக்கை எடுத்திருக் கிறது. அவ்வப்போது நடைமுறைப்படுத்தியும் வருகிறார்கள் என்பது உண்மை. ஆனால், நடைமுறைக்குச் சாத்தியமில்லாம லேயே இருக்கிறது.
சுன்னாகத்தில் தந்தையும் மகனும் சைக்கிளுடன் மின் கம்பியில் சிக்கிய போது மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டிருக்கவில்லை. இருவரையும் காப்பாற்ற பலர் முயன்ற போதும் மின் பாய்ந்ததால், முயற்சி கைகூடவில்லை. இருவரும் கருகியே மாண்டு போனார்கள். இருவரும் உயிரிழந்து சுமார் அரை மணி நேரத்தின் பின்பே மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. இவர்களது குடும்பம் பரிதவிப்பதற்கு யார் காரணம்?
ஒன்றை மட்டும் நாம் இங்கு கூறலாம். யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இலங்கையின் சகல பகுதிகளிலும் மின் இணைப்புக்கள் பொருத் தப்பட்டிருக்கின்ற ஒவ்வொரு வீதிகளிலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியிருக்கிறது.
1978 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தை பாரிய சூறாவளி தாக்கிச் சேதப்படுத்தியது. இதிலும் நூற்றுக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இதிலே கூடுதலானவர்கள் மின்சாரம் தாக்கியே மரணித்திருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
இதேபோல 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இலங்கையின் கரையோரங்களை சுனாமி பேரலைகள் தாக்கி அழித்தன. இதிலும் 30,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பேரலைகளுக்குத் தப்பியோடிய பலர் இந்தப் பிரதேசங்களில் மின்சாரம் தாக்கித்தான் உயிரிழந்திருந்ததாக மருத்துவ அறிக்கை களை ஆதாரங்காட்டி அரச சார்பற்ற நிறுவனங்கள் சுட்டிக்காட்டி யுள்ளன.
பாதுகாப்பான மின்சார கட்டமைப்பு இலங்கையில் உருவாக்கப்பட வேண்டுமென்பது 37 ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு உணர்த் தப்பட்டிருக்கிறது. என்றாலும் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் இதில் கூடுதல் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை.
கொழும்பு மாநகர், உட்பட சில முக்கிய நகரங்களில் பாதுகாப்பான மின் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நிலத்தடி மின் இணைப்புகள், மின் ஒழுக்கு ஏற்படாத பாதுகாப்பு கவசமிடப்பட்ட மின் வயர்களும் சில நகரங்களில் பொருத்தப்பட்டிருக்கிறது. இது வரவேற்கக் கூடியதாக இருந்தாலும் நாட்டின் சகல பகுதிகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படாதது கவலையளிக்கிறது. நிதிப்பற்றாக்குறையை இதற்கு அரசு காரணமாகக் காட்டினாலும், பாதுகாப்பு உத்தரவாதம் என்பது அனைத்துக்கும் மேலானது.
(நன்றி: தினகரன் ஆசிரியர் தலைப்பு)
Published by

![1215129-a-large-electric-post-is-in-the-rays-of-a-sunset[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/1215129-a-large-electric-post-is-in-the-rays-of-a-sunset1.jpg?w=197&h=300)
Leave a comment