ஈரானை வீழ்த்த மேற்கத்தேய ஆயுத விற்பனையும் மத்திய கிழக்கின் ஆயுதப் போட்டியும்

planeலண்டன்: ஐக்கிய அரபு எமிரேட்டுகள் தங்களது ராணுவ பலத்தை கணிசமாகப் பெருக்கிக் கொண்டிருக்கின்றன. கத்தாரும் கூடத்தான். அதே போல சவுதி அரேபியா புதிய வகை ராணுவ தளவாடங்களில் முதலீடுகளைச் செய்து கொண்டிருக்கிறது. தற்போது கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி பிரான்ஸ்,கத்தாருக்கு 2018ல் 24 ரஃபேல் போர் விமானங்களை விற்கிறது.

வளைகுடா நாடுகள் ஒரு ஆயுதப் போட்டியில் ஈடுபட்டிருக்கின்றன, ஆனால் அது ஒரு “ ஒருவழிப்பாதை” என்று கூறுகிறார், ஸ்டக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சிக் கழகம் என்ற ஆய்வு நிறுவனத்தில் ஆயுத மற்றும் ராணுவ செலவின்ங்களைப் பற்றி ஆய்வு செய்யும், பீட்டர் வெஸிமன்.

வளைகுடா நாடுகளில் அரபுத் தரப்பு ஏராளமான அளவு பணத்தை ஆயுதங்கள் வாங்குவதில் செலவு செய்து கொண்டிருக்கிறது. கத்தார் ஒரு நல்ல உதாரணம். சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகள் இந்த விஷயத்தில் முக்கிய நாடுகளாக இருக்கின்றன.

உள் நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலிருந்தோ வரும் கிளர்ச்சியை அடக்குவதுதான் இந்த ராணுவ முதலீடுகளின் இலக்கு என்று கூறுகிறார் வெஸிமான்.யெமன், ஈராக் அல்லது சிரியா போன்ற நாடுகளில் நடக்கும் மோதல்கள் தங்கள் நாடுகளுக்கும் பரவிவிடுமோ என்று அரபு நாடுகள் அஞ்சுகின்றன.அப்புறம் ஈரான் பிரச்சனை இருக்கிறது.

plane

“ஈரான் ஒரு அச்சுறுத்தல் என்ற ஒரு உணர்வு நீண்டகாலமாகவே நிலவி வருகிறது. ஈரானை இந்த நாடுகள் ஒரு பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்கின்றன”, என்று கூறுகிறார் வெஸிமான்.

“ஈரானை மிரட்டுவதற்காகத்தான் இந்த ஆயுதங்கள்”, என்கிறார் அவர்.

“ஆனால் இது சற்று விநோதமான கருத்து ஏனென்றால் இது போன்று அரபு நாடுகள் வைத்திருக்கும் அதி உயர் தொழில்நுட்ப ஆயுதங்களை வாங்கத் தேவையான பணமோ அல்லது அதைப் பெற்றுத்தரும் தொடர்புகளோ ஈரானுக்கு உண்மையில் இல்லை”, என்று கூறுகிறார் வெஸிமான்.

ஈரானின் ஷியாத் தலைமைக்கும், எண்ணெய் வளத்தால் செல்வம் கொழிக்கும் சுன்னிப் பிரிவு நாடுகளுக்குமிடையே , யார் பெரியவர் என்ற சண்டை இந்தப் பிராந்தியத்தில் நிலவுவது ஒன்றும் புதிதல்ல என்றாலும், இந்தப் பிரதேசத்தில் நிலவும் கொந்தளிப்பான சூழல் இப்போது இந்த ராணுவ மயமாக்கும் வழிமுறையை வேகப்படுத்துவது போல் தோன்றுகிறது.

பொருளாதார ரீதியில் பார்த்தால், வெற்றி பெறுவது என்னவோ மேற்கத்திய நாடுகள்தான். இந்த ராணுவ ஒப்பந்தங்கள் மூலம் அவைகளுக்குத்தான் பல பிலியன் டலர்கள் லாபம்.

அரபு நாடுகளுக்கு செய்யப்படும் ஆயுத விற்பனையில் பெரும்பாலான விற்பனை அமெரிக்காவிடமிருந்துதான் வருகிறது. ஆனால் பிரிட்டனும், பிரான்சும், பிற ஐரோப்பிய நாடுகளும்கூட விற்பனை செய்யும் முக்கிய நாடுகள்தான்.

சுமார் அரை நூற்றாண்டுகளாக ஈரானுக்குள் மாத்திரம் மூக்கை நுழைக்க முடியாமல் இருக்கும் அமெரிக்காவிற்கும் அதனது வால்பிடி நாடுகளுக்கும் தற்போதைய அரபுலகத்தின் ஆயுதக் கொள்வனவுப் போட்டி ஓர் திறவுகோளாக அமைகிறது.

Published by

Leave a comment