பாத்திமா அப்ரோஸின் மரணமும் படிப்பினைகளும்

abroseகாத்தான்குடி அப்துல்லாஹ்

காத்தான்குடி: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நான்கு நாட்களுக்கும் மேலாக உணர்வற்ற நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த காத்தான்குடி 06, அப்துல் ஜவாத் ஆலிம் வீதியைச் சேர்ந்த இருபத்திரண்டு மாதங்களே வயதான பச்சிளம் குழந்தை பாத்திமா அப்ரோஸ் 11.04.2015 அன்று மரணித்துப் போனார்.

கேள்விப்பட்ட அனைவரது மனத்தையும் அடியோடு உலுக்கிவிட்டுச் சென்ற இந்த மரணம் Reye’s Syndrome இனால் ஏற்பட்ட மூளை வீக்கத்தால்  ஏற்பட்டுள்ளது என வைத்தியசாலை தகவல்கள் உறுதிசெய்கின்றன.

Reye’s Syndrome எனப்படுவது ஈரல் மற்றும் மூளை ஆகியவற்றை வீக்கத்துக்கு உள்ளாக்கி செயலிழக்கச் செய்வதாகும். உடலில் மூளையும்  ஈரலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புகளாகும். Reye’s Syndrome அதிகமாக சளிக்காய்ச்சல் மற்றும் அம்மை போன்ற வைரஸ் தாக்கங்களில் இருந்து குணமடைந்து வரும் சிறுகுழந்தைகள் மற்றும் பதின்மவயதினரைத் தாக்கும் ஒரு அரிய கூட்டியம் என மருத்துவத் தகவல்கள் வரையறுக்கின்றன. நினைவிழக்கச் செய்தல் அடங்கலான பல குழப்பமான அறிகுறிகளை காட்டும் இந்நிலை ஆரம்ப நிலைகளில் அவசர சிகிச்சைக்கு உட்படாத குழந்தைகளை மரணிக்கச் செய்கிறது.  தவிரவும் அஸ்பிரின் மாத்திரை  குழந்தைகளில் Reye’s Syndrome உருவாக்குவதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன.

இதன் காரணமாக:

· இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எந்தவொரு  நிலைமையிலும் அஸ்பிரின் மாத்திரை கொடுப்பது இலங்கை உட்பட அதிக நாடுகளில் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

· மாத்திரமின்றி, காய்ச்சல் மற்றும் சளிக்காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உடைய 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அஸ்பிரின் கொடுப்பது அனுமதிக்கப்படவில்லை.

· மேலும் வேறு வழியற்ற நிலையில் குழந்தைகளுக்கு அஸ்பிரின் கொடுக்கப்பட வேண்டுமாயின், அதன் சிறுவர்களுக்கான வடிவம் (Paediatric preparation) மாத்திரமே கொடுக்கப்பட வேண்டும் எனினும், இலங்கையில் அது கிடைப்பதில்லை.

அஸ்பிரின் மாத்திரமன்றி எந்தவொரு மருந்தினதும் அல்லது மாத்திரையினதும் பெரியவர்களுக்கான வடிவம் (Adult preparation) குழந்தைகளுக்கு கொடுக்கப்பட முடியாது என்பது மருந்தியல் அடிப்படை விதியாகும்.

பாத்திமா அப்ரோஸ் காய்ச்சல் காரணமாக காத்தான்குடியில் அரச சேவையை விட்டு நீண்டகாலத்துக்கு முதல் விலகி தனியார் வைத்திய நிலையம் மட்டும் நடத்தும் MBBS வைத்தியர் ஒருவரிடம் சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இவருக்கு ஒருநாளைக்கு மூன்று தடவைகள் வீதம் பாதி டிஸ்பிரின் உட்பட நான்கு வகை மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை நான்கும் பெரியவர்கள் பாவிக்கும் மாத்திரைகளே என்பது ஒருபுறம் இருக்க, டிஸ்பிரின் அஸ்பிரினின் கரையக்கூடிய வடிவமாகும். தண்ணீரில் கரையக்கூடிய மாத்திரைகள் வேகமாக உடலினால் அகத்துறிஞ்சப்படும்.

மூன்று நாட்கள் அளவில் இந்த மாத்திரைகள் அனைத்தையும் உட்கொண்ட நிலையில் உணர்விழந்த அப்ரோஸ் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நான்கு நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு பலனின்றி மரணித்தார்.

இதற்குப் பிறகும் குறித்த வைத்தியர் டிஸ்பிரின் வழமையாக நான் குழந்தைகளுக்கு கொடுக்கும் குளிசைதான் என்று சொல்வதாக தெரிகிறது.

இதே வைத்தியர் டிஸ்பிரின் கொடுத்ததன் காரணமாக கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன்னர் ஆறு மாத வயதுடைய குழந்தை ஒன்று உயிரிழந்ததாகவும். இந்தக் குழந்தைக்கு வழங்கப்பட்ட மாத்திரைகள் உட்பட ஆதாரங்கள் அனைத்தும் சுகாதார சேவை அதிகாரிகளிடம் இருப்பதாகவும் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்பட முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அரச சேவையில் உள்ள காத்தான்குடியில் தனியார் கிளினிக் மட்டும் நடத்திவரும் வெளியூர் வைத்தியர் ஒருவர் மாதமொன்றுக்கு  2500 Dexamethasone ஊசிமருந்துகளை இந்தத் தனியார் கிளினிக்குக்காக கொள்வனவு செய்து வருவதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இவர் நாளொன்றுக்கு சராசரியாக 80 நோயாளிகளுக்கு இந்த ஊசிமருந்தை செலுத்துகிறார்.

இதே வைத்தியர் அநேகமான நோயாளிகளுக்கு Prednisolone எனப்படும் மாத்திரையையும் கொடுத்து வருகிறார். Dexamethasone Injection ஒரு செயற்கையாக தொகுக்கப்பட்ட adrenocortical steroid வகையைச் சேர்ந்தது. இது விரைவாக நோய் அறிகுறிகளை குறைப்பது போல தோன்றினாலும் குறுகிய நேர நிவாரணத்தையே கொடுக்கும். ஆனாலும், அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்தவல்லது. அகஞ்சுரக்கும் (ஹோர்மோன்) தொகுதி மற்றும் வாதம் சார்ந்த குறைபாடுகளை ஏற்படுத்துவதிலிருந்து கொலாஜென் நோய், தோல் நோய்கள், ஓப்தலமிக் நோய், குடல், சுவாசம் மற்றும் குருதி சார்ந்த நோய்கள், ஒவ்வமைத் தாக்கங்கள் வரை வேறுபாடும் இதன் பக்கவிளைவுகள் தொடர்ந்த பாவனையின் போது, மூளை வீக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.

மறுபுறம் Prednisolone கூட Steroid வகையை சேர்ந்த ஒரு மாத்திரையாகும். மிகுந்த கவனத்துடன் அன்றி இம்மாத்திரை பாவிக்கப்படக்கூடாது என வைத்திய ஆராய்ச்சிகள் பரிந்துரைக்கின்றன. Dexamethasone போலவே Prednisolone பல பக்கவிளைவுகளை கொண்டது. இணையத்தில் தேடி வாசகர்கள் இவற்றை அறிய முடியும். விரிவஞ்சி அவை இங்கு விபரிக்கப்படவில்லை.

வைத்தியர்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதோ அவர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதோ இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. எனினும், பணம் செலுத்தி அவர்களிடம் வைத்திய சேவைகளை பெறும் நோயாளிகள் அவர்களது உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்ட நிலையில் தவறான மருந்துகள் அவர்கள் மீது திணிக்கப்படும் நிலை அபாயகரமானது.

வேலியே பயிரை மேய்வது போல, மருந்து மாத்திரைகளின் அனைத்து பக்கவிளைவுகளையும் அறிந்த நிலையில் பணப்பிசாசுகளாய் சில வைத்தியர்கள் இவற்றை நோயாளிகளுக்கு கொடுக்கின்றனர். இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரமுள்ள காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியோ – மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரோ காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரியவில்லை.

மேற்குறிப்பிட்டவை தவிர, மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் வைத்திய நிபுணர்களின் தொழில் போட்டியால் நோயாளிகள் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் வதைக்கப்படுவது தொடர்கிறது. பல்வேறு வைத்திய நிபுணர்கள் அரச வைத்தியசாலைகளில் பெறுமதியான மருந்து வகைகளைத் திருடி தனியார் கிளினிக்குகளில் காசுக்கு விற்கின்றனர். பிழையான சத்திரசிகிச்சைகள் செய்யப்பட்டு இரண்டாம் முறை நோயாளிகள் சத்திரசிகிச்சைக்குட்பட்டுள்ளனர். இது போன்ற பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன.

நோயாளிகளின் குறைந்தபட்ச உரிமைகளை உறுதிப்படுத்த பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Ø  வைத்தியர்கள் தனியார் கிளினிக்குகளில் எழுதும் மருந்துச் சீட்டின் பிரதிகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்

Ø  இயன்றளவு மாத்திரைகளின் பெயர் – விபரங்கள் அச்சிட்டு வரும் Hard Pack வகைகளை கொடுக்கவேண்டும் அல்லது கொடுக்கும் மாத்திரைகளின் பெயர் DOSE விபரங்கள் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும்

Ø  சரியான பற்றுச்சீட்டு வழங்கப்பட வேண்டும்.

Ø  இவ்வாறான குழந்தைகளுக்கு பாதிப்பூட்டுகின்ற அல்லது கடுமையான பக்கவிளைவுகளைக் கொண்ட மருந்துகளைக் குறிப்பிட்டு அவற்றின் கண்மூடித்தனமான பாவனை கட்டுப்படுத்தப்படவும். அரச சேவையில் இருந்து விலகி தனியார் கிளினிக் மட்டும் நடத்தும் வைத்தியர்கள் மருத்துவத்துறையின் புதிய விடயங்கள் தொடர்பில் அறிவூட்டப்படவும் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

Ø  மேலும் பெரியவர்களுக்கான மருந்து மாத்திரைகள் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுவது முற்றாக தடை செய்யப்பட வேண்டும்.

நோயாளிகளும் வைத்தியர்களை அடையாளம் கண்டு பிரச்சினைக்குரிய வைத்தியர்களிடம் செல்லுவதில் இருந்து தவிர்ந்துகொள்ள வேண்டும்.

சத்திரசிகிச்சைகள் தொடர்பில் வேறொரு துறைசார் வைத்தியரிடம் இரண்டாவது ஆலோசனை பெறுவதில் நோயாளிகள் மிக அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் அரசினால் வழங்கப்படும் இலவச மருத்துவ சேவையை இயன்றளவு பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.

இலங்கையைப் பொறுத்தவரை உயர்தொழில் செய்வோரால் கவலையீனமாக விடப்படும் தவறுகளுக்கு (Professional negligence) சட்ட நடவடிக்கை எடுப்பது கடினமானதாகவே இருக்கிறது.

பிரபல வழக்கறிஞரும் பிரதி சொலிசிட்டர் ஜெனரலாக கடமையாற்றியவருமான றெயின்சி அர்சகுலரத்னவின் மகளுக்கு புகழ்பெற்ற சிறுவர் வைத்திய நிபுணரான பேராசிரியை ப்ரியாணி சொய்சா சிகிச்சையளித்து சரியான நோயை அடையாளம் காணாத காரணத்தால் குழந்தை இறந்துபோனமையை அடுத்து தொடரப்பட்ட வழக்கில், வைத்திய நிபுணர்களின் தொழிற்சங்கங்கள்,  மேலும் பல உயர்மட்ட அழுத்தங்கள் இருந்ததாக அது தொடர்பான தகவல்கள் கூறுகின்றன.

வைத்தியர்கள் எவளவு நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக இருப்பினும் அவர்களது அடிப்படை வைத்தியத் தகைமைகள் மட்டுமே இவ்வாறான வழக்குகளின் போது கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என்ற வாதம் ஒன்று இந்த வழக்கின்போது முன்வைக்கப்பட்டிருந்தது.

தமது சமூக நிலையைச்  (Social status) சுற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ள போலியான பயமூட்டப்பட்ட மதிப்பு வளையம் ஒன்றுக்குள் வசதியாக ஒழிந்துகொண்டு சில வைத்தியர்கள் தான்தோன்றித்தனமாக ஆடுகின்றனர். யாருடைய மரணத்திலும் பணம் உழைக்கும் இழிநிலைப் பிழைப்பை இத்தகைய வைத்தியர்கள் மேற்கொள்கின்றனர். ஒருசில வைத்தியர்களின் தவறுகளால், ஏனைய சரியாக சிகிச்சையளிக்கும் மனச்சாட்சியுள்ள வைத்தியர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகின்றது.

குறைந்தது 35, 000 பேராவது ஊரில் இருக்கும் காத்தான்குடியில் பணம் கொடுத்தாவது இரவில் அவசரமாக வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை பெற ஒரு வைத்தியராவது தயாரில்லை. அதாவது வைத்தியரின் நேர அடிப்படையில் சிகிச்சை பெற நோயாளிகள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

முஸ்லிம்கள் மத்தியில் துன்பங்களை இறைவனின் முன்தீர்மானம் என ஏற்று பொருந்திக் கொள்வதும், நமது அருமையான உயிரே போய்விட்டது இனி யாரைக் குறைசொல்லி என்ன செய்வது எனும் போக்கும் இவ்வாறான கொலைகார வைத்தியர்களுக்கு இன்னும் வசதியாய்ப் போய்விட்டது.

இவ்வாறான கவலையீனங்களுக்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்போதுதான், இவ்வாறான வைத்தியர்கள் ஓரளவாவது கவனமாக இருப்பர் என்பது வெளிப்படை. 

abrose

Published by

Leave a comment