கொழும்பு: ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் காசிம் எம். பியின் சர்வாதிகார நடவடிக்கைகள் குறித்து இக்கட்சியின் பிரமுகர்கள் பலரும் கவலை, அதிருப்தி தெரிவித்து வருகின்றார்கள்.
இவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி போன்ற தோரணையில் நடந்து கொள்கின்றார் என்றும் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தவிர ஏனையோரை இவர் அலட்சியம் செய்கின்றார் என்றும் கூறப்படுகின்றது.
தொகுதி அமைப்பாளர்கள் என்கிற வகையில் ஐ. தே. க அமைச்சர்கள்கூட இவரை நேரில் சந்தித்து பேசுவது என்பது குதிரைக் கொம்பாகவே உள்ளது என்றும் தொலைபேசியில் இரண்டு செக்கன்களுக்கு மேல் பேச வேண்டாம் என்று இவரால் கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டு உள்ளனர் என்றும் ஸ்ரீகொத்தாவில் இருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்விதம் இவரால் பாதிக்கப்பட்ட அல்லது அவமானப்படுத்தப்பட்டு உள்ள அமைப்பாளர்கள் கறுவிக் கொண்டு உள்ளார்கள். நாடாளுமன்ற தேர்தல் பிரகடனப்படுத்தப்படுகின்ற பட்சத்தில் ஒரு தொகையினர் பிரிந்து செல்லவும் கூடும்.
தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் மேலான கவனத்துக்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டு உள்ளது. ஏற்கனவே சித்திரைப் புத்தாண்டு விழாவில் யானைகளை கபீர் காசிம் துன்புறுத்தினார் என்கிற குற்றச்சாட்டும் தலைவருக்கு எடுத்துச் சொல்லப்பட்டு உள்ளது.
கபீர் காசிம் ஐ. நா நிறுவனம் ஒன்றில் மிக முக்கிய பொறுப்பில் உள்ளார். எனவே வேலைப் பளு காரணமாக கட்சிப் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்கின்றார் என்று அறிவித்து கௌரவமாக விலகிக் கொள்ளலாம் என்று பெரும்பான்மை இனத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் எமக்கு தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் வரலாற்றில் முஸ்லிம் ஒருவராக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கின்றமை இதுவே முதல் தடவை, இதற்காக இவருக்கு எதிரான நிலைப்பாடு முஸ்லிம் விரோத நடவடிக்கையாக பார்க்கப்படவே கூடாது. முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் போன்றவர்கள் பொதுச் செயலாளராக நியமனம் பெறுகின்றமையை ஆட்சேபிக்க மாட்டார்கள் என்றும் இந்த அமைச்சர் கூறினார்.
Published by

Leave a comment