சாராய போத்தலுக்கும் சாப்பாட்டு பார்சலுக்கும்

MayDayCartoon%20lg[1]மதியன்பன்

கொடிகள் பறக்கிறது
ஆங்காங்கு
கூட்டமும் நிறைந்திருக்கிறது
அணிவகுப்பும்
அர்த்தம் தெரியாத கோசங்களும்
ஊர்வலங்களும்
உணர்வு பூர்வமாய் தெரிகிறது.

மேடைப் பேச்சுக்கள்
கோடை இடியாய்
மின்னல் மழையாய்
முழங்கி பெய்து முடிகிறது.

ஊடகங்களும்
உரைகளை உள்வாங்கிக் கொள்கிறது
தலைவர்களின்
பெஜ்ரோக்களும்
பாத்பைன்டர்களும் பறக்கிறது
பகல் உணவுக்கு…

இரவெல்லாம்
கொடிகளும், தோரணமும்
கூடுகளும் கட்டி
கண்வழித்தவர்கள்
தொழிலுக்குப் போகாமல்
லீவு போட்டு
ஊர்வலம் போனவர்கள்
சாராய போத்தலுக்கும்
சாப்பாட்டு பார்சலுக்கும்
சோரம் போனவர்கள்
இப்படி
அக்கரையில்லாத
அத்தனை பேரும்
வீட்டுக்கு விரைகிறார்கள்

அம்மாவும்
அவர்களை நம்பியிருக்கும்
அத்தனை ஜீவன்களும்
உணவில்லாமல்
உட்காந்திருக்கிறது
இந்த
உழைப்பாளர் தினத்தில்..

அடுத்த மேதினத்திற்கும்
சில அடிமைகள்
சிக்கத்தான் போகிறார்கள்..
இதே ஊர்வலமும் பேச்சுக்களும்
இடமாறியேனும்
நடக்கத்தான் போகிறது.

Published by

Leave a comment