19வது திருத்தம்: கோத்தாவின் அரசியல் கனவில் சிக்கல்

gotaகொழும்பு: பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டுள்ள 19வது திருத்தச்சட்டத்தின் மூலம், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் அரசியல் எதிர்காலம் சூனியமாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்த அவருக்கு, 19வது திருத்தச்சட்டம், தேர்தலில் போட்டியிட முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட 19வது திருத்தச்சட்டம், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள், சிறிலங்காவில் எந்த தேர்தல்களிலும் போட்டியிடத் தடை விதிக்கின்றது. கோத்தபாய ராஜபக்ச சிறிலங்காவில் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ளவர் என்பதால், அவர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், அரசியல் கட்சியின் ஊடாகவோ அல்லது சுயேட்சையாகவோ போட்டியிட முடியாது.

கோத்தபாய ராஜபக்ச, இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ளவர் என்பதை, இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், அவர் 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் தங்கியிருந்தார். மகிந்த ராஜபக்ச அதிபரானதும், 2005ம் ஆண்டு நாடு திரும்பிய அவர், பாதுகாப்புச் செயலராகப் பொறுப்பேற்றிருந்தார்.

gota

கோத்தபாய ராஜபக்ச அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடலாம் என்று பரவலான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அவரை நாடாளுமன்றத் தேர்தலில் களமிறக்குவதற்கு, சிங்கள- பௌத்த கடும்போக்குவாதக் குழுக்கள் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டிருந்தன.

அண்மையில் இணையத்தளம் ஒன்றுக்கு அளித்திருந்த செவ்வியில் கூட, தான் அரசியலில் ஈடுபடக் கூடும் என்று கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

ஆனால், 19வது திருத்தச் சட்டம் இரட்டைக் குடியுரிமை கொண்ட அவரை, தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட வேண்டுமானால், அவர் அமெரிக்க குடியுரிமையை தியாகம் செய்ய வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Published by

Leave a comment