வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் பிழையான கருத்துக்களை வெளியிட் டுள்ள லங்கா தீப ஊடகத்திற்கு கண்டனம்

Lankadeepa_logo[1]– வன்னிக்குரலான்

வன்னி: வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் இழப்புக்களை கணிப்பீடு செய்யாத சிங்கள ஊடகமான லங்கா தீப,அந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் பிழையான கருத்துக்களை வெளியிட்டுள்ளமை இந்த பத்திரிகையின் நம்பகத்தன்மைக்கு சான்றாகும் என வடக்கு மக்களின் இன ஒற்றுமைக்கான ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 26 ஆம் திகதி லங்கா தீப பத்திரிகையின் 26 ஆம் பக்கத்தில் ஹிரான் பிரியங்கர ஜயசிங்க என்ற ஊடகவியாளரினால் எழுதப்பட்ட பாதுகாப்பற்ற வில்பத்து காடு என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை தொடர்பில் வாசகர்களுக்கு தெளிவினை வழங்கும் வகையில் இதனை வெளியிட நேரிட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறிப்பாக முஸ்லிம்களை இலக்கு வைத்து இந்த செய்தி எழுதப்பட்டுள்ளது என்பது கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதொன்று.அதே போல் இதனை எழுதிய செய்தியாளரைப் பொருத்த வரையில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட புத்தளம் வந்து வாழ்ந்த போது அந்த மக்களுக்கு அந்த மக்களின் பிரதி நிதிகளால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் ஒருவகையான சர்ச்சையினை தோற்றுவித்த ஒருவர் என்பதையும் நாம் இங்கு தேடிப்பார்க்கின்ற போது தெளிவாக புலப்படும் ஒரு விடயமாகும்.

இந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட பிரதேசம் மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கரடிக்குளி,மறிச்சுக்கட்டி என்பனவாகும்.இந்த கிராமங்களில் 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்து முஸ்லிம்கள் வசித்துவந்தார்கள்.1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றினர்.இதன் பின்னர் இந்த பிரதேசங்கள் காடுகளாக மாறின,கட்டிடங்கள் சேதமாக்கப்பட்டன.அதன் பின்னர் ஏற்பட்ட சமாதான சூழலில் முஸ்லிம்கள் மீள்குடியேற வந்த போது இங்கு அவர்கள் கண்டதும்,காடுகளையும்,அடர்ந்த புதர்களையும் அதே போல் இந்த மக்கள் ஏற்கனவே வாழ்ந்த சில பிரதேசங்கள் பாதுகாப்பு தரப்பினரால் சுவீகரி்க்கப்பட்டிருந்தன.

இந்த செய்தியாளர் குறிப்பிட்ட மறிச்சுக்கட்டி கிராமத்தில் உள்ள புத்தளம்-மன்னார் பாதையினை ஊடறுத்து செல்லும் பகுதியில் உள்ள காணிகளுக்கு பாரிய கொன்ங்ரீட் எல்லை கம்பிகள் பாதுகாப்பு தரப்பினரால் போடப்பட்டுள்ள பல நுாறு ஏக்கர் காணிகள்,மறிச்சுக்கட்டி மக்களுக்கு சொந்தமானது இதற்கு மரைக்கார் தீவு என்ற பெயர் பதிவில் உள்ளது.இது இம்மக்களது குடியிறுப்பு என்பதை உறுதிப்படுத்தும் வகையில் காணி உறுதிகளும்,முஸ்லிம்களின் ஜனாஸாக்கல் அடக்கம் செய்யப்பட்ட அடையாளங்களும் இன்று அழியாத சான்றுகளாக உள்ளன.இது தொடர்பில் எதனையும் எழுதாத செய்தியாளர் இந்த பிரதேசத்தின் அமைச்சர் ஒருவர் அதிகாரிகளை அச்சுறுத்தி இந்த காணிகளை பெற்றதாக குறிப்பிடும் விடயம் உண்மைக்கு புறம்பானதும்,இட்டுக்கட்டப்பட்டதொன்றாகும்.

இதன் மூலம் இந்த அமைச்சரின் நற்பெயருக்கு மாசு கற்பிக்கும் ஒரு பணியினை இவர் செய்கின்றார் என்பதை அந்த கட்டுரையினை வாசிக்கின்ற போது புரிகின்றது.

இலங்கையின் காணிச் சட்டத்தின் கீழ் வனபரிபாலன திணைக்களத்துக்கு சொந்தமான காணிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.இந்த காணிகள் பல்வேறு அபிவிருத்தி தேவைகளுக்காக விடுவிக்கப்பட்டும் வந்துள்ளது.இந்த வகையில் இந்த செய்தியாளர் கூறும் காணியும் அரசாங்கத்தின் காணிச் சட்ட திட்டங்களுக்கு அமைவாக சுற்றாடலுக்கு பாதிப்பின்றி மக்கள் வாழக் கூடிய அடிப்படை வசதிகளை இருக்கின்ற காரணத்தினால் உரிய முறையில் ஆராயப்பட்டு சட்ட பூர்வமாக விடுவிக்கப்பட்ட காணி என்பதற்கான ஆதரங்களை அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்,வனபரிபாலன மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் என பலரும் உறுதிப்படுத்திய பின்னரே இந்த காணி துப்பரவு செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கட்டுரையாளர் தமது கடைசி பந்தியில் மன்னார் அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் கேட்ட கேள்விக்கு அவர் பின்வருமாறு பதிலுரைத்துள்ளார் :-

இந்த காடு துப்பரவு செய்யப்படுவது புதிதாக ஆரம்பித்தொன்று அல்ல.இந்த பிரதேசத்தில் 7456 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்வதற்காக இந்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.குடும்பமொன்று வீட்டினை நிர்மாணிக்க ஜந்தரை இலட்சம் ரூபாய்கள் வழங்கப்படுகின்றது.இது இந்திய அரசாங்கத்தினால் நடை முறைப்படுத்தப்படுகின்றது என்றார்.

அதே போன்று கட்டுரையாளர் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.டீ.ரத்னாயக்க அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவர் அளித்த பதிலில் :-

இந்த மீள்குடியேற்றம் செய்யப்படுகின்ற காணி வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமானது அல்ல.இது வனபரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமானது.இது எங்களுக்கு சொந்தமான காணியாக இருந்தால் நாம் யாரையும் அதற்குள் செல்ல அனுமதிக்கமாட்டோம்.கடந்த காலங்களில் அதற்குள் பிரவேசித்த முஸ்லிம்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்தோம்.வில்பத்து வனபகுதியாக இருந்தால் அதற்கு தீ்ங்கு விளைவிக்க இடம் கொடுக்கமாட்டோம்.சட்டத்தை நாம் நடைமுறைப்படுத்துவோம் என்றார்.
அதே போல் கட்டுரையாளர் வன பரிபாலன திணைக்களத்தின் பணிப்பளார் நாயகம் எஸ்..ஏ.ஹதுருசிங்கவை தொடர்பு கேட்டதற்கு அவர் வஙழ்கிய பதிலில் :-

இந்த காணி நான் இந்த பதவிக்கு வருவதற்கு முன்னர் இருந்த அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது.யாணைகள் மாறுகின்ற இடத்தில் கட்டிடங்கள் கட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் ஆராய இரு குழுக்களை அனுப்பவுள்ளேன்.நீங்கள் இந்த தகவலை தனக்கு தந்தமைக்கும் நன்றி என்று அவர் கூறியுள்ளார்.

கட்டுரையாளர் ஹிரான் பிரியங்கர ஜயசிங்க லங்கா தீப பத்திரிகையில் எழுதியுள்ள இந்த கட்டுரைக்கும் அதிகாரிகள் வழங்கியுள்ள பதிலுக்கும் இடையில் எந்த தொடர்பும் ஆதாரப் பூர்வமாக குறிப்பிடப்பிடவுமில்லை,தமது திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் அந்த பிரதேச அமைச்சரினால் அச்சுறுத்தப்பட்டார்கள் என்று எந்த இடத்திலும் அவர்கள் கூறவில்லை என்பதை வாசகர்கள் தெளிவாக நோக்க வேண்டும்.

எனவே இவற்றை வைத்து நோக்குகின்ற போது,கடந்த காலத்தில் செயற்பட்ட கடும் போக்கு பௌத்த அமைப்பின் மற்றுமொரு முயற்சியாக இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது என்பதையும்,மக்கள் நேயத்துடன் செயற்படும் இந்த பிரதேச மக்களினால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர் ஒருவருக்கு எதிராக சோடிக்கப்பட்ட எழுத்துக்கள் தான் இவைகள் என புரிந்து கொள்ள முடிந்ததாக சுட்டிக்காபட்டுவது பொருத்தமாகும் என வடக்கு மக்களின் இன ஒற்றுமைக்கான ஒன்றியம் தெரிவித்துள்ளது.

Published by

Leave a comment