கொழும்பு: நேபாளத்தில் இடம்பெற்றிருக்கும் பூகம்பத்தினால் உயிரிழந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் இலங்கை மக்கள் சார்பிலான ஆழ்ந்த அனுதாபங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அந்நாட்டின் பிரதமர் சுஷில் கொய்ரலாவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பிரதமர் விக்ரமசிங்க தனது அனுதாபத்தை அந்நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதமர் விக்கிரமசிங்க இலங்கையிலுள்ள நேபாளத்துக்கான தூதுவர் ராம் பரன் யாதவ்வுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த சோகத்தை தெரிவித்துக் கொண்டதுடன், நேபாளத்தின் தற்போதைய நிலைமை மற்றும் தேவைகள் குறித்தும் விரிவாக ஆராய்ந்தார்.
நேபாளம் அரசு எதிர்நோக்கியுள்ள தூரதிஷ்டவசமான நிலைமையில் இலங்கை அரசு நேபாளத்துடன் இருப்பதாக சுட்டிக்காட்டிய பிரதமர் தேவையான அனைத்து உதவிகளையும் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார்.
கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் தொடர்ந்தும் அங்கு உயிருக்கு போராடி வருவதனால் நேபாளத்தில் மருத்துவர்கள், தாதி மற்றும் மருத்துவ உதவியாளர்களின் தேவை அதிகரித்துள்ளது.
நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டாற்ற விரும்பும் மருத்துவர்கள் மற்றும் தாதியர் பிரதமர் அலுவலகத்தின் விசேட தொலைபேசி இலக்கமான 0712492484 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
Published by
![RanilWickramasinghe[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/ranilwickramasinghe1.jpg?w=109&h=150)
Leave a comment