காத்தான்குடி: காத்தான்குடி மீடியா போரத்தின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள இளம் ஊடகவியலாளர் டீன் பைரூஸ், ஆளுமைமிக்க ஒரு இளம் தலைவராக செயற்பட்டு அங்கத்தவர்களை அரவணைத்துச் செயற்படுவார் என்ற நம்பிக்கையோடு அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சியடைவதாக கிக்கு ஊடக சங்கத்தின் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் பங்குபணிகளில் கூடியளவிலான செயற்பாடுகள் அரசியல்வாதிகளைத் துதிபாடுவதாக அன்றி, நாட்டின் வரியிறுப்பாளர்களான பொதுமக்களின் நலன் கருதியதாகவும், தேசத்தின் நன்மை கருதியதாகவும் இருக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் தனது வாழ்த்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதுடன் மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஊடகம் என்பது இஸ்லாத்தின் பார்வையில் மக்களுக்கான தூதுத்துவமாகும். இறைமறையான அல்குர்ஆனும், நபிமொழித் தொகுப்புக்களும், திருக்குறள், பகவத்கீதை போன்ற ஆன்றோர் வாக்குப் பதிவுகளும் மக்களை நேர்வழியிலும், நல்வழியிலும் இட்டுச் செல்வதற்காக அருளப்பெற்ற ஊடகங்களேயாகும். எனவே, ஊடகம் என்பதன் தாற்பரியங்களை நன்கு புரிந்து கொண்டவராக காத்தான்குடி மீடியா போரத்தின் புதிய தலைவரான நீங்கள் செயற்படுவீர்கள் என பெரிதும் எதிர்பார்க்கின்றேன்.
புதிய நிர்வாகத் தெரிவின்போது முன்னாள் தலைவர் குறிப்பிட்ட சில கருத்துக்கள், அவர் ஒரு மார்க்க அறிஞராக இருந்தும் ஊடகம் பற்றிய அவரது கருத்து மதிப்பீட்டின் குறைபாட்டை அம்பலமாக்கியுள்ளன. ‘அடுத்தவர்களின் குறைகளைத் துருவித்துருவி ஆராய்ந்து அம்பலப்படுத்தி அதில் ஊடகவியலாளன் குளிர்காய்வதென்பது ஊடக தர்மம் அல்ல’ என அவர் குறிப்பிட்டிருப்பதானது, நாட்டு மக்களைச் சுரண்டி, ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு, தாய்நாட்டை வங்குரோத்துக்கு இட்டுச் செல்லும் அரசியல்வாதிகளையும், சமூகப் பொறுப்புவாய்ந்த தலைமைத்துவங்களின் சர்வாதிகாரப் போக்குகளையும் ஊடகவியலாளர்கள் கண்டு கொள்ளக்கூடாது என்ற கருத்தையே அடுத்த ஊடக சந்ததிக்கும் ஊட்டுவதாக அமைந்துள்ளது.
இஸ்லாம் ‘சமநிலைச் சமூகம்’ என தன்னைப் பிரகடனப்படுத்தியுள்ளது. அந்த மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற முஸ்லிம்களும் ‘சமநிலைச் சமூகவாதி’களாகவே இருக்க வேண்டியது அவசியமாகும். இங்கே ‘சமநிலைச் சமூகம்’ என்பது, நல்லவர்கள், தீயவர்கள் என இருவேறுபட்ட பிரிவினர்களுடன் நாமும் சமநிலையாக, நடுநிலையாக இருக்க வேண்டும் என்பதல்ல. சத்தியத்துடனும், அசத்தியத்துடனும் எவ்வாறு ஒரே நேரத்தில் நாம் ஒன்றித்து இருப்பது? என்பது பற்றி முன்னாள் தலைவர் உட்பட புதிய நிர்வாகத்திலுள்ள நீங்கள் அனைவரும் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.
‘நடுநிலை’ என்பதற்கு, நிறுவைக்குப் பயன்படுத்தப்படும் தராசின் முள்ளில் மாத்திரமே நாம் முக்கியத்துவம் கொடுக்கலாம். அது நடுநிலையாக இருப்பதன் மூலம் இரு பக்க நிறைகளும் சமாந்திரம் என்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்வதுடன், அது சரியாக நீதியை வெளிப்படுத்தியுள்ளது என்பதையும் நாம் நம்ப வேண்டும்.
இதுவே ‘நடுநிலைச் சமூகம்’ என்று முஸ்லிம்களைப் பார்த்து இறைமறை கூறியிருப்பதன் யதார்த்தமாகும். முஸ்லிம்களான நாம் இவ்வுலகில் நீதியை நிலைநிறுத்துவோராகவும், அநீதி அக்கிரமங்களைக் கண்டித்து எதிர்ப்பவர்களாகவும் வாழ வேண்டும். இந்த அடிப்படையில் ‘அடுத்தவர்களின் குறைகளைத் துருவித்துருவி ஆராய்ந்து அம்பலப்படுத்தி அதில் ஊடகவியலாளர்கள் குளிர்காய்பவர்களாக இருக்கக்கூடாது. அப்படிச் செயற்படுவது ஊடக தர்மம் அல்ல’ என்றால் எவ்வாறு சமூக நீதியை ஊடகவியலாளர்களால் நிறைவேற்றவும், நிலைநிறுத்தவும் முடியும்?
தங்களது ஊழல்கள், மோசடிகள், அநியாயங்கள் என்பன அம்பலமாகுவதை பொதுவாக எவருமே விரும்ப மாட்டார்கள்தான். அதற்காக ஊடகவியலாளர்கள் எனும் சமூகப் பொறுப்புடைய செயற்பாட்டாளர்களும் சமூக அநீதிகளையும், ஊழல் மோசடிகளையும் கண்டு கொள்ளாமல் வாளாவிருக்க வேண்டும் என உபதேசிப்பது எந்த வகையில் நியாயமாகும்?
ஒரு சமூகத்தின் பொதுப்பணிப்பணிகள் எவற்றிலும் ஈடுபடாத சாதாரண ஒரு மனிதனின் குற்றங் குறைகளை ஊடகவியலாளர்கள் மாத்திரமன்றி எந்தவொரு நபருமே தேடித் திரிந்து, துருவி ஆராய்ந்து அம்பலப்படுத்துவது என்பது கூடாதுதான். ஆதை நாமும் முற்றாக ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் சமூகப்பணிகளில் பொறுப்பேற்றிருக்கின்ற இந்த நாட்டின் ஜனாதிபதியாகட்டும், அமைச்சர்களாகட்டும், அரசாங்க அதிகாரிகளாகட்டும், சமய, சமூகத் தலைமைகளாகட்டும்.. இத்தகையோர் புரிகின்ற ஊழல்கள், மோசடிகள், அநீதி அக்கிரமங்களை ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் வெளிப்படுத்தாவிட்டால் பின்னர் யார்தான் இவற்றை வெளிப்படுத்துவது? நீதி கேட்பது? இவ்வாறான குற்றச்செயல்களை மேலெழுந்தவாரியாக, ஆதாரங்கள் எதுவுமில்லாமல் ஒரு ஊடகவியலாளனால் அம்பலப்படுத்த முடியுமா? அவ்வாறு அவர் ஆதாரங்கள் தேடுவதை துருவித்துருவி ஆராய்வதாகக் குற்றஞ் சாட்ட முடியுமா?
முன்னாள் தலைவர் கூட சமூக சேவைத் திணைக்களத்தினால் வழிநடாத்தப்படும் காத்தான்குடி ஸாஹிரா வலது குறைந்தோர் நிலையத்தில் ஒரு நிர்வாகியாக இருந்து செயற்பட்டார். வலது குறைந்த உள்ளுர் வெளியூர் மாணவர்களைப் பராமரிக்கும் அந்த நிலையத்திற்காக கொழும்பிலுள்ள தனவந்தர் ஒருவர் கையளித்த பெருந்தொகை நிதியைக் கொண்டு அவரே ஒரு கட்டிடத்தையும் கட்டியிருந்தார். பல ஆண்டுகளாகியும் இன்னமும் அக்கட்டிடம் கட்டியதற்கான வரவு செலவுக் கணக்கறிக்கையை அவர் கையளிக்கவில்லை என அந்நிலையத்தின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார். இதனை வெளிப்படுத்தும் ஊடகத்தை, ஊடகவியலாளனைப் பார்த்து ‘அடுத்தவரின் குறைகளை துருவித்துருவி ஆராய்ந்து அம்பலப்படுத்தி அதில் ஊடகவியலாளன் குளிர்காய்வது ஊடக தர்மம் அல்ல’ என்றால், பின் எதுதான் ஊடக தர்மமாக இருக்க முடியும்? ஊடக தர்மம், ஊடக நாகரீகம் எனும் சொற்பதங்களுக்குள் ஊழல்வாதிகள் மறைந்து கொள்வதென்பதுதான் அவரது பார்வையில் ஊடக தர்மமா?
எனவே, புதிய தலைவர் டீன் பைரூஸ் இளமையானவர். செயல் வேகம் கொண்டவர். அவருக்குக்கூட முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் பரிந்துரையில் வடிகால் நீர்வழங்கல் அதிகார சபையில் அண்மையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும் அவர் பிரதேச மக்களின் நலனில் அக்கறை கொண்டவராக வருங்காலத்தில் செயற்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்ட தலைமைத்துவப் பொறுப்பை சரியாக வழிநடாத்திச் செயற்படுவார் என்ற நம்பிக்கையுடன் அவரை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a comment