– டாக்டர்; I.L. முஹம்மத் றிபாஸ்
காத்தான்குடி: மருத்துவத் துறை உன்னதமானது அந்த சேவையினை மக்களுக்கு வழங்குகின்ற மருத்துவர்களும் சமுகத்தால் உயர்வாக மதிக்கப் படுகின்றனர். இது காலாதிகாலமாக நிகழ்கிறது. மனிதர்களின் வலியை, வேதனையை, பயத்தை, சோகத்தை சந்தேகங்களை போக்குவதற்கான ஒரு வாய்ப்பை மருத்துவர்கள் பெறுகின்றனர். இவ்வாறு மனிதத்தின் விரும்பப் படாத பக்கத்தினை இவர்கள் கையாள்கின்றனர்.
நோய் ஒன்றின் தாக்கத்தில் உழலும் ஒரு மனிதன் மருத்துவன் என்பவனை தனது துன்பங்களைத் துடைத்தெறிய வந்த இறை அருளாகவே நோக்குகிறான். அவ்வாறே நம்புகிறான். இந்த அடிப்படையில்தான் மருத்துவர்கள் வெறும் மாத்திரைகளை வழங்கும் விநியோகிப்பாளர்களாக அன்றி அதற்கும் மேலாக தமக்கு நெருக்கமான உறவாக மனிதர்களால் நம்பப்படுகின்றனர்.
இந்த உன்னத சேவையினை வழங்கும் வைத்திய பெருந்தகைகள் தமது வைத்திய சேவைகளை தமது ஆளுகைக்குட்பட்ட தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுடன் தனிநபர்களாகவே செயற்பட்டு வருகின்றனர். இதனால் இந்த துறைசார்ந்தோர் தமக்குள் ஒன்றுபடாமல் செயற்படுவது போல் ஒரு தோற்றப்பாடு இருக்கிறது, இதற்கு மிகவும் வேலைப்பளுவோடு இயங்கும் இவர்களது நாளாந்த நடவடிக்கைகளும் காரணமாக இருக்கின்றன. ஆனால் மருத்துவர்கள் ஒன்றுபட்டு இயங்கத் தொடங்குவது அவர்கள் சார்ந்த சமூகத்திற்கும், அவர்களுக்கும் பலவகையில் நன்மை பயக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
இந்த காரணிகளை மனதிற்கொண்டு காத்தான்குடியை மையாமாகக் கொண்ட “காத்தான்குடி மருத்துவர்கள் அமையம்” எனும் அமைப்பு அண்மையில் உருவாக்கப் பட்டுள்ளது. கடந்த காலங்களில் தொடர்ச்ச்சியாக நிகழ்ந்த சந்திப்புகளின், ஆலோசனைகளின் பெறுபேறாக இந்த அமையம் தோற்றம் பெற்றுள்ளது. ‘இவ்வாறான அமைப்பொன்றின் தேவையும் பங்களிப்பும் நீண்ட காலமாக உணரப்பட்டிருந்தாலும் இதற்கான காத்திரமான முன்னெடுப்புகள் செய்யப் படாததால் இவ்வாறான அமைப்பு உதயமாவதில் தாமதமேற்பட்டது. ஆயினும் பல சிறந்த முன்மாதிரியான இலக்குகளோடும், எமது சமுகத்தின் மருத்துவ விடயங்களில் தலைமைத் துவத்தையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்காகவும் இந்த அமையம் உழைக்கும்’ என இந்த அமைப்பின் முதலாவது செயலாளரும் இவ்வமையத்தை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவருமான டாக்டர்; A.L. அஹமத் ஷியாம் குறிப்பிடுகிறார். இந்த அமையத்திற்கு தலைவராக காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் U.L. நசீர்தீன் அவர்கள் தெரிவு செய்யப் பட்டுள்ளார். பொருளாளராக டாக்டர்; A.L.M சனீஜ் அவர்கள் தெரிவு செய்யப் பட்டுள்ளார். அத்தோடு செயற்பாட்டுக் குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அமையம் எதிர்காலத்தில் கிழக்கு மாகான முஸ்லிம் வைத்தியர்களையும், அதன் பின்னர் தேசிய ரீதியான ஒன்றுபட்ட முஸ்லிம் மருத்துவர்கள் அமையம் ஒன்றையும் உருவாக்குவதில் முன்னின்று செயற்பட முடியும் என்ற நம்பிக்கையும் காத்தான்குடி மருத்துவர்கள் அமையத்திற்கு உள்ளது.
இவ்வமைப்பின் முதல் செயற்பாடாக மருத்துவ பீட மாணவர்களுக்கான கருத்தரங்கும் கலந்துரையாடலும் காத்தான்குடி ஆதார வைத்திய சாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் டாக்டர்; A.L.. அஹமத் ஷியாம் டாக்டர் I.L. முஹம்மத் றிபாஸ் மாற்றும் டாக்டர்; M.S.M. ஜாபிர் என்பவர்கள் வளவாளர்களாக கலந்துகொண்டு உரையாற்றினர்.
அடுத்த பெரும் நிகழ்வாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மருத்துவர்களுக்கான ஒருநாள் செயலமர்வு எதிர்வரும் மே மாதம் 3 ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதில் அதிகமான மருத்துவர்கள் பங்குபற்றுவர் என எதிர் பார்க்கப் படுகிறது. ஜூன் மாதத்தில் உலமாக்களுக்கான ஒருநாள் செயலமர்விரற்கான பூர்வாங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இவை போன்று இன்னும் மருத்துவ மற்றும் சமுக நலன்கள் சார்ந்த பல விடயங்களில் இவ்வமையம் முன்னின்று செயற்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
Published by



Leave a comment