கொழும்பு: வரியிருப்பாளர்களின் ஒவ்வொரு ரூபாயும் அமானிதமாகும், இன மத மொழி பேதமின்றி இறைவரித் திணைக்களத்தினூடாக பொருட்கள் பண்டங்கள் சேவைகளுக்காகவும், மற்றும் இன்னோரன்ன அரச சேவைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் தீர்வைகள் உற்பட சேகரிக்கப்படும் மக்களது வரிப்பணம் சகலதும் அமானிதமாகும்.
அதேபோன்றே பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்காக வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் அபிவிருத்திக் கடனுதவி நிதிகள் ஈற்றில் மக்களாலேயே செலுத்தப்படுகின்றன, அகதிகள் புனர்வாழ்வு,வீடமைப்புத்திட்டங்கள், அனர்த்த நிவாரண உதவிகள் என நாட்டு மக்களுக்காக கிடைக்கப்பெருகின்ற உதவிகள் நிவாரணங்கள் அத்தனையும் அமானிதங்களாகும்.
சட்ட வரம்புகளுக்கு அப்பால் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியல் வாதிகளும் அரச துறையில் உள்ளவர்களும் பெற்றுக்கொள்கின்ற இலஞ்சம் ஊழல் மேலும் நிதி நிர்வாக மோசடிகள் யாவும் ஹராமான கொள்ளையடித்தலாகும்.
இன்று அரசியல் மிகப்பெரிய சூதாட்டமாக ஆகிவிட்டது, தனிப்பட்ட முறையில் தமது சக்கத் ஸ்தக்காக்கள், குடும்ப உறவினர்கள் ஏழை எளியவர்களுக்கான கடப்பாடுகளை கூட நிறைவேற்றாத கஞ்சப்பயல்கள் பல இலட்சங்களை தேர்தலுக்காக செலவு செய்து விட்டு பல மில்லியன்களை அபிவிருத்தி செயற்பாடுகளுக்கென ஒதுக்கப்படுகின்ற நிதிகளில் மோசடி செய்து கேவலமான உழைப்பு நடாத்துகின்றார்கள்.
திறைசேரியில் இருந்து ஒரு தீனாரோ திர்ஹமோ அல்லது ஒரு பிடி தானியமோ த்ததமது தேவைகளுக்காக பெறப்படக்கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்த சஹாபாக்கள், சொந்தத் விவகாரங்கள் பேசப்படும் பொழுது அரச விளக்குகளை அனைத்து விட்ட கலீபாக்கள் பற்றியெல்லாம் பெருமையுடன் பேசிக்கொள்ளும் எமது சமூக அரசியல் பிரதிநிதிகளின் (ஒருசிலர் தவிர்த்து) ஆடம்பரங்கள், சொத்துக் குவிப்புக்கள், கோடிக்கணக்கான பண உழைப்புக்கள் அறிகின்ற பொழுது கியாமத்து நாள் நெருங்க மட்டதா என எண்ணத் தோன்றுகிறது.
சிலர் சட்டத்தில் சிக்கிவிடாது சாமர்த்தியமாகத் திருட இன்னும் சிலர் மூக்கைத் தனமாக திருட மொத்தமாகவும் சில்லறையாகவும் பட்டப்பகல் கொள்ளைகள் இடம் பெறுகின்றன.
அந்த வகையில் இந்த நாட்டில் கொண்டுவரப்படவுள்ள அரசியல் யாப்புத் திருத்தங்களூடாக, குறிப்பாக, நீதி, பொலிஸ், இலஞ்ச ஆணைக்குழுக்கள் பலப்படுத்தப் படுவதன் மூலம் சகல் திருட்டு மன்னர்களும் குட்டி சுல்தான்களும் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படல் வேண்டும் இன்ஷா அல்லாஹ்.
மக்களையும் தேசத்தையும் ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டு அல்லாஹ்வையும் ரஸுலையும் ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டு இந்த பக்காத் திருடர்கள், அலி பாபாக்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள், இவர்கள் சிலவேளை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடலாம் ஆனால் சக்கராத்தின் பிடியில் இருந்தும் மரணத்தின் பிடியில் இருந்தும் தப்பிவிட முடியாது.
நிச்சயமாக இவ்வரானோர் முடிவு கேவலமானதாகவே இருக்கும், அவர்கள் தங்குமிடம் நரமகவே இருக்கும்.!
“அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்;. மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் நெருங்காதீர்கள். ” (ஸுரதுல் பகரா: 188)‘நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள். ஆனால் மறுமை நாளிலோ அதற்காக வருத்தப்படுவீர்கள்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 7148
அல்லாஹ்வின் தூதரே! என்னை நீங்கள் பதவிக்கு நியமிக்க மாட்டீர்களா? என்று நான் கேட்ட போது அவர்கள் தன் கையால் என் தோளைத் தட்டி விட்டு ‘அபூதர்ரே! நீ பலவீனமானவன். ஆனால் பதவி (அதிகாரம்) என்பதோ அமானிதமாக இருக்கிறது. யார் அப்பதவிக்கு வந்து பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றுகிறாரோ அவர் தவிர ஏனையோருக்கு அது இழிவையும் வருத்தத்தையுமே கொடுக்கும்’ எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆபூதர் (ரலி), நூல்: முஸ்லிம் 1825)
‘லஞ்சம் கொடுப்பவர் மீதும் லஞ்சம் வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), ஆதாரம் : இப்னுமாஜா.
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்டார்கள். அப்போது அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரைக் கண்டார்கள். இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக் காரணம் என்ன? என்று அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்க, அவ்விருவரும் ‘பசி’ என்றனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘நீங்கள் எதற்காக வெளியே வந்துள்ளீர்களோ அதற்காகவே நானும் வெளியே வந்துள்ளேன்’ என்றார்கள்…(ஹதீஸ் சுருக்கம்) நூல்: முஸ்லிம் 3799)
‘நபி (ஸல்) அவர்கள் ‘அஸ்த்’ என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் ‘இப்னுல் லுத்பிய்யா’ என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஸக்காத் வசூலித்துக் கொண்டு வந்த போது ‘இது உங்களுக்குரியது, இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு கிடைக்கிறதா இல்லையா? என்றுகூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு கிடைக்கிறதா இல்லையா? என்று பார்க்கட்டுமே! என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக உங்களில் யாரேனும் அந்த ‘ஸகாத்’ பொருளில் இருந்து (முறைகேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தன் பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும், மாடாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும்’ என்று கூறினார்கள். பிறகு, அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி ‘இறைவா! (உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? என்று மூன்று முறை கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) நூல்: புகாரி 2597, 6636, 6679)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலைமைச் செயலகமாக இருந்த பள்ளிவாசலின் மூலையில் ஸகாத் எனும் பொது நிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்கள் குவிந்து கிடந்தன. ஒரு முறை நபிகள் நாயகத்தின் பேரன் ஒருவர் அவற்றிலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டு விட்டார். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்து விட்டார்கள். உடனே விரைந்து வந்து ‘துப்பு துப்பு’ என்று தமது பேரனிடம் கூறி, துப்பச் செய்தார்கள். (நூல்: புகாரி 1485, 1491, 3072)
ஒரு முறை யுத்தக் கைதிகள் பலர் பிடிபட்டிருந்தனர். அப்போது வீட்டு வேலைகள் செய்து கையில் தழும்புகளும் ஆடைகள் அழுக்கடைந்து முகம் வாடி வதங்கிய நிலையிலும் காணப்பட்ட தன்னுடைய மனைவி பாத்திமா (ரலி) அவர்களைப் பரிதாபக் கண்கொண்டு பார்த்த அலி (ரலி) அவர்கள், உன் தந்தையிடம் சென்று உனக்கொரு பணியாளைக் கேட்கலாமே! உனக்கு அது உதவியாக இருக்குமே! என வேண்ட, பெருத்த எதிர்பார்ப்புக்களுடன் தந்தையின் இல்லம் விரைகிறார்கள் பாத்திமா (ரலி) அவர்கள். அங்கு சென்று தந்தையிடம் பணியாள் கேட்ட போது நபி ஸல் அவர்கள், ‘அஹ்லுஸ் ஸுப்பா (திண்ணைத் தோழர்கள்) பட்டினியில் படுத்திருக்க உங்களுக்குப் பணியாளைத் தர என்னால் முடியாது. ஆயினும் பணியாளளை விட சிறந்த ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? எனக் கேட்டு விட்டு, உறங்கும் முன்னர் சுப்ஹானல்லாஹ் 33, அல்ஹம்துலில்லாஹ் 33, அல்லாஹு அக்பர் 34 விடுத்தம் கூறுமாறு கற்றுக் கொடுத்தார்கள். இதனை அன்னையவர்களும் திருப்தியாக ஏற்றுக் கொண்டார்கள். (பார்க்க: பத்ஹுல் பாரி 6318
Published by

Leave a comment