இலங்கையில் வளர்ந்து வரும் மக்தப் பாடத்திட்டம்

quran11[1]Ash-Sheikh Irshad Moomeen

கொழும்பு: இலங்கை முஸ்லிம்களின் வரலாறு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் குர்ஆனை ஓதுவதற்கு கற்பிக்கும் ‘குர்ஆன் மத்ரஸாக்கள்’ தோற்றம்பெற்று விட்டன. இதனை மறுசீரமைக்கும் பணியை ‘அல்-மக்தப்’ செயற்றிட்டத்தின் ஊடாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மேற்கொண்டுள்ளது.

சுமார் 20 இலட்சம் இலங்கை முஸ்லிம் சனத்தொகையில் 10,000 ஆலிம்கள் உள்ளனர். இது மொத்த சனத்தொகையில் 5 வீதமாகும். மீதி 95 வீதமானோர் குர்ஆனை முறைப்படி ஓதுதல், அன்றாட இஸ்லாமிய நடைமுறைகள் மற்றும் நம்பிக்கைக் கோட்பாடு சார்ந்த ஆரம்ப அறிவை வழங்கும் கல்வி நிலையங்களாக குர்ஆன் மத்ரஸாக்கள் செயல்படுகின்றன.

தற்போது நடைமுறையிலுள்ள குர்ஆன் மத்ரஸாக்களில் பயிலும் ஒரு மாணவர் ஐந்து வருடங்களாக குர்ஆன் ஓதப் பயிலுகின்றார் எனக் கணித்தால் சுமார் 2000 – 2500 மணித்தியாலங்கள் குர்ஆன் மத்ரஸாவில் செலவளிக்கின்றார். இத்தனை காலத்தை செலவளிக்கும் ஒருவரின் விளைப்பயன் (Productivity) குர்ஆனை வாசிக்க மட்டும் கற்றுக்கொண்டதாகும். இன்றைய காலத்தில் பல்வேறு மொழிகளை கற்பிக்கும் கற்கைநெறிகள் உள்ளன. தரம்வாய்ந்த டிப்ளோமா கற்கைகள் கூட 200 – 250 கற்கை மணித்தியால (academy hours) களை மிஞ்சுவதில்லை. கற்கையின் முடிவில் குறித்த மொழியில் பேச, எழுத, வாசிக்கவும் பயிலுனர்கள் கற்றுக்கொள்கின்றனர்.

எனவே, குர்ஆனை ஓத/வாசிக்க கற்பிக்கும் சம்பிரதாய குர்ஆன் மத்ரஸாக்களின் தரவுறுதி (Standard and Quality) மேம்படுத்தப்பட வேண்டும் என்பதை அ.இ.ஜ.உ. தீர்மானித்தது. அ.இ.ஜ.உ. வினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, சம்பிரதாய குர்ஆன் மத்ரஸாக்களில் காணப்படும் நான்கு பிரதான பலவீனங்கள் கண்டறியப்பட்டன. அவையாவன:

1. ஒருங்கமைக்கப்பட்ட பாடத்திட்டம் (Syllabus) இன்மை.
2. கூட்டுக் கல்விமுறையின்மை
3. ஆசிரியர் பயிற்சியின்மை.
4. நிர்வாக ஒழுங்கின்மை.

ஒருங்கமைக்கப்பட்ட பாடத்திட்டம்:

இனங்காணப்பட்ட பலவீனங்களை நிவர்த்தி செய்யும் நோக்கில் ‘அல்-மக்தப்’ பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஜந்து வருட கலைத் திட்டமாகும். இத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் இன்று வரை ‘அல்-மக்தப்’ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும், மாணவர்களின் பெறுபேறு எதிர்பார்த்ததை விட சிறந்ததாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கூட்டுக் கல்விமுறை:

அரசாங்க பாடசாலைகளில் ஒரு வகுப்பில் சுமார் 20 – 40 வரை மாணவர்கள் இருப்பார்கள். அனைவருக்கும் குறித்த பாடம் ஒரே நேரத்தில் கற்பிக்கப்படும். தேவையாகும் போது மட்டும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும். எனினும் சம்பிரதாய மத்ரஸாக்களில் ஒவ்வொரு மாணவராக அழைத்து ஓதக் கற்பிக்கப்படுகின்றது. இதனால் அதிகமான நேரம் விரயமாவதுடன், மாணவரின் கவனக்குவிப்பும் சிதறுகின்றது.

பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள்:

மக்தப் பாடங்களை நடத்த விரும்பும் உலமாக்களுக்கு 7 நாட்கள் கட்டாயப் பயிற்சி வழங்கப்படுகிறது அதில் கற்பித்தல் முறை சிறுவர் உளவியல் போன்ற முக்கியமான பாடங்கள் நடத்தப்படுவதுடன் இப்பயிற்சியினை முடித்தவர்கள் மாத்திரமே வகுப்புக்கள் நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.

நிர்வாக ஒழுங்கு:

மஸ்ஜித்களிளோ அல்லது தனியார் இடங்களிலோ நடத்தப்படும் மக்தப்களுக்கு தனியாக நிர்வாகம் அமைக்கப்பட்டு அந்நிர்வாகம் தமது பகுதிகளில் நடைபெறும் மக்தப்களின் வளர்ச்சிக்காக முழுமூச்சாக உளைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஒரு மஸ்ஜிதில் நான்குக்கு மேற்பட்ட வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டதும் அதற்கு தனியாக அதிபர் நியமிக்கப்படுவதும் மக்தப் நடைபெறும் 25 நிலையங்களை கண்காணித்து தலைமையகத்துக்கு அறிக்கைகள் சமர்பிக்க ஒரு கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டிருப்பதும் இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

இன்ஷா அல்லாஹ், இலங்கையில் அமைந்துள்ள சுமார் 2500 பள்ளிவாசல்களிலும் ‘அல்-மக்தப்’ பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதின் ஊடாக ‘தக்வா’வும் ‘தர்பிய்யா’வும் உள்ள எதிர்கால சந்ததியினரை உருவாக்குவது அ.இ.ஜ.உ.வின் தூர நோக்கு ஆகும்.

Published by

Leave a comment