காத்தான்குடி: நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசுபொருளாகியுள்ள காத்தான்குடி பூர்வீக நூதனசாலை பற்றியும், அங்கு வைக்கப்பட்டுள்ள சிலைகள் தொடர்பான கருத்துக்கள் பற்றியும் சிந்திக்கின்றபோது இவ்விடத்தில் இளைய சமூகத்தினரின் உள்ளக்கிடக்கைச் சுட்டிக்காட்டுதல் பொருத்தமாக இருக்கும் என்ற நோக்கில் இந்த ஆக்கம் வரையப்படுகின்றதே தவிர, தனிப்பட்ட முறையில் யாருடைய மனதையும் புண்படுத்தலுக்கோ, சுய இலாபங்களுக்கோ அல்ல என்பதனை ஆரம்பத்திலேயே வலியுறுத்திக் கூறிக் கொள்கின்றேன்.
ஏகத்துவத்தை நிலைநாட்டுவதே எமது பணி என்பதனால், உருவமைக்கப்பட்ட சிலைகள் இஸ்லாமிய மார்க்கத்திற்கு முற்றிலும் முரணானது என ஒரு தரப்பார் தம்மால் முடிந்தளவு தம்பக்க வாதத்தை நியாயப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இல்லையில்லை.. இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைப் பாதுகாக்கவே நாங்கள் இந்த முயற்சியில் ஈடுபடுகின்றோமே தவிர, வணங்குவதற்காகவோ, கண்ணியப்படுத்துவதற்காகவோ, ஞாபகச் சின்னங்களாகவோ அவற்றைக் காட்சிப்படுத்தவில்லை என இனனொரு தரப்பார் தமது செயற்பாட்டிற்கு நியாயம் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
விழுங்கவும் முடியாமல் வெளியே துப்பவும் முடியாமல் இழுபறி நிலையில் இருக்கும் இவ்விடயத்திற்கு, முஸ்லிம் சமூகத்தின் தலைமைகள் எனக் கூறப்படும் உலமாக்கள் தங்கள் நிலைப்பாட்டைத் தைரியமாக முன்வைக்கத் தவறி காலம் கடந்து தங்கள் பத்வா – மார்க்கத் தீர்ப்புக்களை வெளியிட்டுள்ளனர்.
இவ்விடத்தில நான் பேச விளைவது, நூதனசாலை மற்றும் சிலைகள் தொடர்பான மார்க்க நிலைப்பாடு பற்றியல்ல. இரு தரப்பாரும் தமக்குத் தேவையான வகையில் அதையே இன்று வரை அலசிக் கொண்டிருப்பதனால் நான் அதை விட்டும் ஒதுங்கி நிற்பதுடன், என்னுள் எழுகின்ற, எனது சிற்றறிவுக்குட்பட்ட சில விடயங்களை இந்த சமூகத்தின் ஒரு இளம் பிரஜையாக இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.
இந்த நூதனசாலையை அமைத்து, அதன் தூரநோக்காக இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக வரலாற்றைப் பேணிப் பாதுகாத்தல் எனப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் தரப்பினரை இந்த ஆக்கத் தொடரில் முதலில் விளித்தெழுத விளைகின்கிறேன்.
உண்மையில் உங்களின் இம்முயற்சியானது, இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக வரலாற்றைப் பேணிப் பாதுகாத்தல் என்ற தூய நோக்கோடுதான் அமையப்பெற்றது, தனிப்பட்ட வகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சுயநலன்கள் ஏதும் இதிலில்லை எனின் உங்களின் இம்முயற்சியை நானும் மனப்பூர்வமாக வரவேற்கின்றேன்.
ஏனெனில் ‘வரலாறுகளைப் பேணிப் பாதுகாக்காத சமூகம், வெற்றி கண்ட சமூகமாக இருக்க முடியாது’ என்ற கருத்துடன் ஒன்றித்தவள் நான். நீங்கள் இலங்கை முஸ்லிம்களின் வியாபார ஒழுங்கு, திருமண ஒழுங்கு, அரசியல் ஒழுங்கு, கலாச்சாரம், பண்பாட்டு முறைகளை இந்த நூதனசாலையில் ஆவணப்படுத்துவதன் ஊடாக, இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக வரலாற்றை நிறுவும் நோக்குடன் இம்முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும்கூட, அதற்கு முன்னதாக நீங்கள் இலங்கை முஸ்லிம்களுக்கும், குறிப்பாக இந்நூதனசாலை அமைந்துள்ள தலமான காத்தான்குடி முஸ்லிம்களுக்குமாகத் தெளிவுபடுத்தப்பட வேண்டிய பல விடயங்கள் கிடப்பில் கிடக்கின்றன.
வரலாற்றைப் பாதுகாகத்தல் அல்லது புனர்நிர்மாணித்தல் என்பதன் அடிப்படை அம்சங்களில் இவ்வூரிலும், இந்நாட்டிலும் பல தவறுகளை கடந்த காலங்களில் நீங்கள் செய்திருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களினதும், செயற்பாடுகளினதும் ஆவணப்படுத்தலே வரலாறாகின்றது. எந்தவொரு சமூகம் அதிகளவு கருத்துக்களினதும், செயற்பாடுகளினதும் ஆவணப்படுத்தலை தன்னகத்தே கொண்டிருக்கின்றதோ அந்த சமூகமே வெற்றியடைந்த சமூகமாக மாறுகிறது.
புதைந்துபோன, மருவிச் செல்கின்ற வரலாறுகள் அந்தந்த இடங்களிலும் சூழலிலுமாக சில பல புனருத்தாரணங்களால் சீர்செய்யப்பட்டு பாதுகாக்கப்படுவதே வரலாற்றுப் புனருத்தாரணத்தின் அடிப்படையாகின்றது. அதன் மூலமாகவே ஒரு சமூகத்தின் வரலாறு தடம் புரளாமலும், தலை பிரளாமலும் பாதுகாக்கப்பட்டு நிலைத்து நிற்கின்றது.
ஆனால் இந்தக் காத்தான்குடி உள்ளடங்கிய மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மாத்திரமன்றி முழு இலங்கை நாட்டிலும் வாழக்கூடிய ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்குமே ஒரு மக்கள் பிரதிநிதியாக இன்று செயற்பட்டு வருகின்ற நீங்கள், இந்த வரலாற்றைப் பாதுகாத்தல் என்ற தேவைப்பாடு அதிமுக்கிய தேவையாக உணரப்பட்ட இற்றைக்கு முன்னதாக எத்தகைய செயற்பாடுகளை இவ்விடயத்தில் மேற்கொண்டு வநதுள்ளீர்கள் என்பது இவ்விடத்தில் வினவப்பட வேண்டியதாகும்.
பல்லின மக்களையும், பல்சமய கலாசார ஒழுங்குகளையும் கொண்ட இந்நாட்டில் எமது முஸ்லிம் சமூகத்தின் பூர்வீகம் பற்றியும், கலாசார விழுமிய வரலாற்றுத் தடயங்கள் பற்றியும் இதுவரை முறையான ஆய்வுகளையும், ஆவணப்படுத்தல்களையும் மக்கள் பிரதிநிதிகள் எனப்டுவோர் ஆக்கபூர்வமாக மேற்கொண்டனரா எனவும், அது தங்களுடைய தலையாய பணி என்பதையாவது குறைந்தபட்சம் அவர்கள் உணர்ந்திருந்தனரா என்றும் நோக்கும்போது, ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் எமதூரில் நீங்கள் மேற்கொண்டிருக்கும் செயற்பாடுகளே ஏனைய பிரதிநிதிகள் பற்றிய எமது வினாவுக்கும் விடையாகக் கிடைக்கிறது.
கடந்த கால்நூற்றாண்டு கால உங்களின் அரசியல் வாழ்க்கை வரலாற்றில் ஒரு மக்கள் பிரதிநிதியாக இம்மட்டக்களப்பு மாவட்டத்திலும், ஒரு மாகாண அமைச்சராக இக்கிழக்கு மாகாணத்திலும், ஒரு பிரதியமைச்சராக முழு இலங்கை நாட்டிலும் நீங்கள் பல அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்திருக்கின்றபோது, ‘இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக வரலாற்றைப் பாதுகாத்தல்’ எனும் உங்களின் இன்றைய இலக்குடன் எவ்வளவு தூரம் நீங்கள் விழிப்பாய் இருந்து செயற்பட்டீர்கள் என்பதை நமது சமூகத்திற்கு எடுத்துரைக்க முடியுமா?
இந்த ஊரில் இந்நாட்களில் பள்ளிவாயல்களின் எண்ணிக்கை பல்கிப்பெருகியுள்ளது. ஓவ்வொரு வீதியிலும் ஒவ்வொரு இயக்கங்களுக்கும் என தனித்தனியே பள்ளிவாயல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன, ஒரே வீதியிலேயே அடுத்தடுத்து பல பள்ளிவாயல்கள் இருப்பதைக் காண்கிறோம். இவ்வாறு நிர்மானிக்கப்படும் பள்ளிவாசல்களுக்கு, அறபு நாட்டு ஷெய்குமார்களின் நிதியுதவியால் நிர்மானிக்கப்படும் பள்ளிவாசல் என்ற வரலாறுதான இருக்கிறதே தவிர, இலங்கை முஸ்லிம்களின் இருப்புக்கான, பூர்வீக வரலாற்றுத் தொடர்புக்கான வரலாறுகள் என எதுவும் இல்லை.
ஆனால் இவ்வூரில் அந்நாட்களில் நிறுவப்பட்ட பள்ளிவாயல்கள், தக்கியாக்கள், ஸாவியாக்கள், மத்ரஸாக்கள் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் நமது முன்னோர்களின் ஒரு நீண்ட பூர்வீக வரலாறு இருந்திருக்கின்றது.
மௌலானா கபுறடி
பல தசாப்தங்களுக்கு முன்னால் அது ஓலைக் குடிசையாக நிறுவப்பட்டதில் இருந்து யாரால், எந்த சூழ்நிலையில், எத்தகைய தேவையின் அடிப்படையில், இப்பிரதேசத்தில் அவை அமையப் பெற்றன என்பது வரை அவற்றுக்கு வரலாறுகள் இருந்திருக்கின்றன. ஆவணப்படுத்தபட வேண்டிய, எமது இருப்பின் அத்திவாரத்தை காட்டக்கூடிய அத்தகைய வரலாற்று ஆதாரங்கள் இன்று மருவித் தொலைந்து போயுள்ளன.
இத்தகைய வரலாற்று ஆதாரங்களை ஆவணப்படுத்தவென பல சகோதரர்கள் பல வகையில் முயற்சிகள் செய்திருக்கலாம். ஆனால் மக்கள் பிரதிநிதியாகிய நீங்கள் ஏன் அதனைத் தங்களுடைய பிரதான பணிகளுள் ஒன்றாகக் கருதி கடந்த காலங்களில் செயற்படவில்லை?
சுமார் 50 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த, புதிய காத்தான்குடிப் பிரதேசத்தின் முதலாவது பள்ளிவாசல் என்ற வரலாற்றையுடைய முஹைதீன் தைக்கா பள்ளிவாயலின் வரலாற்றிலும், அதன் ஆரம்பத் தோற்றத்திலும் எந்த ஒரு சிறு தடையமுமே இன்றில்லாமல் அதனை அத்திவாரத்துடன் முற்று முழுதாக இடித்து தள்ளினீர்கள். ‘மஸ்ஜிதுல் அக்ஷா’ வடிவிலான பெரிய குப்பாவுடனான கோபுரத்தை நீங்கள் இன்று அவ்விடத்தில் எழுப்பினாலும் மறைக்கப்பட்ட அல்லது மழுங்கடிக்கப்பட்ட முஹைதீன் தைக்காவின் வரலாறானது குறைந்த பட்சம் எமது அடுத்த சந்ததிக்காவது போய்ச் சேருமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்.
கடந்த 2004ம் ஆண்டு, பல தசாப்தங்களாக காத்தான்குடியின் மத்தியில் அமைந்திருந்த ‘மௌலானா கபுறடி அல்லது குழந்தை உம்மா கபுறடி’யானது, இப்பிரதேச முஸ்லிம்களின் பூர்வீகக் குடியிருப்புக்கு பெரும் அத்தாட்சியாகத் திகழ்ந்த ஒரு இடமாகும். குறிப்பட்ட ஒரு இயக்கத்தைச் சார்ந்தவர்களால் வன்முறை மூலம் ஓரிரு மணித்தியாலங்களுக்குள் இக்கபுறடியானது இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு அதன் வரலாற்று அடையாளம் அழிக்கப்பட்டது. இன்று எமது வரலாற்றையும், இருப்பையும் பேணிப் பாதுகாப்பதாகக் கூறும் அதே சிந்தனைவாதிகள், தங்களுடைய நிலைப்பாடும் தடுக்கப்பட வேண்டியதும் ஸியார வழிபாடுதானே தவிர, ஸியாரங்கள் அல்ல என்பதனை அன்று ஏன் வலியுறுத்தத் தவறினர். அவற்றை எமது வரலாற்றுப் பூர்வீக இடங்களாகப் பேணிப் பாதுகாக்கத் தவறினர்.
அத்தகைய வரலாற்றுப் பூர்வீக இடங்களையெல்லாம் அப்போதும் மக்கள் பிரதிநிதியாக இருந்த உங்களால் ஏன் பேணிப் பாதுகாக்க முடியாமல் போயிற்று? ஏன் நீங்களோ அல்லது இவ்வூரின் தலைமை உலமாக்களோ மக்கள் அங்கு ஸியார வழிபாடு செய்யச் செல்வதைத் தடுத்து, அந்த இடங்களை எமது பிரதேசத்தின் பூர்வீகத்தைப் பறைசாற்றும் வரலாற்றுத் தலங்களாகப் பேணிப் பாதுகாக்க முன்வரவில்லை? அந்த இடங்களின் வரலாறுகளும், சான்றுகளும் அந்த சியாரங்களுக்குச் சொந்தமானவர்களின் பின்னனியும் அந்தந்த இடங்களிலேயே எமது சமூகத்தின் தொன்மையை நிரூபிக்கும் வரலாறாக மையப்படுத்துவதற்கு உங்களால் ஏன் வழிவகுக்கப்படவில்லை?
அதுமட்டுமல்ல, உங்களின் துரித அபிவிருத்தியின் மற்றுமொரு பாரிய பணியாக எமதூரிலுள்ள வீதிகளின் பெயர்ப்பலகைகளில் துரிதமான மாற்றங்களைக் கொண்டு வந்தீர்கள். ஆண்டாண்டு காலமாக வழக்கிலிருந்து வந்த ஒவ்வொரு வீதியின் பெயர்களிலும் ஒரு வரலாறு சொல்லும் சம்பவத்தின் அல்லது ஒரு அறிஞரின், ஒரு சமூக சேவையாளரின், ஒரு பொது இடத்தின் பெயர் நினைவுபடுத்தப்பட்டிருந்ததை நாமறிவோம்.
ஆனால் நீங்கள் அபிவிருத்தி செய்தல் அல்லது இஸ்லாமிய மயப்படுத்தல் என்ற பெயரில் அந்த வரலாற்றுத் தடயங்களை எல்லாம் முற்றாக நீக்கினீர்கள். காலம் காலமாக எமது பூர்வீக வரலாறு பேசிவந்த அத்தடையங்களை அழித்துவிட்டு, இஸ்லாமிய மயமாக்கல் என்ற தோற்றத்தில் இமாம் அபூ ஹனீபா வீதி, இமாம் புகாரி வீதி, இமாம் ஷாபி வீதி என்று இப்பெயர்களுக்கும், வீதிக்கும் சம்பந்தமே இல்லாத பெயர்களைச் சூட்டினீர்கள். இதனால், நமது பூர்வீக வரலாறு என்பது ஒருபுறமிருக்க, மூடியிருந்த வீட்டைப் பலவந்தமாகத் திறந்து உள்ளிருந்த உரிமையாளனை வெளியேற்றிவிட்டு மூன்றாம் தரப்பானை உள்வீட்டில் குடியமர்த்தியதைப் போன்ற ஒரு விரக்தியான மனோநிலையை அவ்வீதிகளில் வாழும் மக்கள் உணர்வார்கள் என்றுகூட உங்களால் சிந்திக்க முடிந்ததா? அந்த வீதிகளின் பெயர்கள் சொல்லும் எமது பூர்வீக இருப்பின் அடையாளங்களை இப்போது வாழ்கின்ற எமது தலைமுறையினரும் கூட மறந்து விட்டிருக்கும் கையறு நிலையின் பாரதூரத்தை நீங்கள் அறிவீர்களா?
இன்னுமொரு உதாரணத்தையும் இங்கு குறிப்பிடலாம். உங்களின் இஸ்லாமிய நூதனசாலை அமைந்திருக்கும் இடத்திலிருந்து சற்றே தூரத்திலுள்ள அமானுள்ளாஹ் வீதியில் 1830களில் வாழ்ந்த அஸ்ஸெய்யது அப்துஸ்ஸமது மௌலானா என்பவருடைய அடக்கஸ்தலம் அமையப் பெற்றுள்ளது எங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? யெமன் நாட்டிலிருந்து வந்த அந்த இஸ்லாமியப் பெரியார் நமதூரில் தங்கியிருந்து மார்க்கப் போதனைகளில் ஈடுபட்ட வரலாற்றையும், இந்த மண்ணிலேயே மரணித்த வரலாற்றையும் ஆவணப்படுத்தவோ, குறைந்தது அப்பெரியாருடைய அடக்கத்தல அடையாளத்தைப் பாதுகாக்கும் முயற்சியிலோ நீங்கள் ஈடுபட்டீர்களா?
நூற்றாண்டுகளைக் கடந்த நமது பிரதேசத்தின் இத்தகைய வரலாறுகளும், வரலாற்றுத் தடயங்களும் மண்னோடு மண்ணாகிப் போக, இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு என்ற பெயரில் வாழைப்பழக் கடையையும், தேநீர்க் கடையையும், சன்வீச்சுக்கள் அடங்கலான பேக்கரி உணவுகளையும், கொல்லன் பட்டறையையும், குத்துவிளக்குகளையும், பொன்னெழுத்துப் பீங்கான்களையும், பித்தளைப் பாத்திரங்களையும் மீன் பிடி, நெசவு, வேளாண்மை முதலான இன்னோரன்ன வாழ்வாதாரத் தொழில்களையும் காட்சிப்படுத்துவதானது எந்தளவுக்கு எமது இன்றைய முஸ்லிம் சமூகத்தின் இருப்புக்கும், அடுத்த தலைமுறையினரின் இருப்புரிமைக்குமான வரலாற்றுச் சான்றாதாரங்களாக அமையும்?
இந்த ஊரில் பிறந்து வாழ்ந்து மறைந்த எத்தனையோ அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், நல்லவர்கள், சமூக மாற்றத்திற்காய் பாடுபட்டவர்கள் அதேபோல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள், சீர்த்திருத்தங்கள், 1956 பெருவெள்ளம், 1977 சூறாவளி, 1990 பள்ளிவாசல் படுகொலைகள், 2004 சுனாமி, போன்ற பேரழிவுகள், பல சாதனையாளர்களை உருவாக்கிய கல்விக்கூடங்கள், பாரம்பரிய மத்ரஸா முறைமைகள், பாரம்பரிய வணக்க வழிபாட்டு ஒழுங்குகள், வரவேற்பு உபசரிப்பு முறைமைகள், சகோதர இனத்தவர்களுடன் இணைந்து ஆற்றிய பணிகள், இயக்கங்கள், பண்டைய விளையாட்டு முறைகள் போன்ற எமது முஸ்லிம் சமூகத்தின் இருப்பையும், கலாச்சாரத்தையும் வெளிக்காட்டக்கூடிய விடயங்கள் உரிய முறையில் இஸ்லாமிய வரலாற்றுத் தொன்மியம் பேசுவதாகக் கூறப்படும் இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டிருக்கின்றனவா? அவை பதிவு செய்யப்பட்டதற்கான சான்றுகள் உள்ளனவா? அந்த முயற்சியில் ஈடுபடும் சகோதரர்களையாவது ஊக்குவிக்கும் ஒழுங்கு அல்லது முறையான செயற்றிட்டம் உங்களிடம் உள்ளதா? என்ற வினாக்கள் இயல்பாகவே எம்மிடம் எழுகின்றன.
காத்தான்குடி வரலாற்றைப் பறைசாற்றி நிற்கும் ஓரிரு வரலாற்று நூல்களை நாம் வாசிக்கும்போதே இளம்தலைமுறையினரான எமக்கு அவற்றிலுள்ள சம்பவங்களைப்பற்றி, அதில் இடம்பெற்றிருக்கக்கூடிய எமது மூதாதையர்களைப்பற்றி மென்மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவாவும், அவர்களுடைய உழைப்புக்கள், சிந்தனைகள் பற்றிய தேடலும் பெருக்கெடுக்கின்றன. அ த்தேடல்களுக்கான ஒரு பாதையை இவ்வூரின் தலைமகனாக விளங்குகின்ற நீங்கள் இளம் சமூகத்தினருக்கு இந்த இஸ்லாமிய அருங்காட்சியகத்தின் மூலம் சரியாக அமைத்து தந்திருக்கின்றீர்களா? எமது ஊரிலும், சுற்றியுள்ள பிரதேசத்திலும் இயற்கையாக அமைந்திருந்த எத்தனையோ பூர்வீகத் தடயங்களை எல்லாம் திட்டமிட்டு அழித்தொழிக்க இடமளித்து விட்டு, செயற்கையாக அமைக்கப்பட்டிருக்கும் தேநீர்க் கடைகள், ஓதல் பள்ளி, மரக் கிணற்றில் தண்ணீர் மொள்ளும் சிற்பங்கள் போன்றவற்றால் மாத்திரம் எமது சமூகத்தின் பூர்வீக வரலாற்றை ஆராய விளைகின்ற இளம் தலைமுறையினருக்கு எத்தகைய சிந்தனைகளும், வழிகாட்டல்களும் கிடைக்கும்?
சாதாரண ஒரு ஊரின் பூர்வீக வரலாற்று நிலையே இவ்வாறு தொங்கிக் கொண்டும், தொலைந்து கொண்டும் இருக்கும்போது, நூற்றுக்கணக்கான முஸ்லிம் ஊர்களை உள்ளடக்கிய முழு நாட்டு முஸ்லிம்களினதும் வரலாற்றுச் சான்றுதல்கள் பற்றி இங்கு நான் எடுத்துக் கூறவா வேண்டும்? தங்களுக்குள்ளேயே தத்தமது இயக்கம் என்றும், கொள்கைகள் என்றும் முரண்பட்டுக் கொண்டும், ஆளாளுக்கு பித்னா, வழிகேடு எனக் கூப்பாடு போட்டுக் கொண்டும் இருக்கக்கூடிய எமது சமூகம், அந்நிய சகோதரர்களால் நம் சமய, சமூக, கலாசார அடையாளங்கள் அழிக்கப்படுகின்ற அல்லது இழிவுபடுத்தப்படுகின்றபோது மட்டும் நமது இருப்பை உறுதிப்படுத்துவதாகக் குரல் கொடுத்ததையும், அடையாளங்களை அழிக்க வேண்டாம் எனப் பதறியதையும் என்னென்று எடுத்துரைப்பது?
அந்த நேரத்தில்கூட மக்களுக்காக, முஸ்லிம் சமூகத்திற்காக என அரசியல் அதிகாரப் பதவிகளைப் பொறுப்பேற்றிருந்த நீங்கள் என்ன செய்தீர்கள்? அந்நிய மத சகோதரர்களால் அன்று அநுராதபுரம் தொடக்கம் இன்று கூரகலை வரைக்கும் எமது இருப்புக்கான கலாச்சார அடையாளங்கள், பள்ளிவாயல்கள், சியாரங்கள், வரலாற்றுச் சின்னங்கள், தொன்மை வாய்ந்த வீதிகளின் பெயர்கள் எல்லாம் தகர்த்தெறியப்பட்டு எமது சமூகத்தின் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்ட வேளைகளில் அவற்றைத் தடுப்பதற்கும், கண்டித்துக் குரல் எழுப்புவதற்கும், அந்தந்த இடங்களில் அவற்றைப் பாதுகாத்து நிலைநிறுத்துவதற்கும் ஒழுங்கான, திடமான முயற்சிகளை நீங்கள் ஏன் மேற்கொள்ளவில்லை?
இன்று எல்லா மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஒரு முன்மாதிரியாக முஸ்லிம்களின் வரலாற்றைப் பாதுகாக்கின்றேன் என்ற பெயரில் சர்ச்சைக்குரிய சிலைகளையே நிறுவத் துணிந்த உங்களால் அன்றிருந்த வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க ஏன் ஒரு பாரியளவிலான முயற்சியை முன்னெடுக்க முடியாமல் போனது?
இவ்வாறான எமது சமூகத்தின் இருப்புக்கும், வரலாற்றுக்கும் எதிரான பாரிய அனர்த்தங்களிலும், அச்சுறுத்தல்களிலும் உங்களின் பங்கும், பணிகளும் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்து வெளிப்படையாகத் தெரிந்திருந்த நிலையில், இன்று நீங்கள் நமது சமய, சமூக, கலாசார வரலாறுகளைப் பாதுகாக்கவென முன்வந்திருப்பதானது எந்தளவு தூரம் ஆரோக்கியமானது?
இஸ்லாமிய வரலாறுகளின் மீள் நிர்மாணம், பாதுகாத்தல் அல்லது புனருத்தாரணம் என்பது ஏதோ ஒரு நாட்டின் இயற்கை அமைப்பான ஈச்சை மரங்களை இங்கு கொண்டு வந்து நடுவதோ, அறபு எழுத்தனிகளைக் கொண்ட அலங்காரச் சுற்றுவட்டங்களை நிறுவுவதோ அல்லது மருவிப்போகின்ற வரலாற்றுத் தடயங்களை அந்தந்த ஸ்தலங்களில் பாதுகாப்பதை முற்றாக நிராகரித்து விட்டு, அவற்றைப் புதிது புதிதான சிலைகளாகவோ, சிற்பங்களாகவோ செயற்கையாக உருவாக்கி கண்காட்சிப் பொருட்களைப்போன்று வைப்பதோ அல்ல.
நான் இவற்றையெல்லாம் முற்று முழுதாக மறுத்துரைக்கவில்லை, இருப்பினும் வரலாற்றைப் பாதுகாத்தல் எனும் சரியான புள்ளியை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளதனால் இலங்கை முஸ்லிம்களின் இருப்புக்கும், தொடர்ந்து வரவிருக்கும் சந்ததியினருக்கும் பாரியதொரு அநியாயம் இழைக்கப்படுகின்றது என்பதனையே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
ஒரு தவறை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுதல் அழகல்ல. எனினும் நீங்கள் செய்திருப்பது ஒரு சிறுபான்மைச் சமூகத்தினுடைய வரலாற்றுத் தவறு என்பதனால் அதுபற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை, தூய எண்ணங்களுடன் உங்கள் இலக்கு தொடரும் எனின், இங்கு நான் மேற்கோள்காட்டிய விடயங்கள் உங்களால் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது. இனிமேல் எஞ்சியிருக்கின்ற எமது சமூகத்தின் தொன்மைத் தடையங்களையாவது அப்படியப்படியே அந்தந்த இடங்களில் பேணிப் பாதுகாக்கின்ற, மறைந்து கொண்டிருக்கின்ற எமது சமூகத்தின் பூர்வீக வரலாறுகளை ஆவணப்படுத்துகின்ற ஒழுங்கு குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும் என்ற நோக்கிலயே இந்த ஆக்கம் எழுதப்பட்டது.
எத்தனையோ சுயலாபங்களுக்காக நீங்கள் இந்த நூதனசாலையைத் திறந்திருப்பதாய் பல தரப்பினரும் பலவிதமாக பேசலாம். இருப்பினும் இளம் தலைமுறையினாரான எம்போன்றவர்களுக்கு இதனை ஒரு வாய்ப்பாக மாற்றித் தர வேண்டும் என நீங்கள் நினைத்தீர்களானால் இங்கு மேற்கோள்காட்டப்பட்ட உண்மையான நமது சமூகத்தின் வரலாறுகளைப் பாதுகாப்பதில் காத்திரமான செயற்பாடுகளை மேற்கொள்வீர்கள் என நாம் எதிர்பர்ர்கின்றோம்.
முஸ்லிம்கள் என்ற போர்வையில் அந்நிய அறபு நாட்டுக் கலாச்சாரங்களோடு, அவற்றின் இறக்குமதியோடு நாம் இந்த நாட்டில் வாழ விரும்பவில்லை. இலங்கைச் சோனகர் என்ற அந்தஸ்திலேயே வாழ விரும்புகின்றோம். அதற்கான வரலாற்றுத் தடங்களை மீட்டுத் தர நீங்கள் முயற்சிக்க வேண்டும் என்பதே எமது அவா.
இதன் மூலம் எமது உரிமையை இந்த நாட்டில் எடுத்துக்கூறி, எங்கள் இருப்பைப் பேசுபொருளாக்கி அடுத்த சமூகங்களுடன் சண்டையிட்டுக் கொள்வதற்கு நாம் விளையவில்லை.
இந்த நாடு எமது நாடு. இங்கு தலைமுறை தலைமுiயாக எங்கள் மூதாதையர்கள் வாழ்ந்து சேவையாற்றி இருக்கின்றனர், நாட்டு நலனுக்காக உழைத்திருக்கின்றனர், அடுத்த மத சகோதர்களுடன் நட்பு பாராட்டி கலந்துறவாடி இருக்கின்றனர் என்பதை அன்போடும், அழகோடும், கலையோடும், சுட்டிக்காட்டி இஸ்லாம் எந்தச் சூழ்நிலைக்கும், எந்தக் காலத்துக்கும், எந்த நாட்டிற்கும் பொருத்தமான வாழ்வொழுங்கு முறையைக் கொண்டதே என்பதைப் பறைசாற்றுவதே நாம் அடைய நினைப்பது. அதற்கே இத்தகைய வரலாற்றுச் சான்றுகளும், நூதனசாலைகளும், தடயங்களும் ஆணி வேராக அமைய வேண்டும் என்பதே மறுக்க முடியாத கருப்பொருளாக இருக்க வேண்டும்.
அல்லாஹ் உங்களது தூய எண்ணங்களையும், செயற்பாடுகளையும் பொருந்திக் கொள்ளட்டும்!
3 responses to “காத்தான்குடி பூர்வீக நூதனசாலையும் எனது நோக்கும்”
Bin Mohamed
சகோதரி,
ஈமானிய போரட்டம் என்ற போர்iவையில், பொறியிலாளர்களும் மருத்துவர்களும், இன்னும் சிலரும் அங்கம் வகிக்கும் அரசியல் இயக்கமும், அவர்களோடு இணைந்த தஃவா சகோதரர்களும், தூரநோக்கில்லாமல், காத்தான்குடியில் அழித்தொழிக்கப்பட்ட முஸ்லிம்களின் பூர்வீக புராதன சொத்துக்களை திரட்டுமாறும் சகோதரர் ஹிஸ்புழ்ழாஹ்விடம் எடுத்துயியம்புங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி; சிலை வைப்பது பற்றி சிந்தித்துக் கொண்டும் பேசிக்கொண்டும் எம் இளைய சமுதாயத்துக்கு மத்தியில் நீங்கள் இவ்வாறு சிந்தித்திருப்பது வரவேற்கத்ததக்கது.
இன்று இந்த நூதனசாலை சம்பந்தமாக பேசப்படும் இடங்களில் உங்களது இக்கருத்தும் பேசப்பட வேண்டும்.அத்துடன் உங்களது இவ்வாக்கமும் அங்கு இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.
So,இக்கட்டுரையை Print எடுத்து ஹிஸ்புல்லாஹ் மற்றும் சில முக்கியமானவர்களுக்கும் அனுப்பி வைத்தால் நன்று.
உங்களது இக்கருத்தில் ஒரு சில இடங்களில் நான் முரண்படுகின்றேன்.இருப்பினும் இவ்வாக்கத்தை மனமாற வரவேற்கின்றேன்.
Leave a reply to Muhammadh Rifaz Cancel reply