இலவச சட்ட ஆலோசனை வழங்கும் சட்டத்தரணிகள் பொதுமக்கள் சந்திப்பு! – காத்தான்குடியில் நாளை நடைபெறும்

Transparency International Logo– புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்

காத்தான்குடி: ‘ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெசனல்’ அமைப்பின் மட்டக்களப்பு கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலவச சட்ட ஆலோசனை வழங்கும் சட்டத்தரணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நாளை (25.04.2015) சனிக்கிழமை காத்தான்குடியில் இடம்பெறவுள்ளது.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் காரியாலயத்தில் அமைந்துள்ள கூட்ட மண்டபத்தில் நாளை சனக்கிழமை காலை 09:00 மணி தொடக்கம் மாலை 03:30 மணி வரை இச்சந்திப்பு இடம்பெறும் என ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர் நெஷனல் அமைப்பின் மட்டக்களப்பு கிளை அலுவலக முக்கியஸ்தரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஃப்.எக்ஸ்.எஸ்.. விஜயகுமார் தெரிவித்தார்.

சட்டத்துறையில் போதிய வழிகாட்டல் இல்லாமையால் பொதுமக்கள் தாங்கள் எதிர்கொண்டிருக்கும் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் மற்றும் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு சிரமங்களையும் சந்தித்து வருகின்றனர். இவர்களுக்கு இவ்வாறான சந்திப்புக்கள் மூலம் முறையான சட்ட வழிகாட்டல்கள் இலவசமாக வழங்கப்படுவதுடன், அவர்களால் முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கும் போதிய ஒத்துழைப்புக்கள் எமது ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் அமைப்பினால் வழங்கப்படும் என அவர் மேலம் தெரிவித்தார்.

Transparency International Logo

இதற்கு முன்னரும் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இவ்வாறான இலவச சட்ட ஆலோசனை வழங்கும் சந்திப்பு ஒன்று ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்ற போதிலும், அதுபற்றிய முன்னறிவிப்புக்கள் பரவலாக பிரச்சாரப்படுத்தப்படாமையால், பிரபல சட்ட அறிஞர்கள் பலர் உரிய நேரத்திற்குச் சமூகமளித்துக் காத்திருந்தும் பொதுமக்கள் கணிசமான அளவில் வருகை தராதது சுட்டிக்காட்டத்தக்கது.

எனவே, நாளை நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இலவச சட்ட ஆலோசனை வழங்கும் சந்திப்புக்கு காத்தான்குடி, புதிய காத்தான்குடி, ஆரையம்பதி, காங்கேயனோடை, பாலமுனை, நாவற்குடா, மஞ்சந்தொடுவாய் மற்றும் அவற்றைச் சூழவுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு சமூகமளித்து இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஊடகங்களும் தமது பங்களிப்புக்களை வழங்க வேண்டும் எனவும் சட்டத்தரணி விஜயகுமார் வேண்டுகோள் விடுத்தார்.

Published by

Leave a comment