கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று காலை முதல் சபா மண்டபத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதுடன், சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதோடு ஆரம்பமான இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.
இதில் 50ற்கும் அதிகமான ஐ.ம.சு.மு எம்பிக்கள் பங்கேற்றதுடன், சபா மண்டபத்தின் நடுப்பகுதியில் அமர்ந்திருந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியிருந்தது.
19வது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்றையதினம் நடைபெற விருந்தபோதும் கட்சித் தலைவர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டுக்கு அமைய இந்த விவாதம் இன்று எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த நிலையில் சபை நடவடிக்கைகள் ஓரிரு நிமிடங்களில் நிறைவடைந்தது. இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருப்பது தொடர்பாக தினேஷ் குணவர்த்தன எம்பி சிறப்புரிமை மீறல் பிரச்சினையொன்றை எழுப்பினார்.
திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்கியமைக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழுவினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளமையானது திஸ்ஸ அத்தநாயக்க எம்பியின் சிறப்புரிமையை மீறியிருப்பதுடன், ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவின் கெளரவத்தைப் பாதித்திருப்பதுடன், அரசியலமைப்பின் கீழ் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் கேள்வியெழுப்பப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் கடுமையான விவாதம் ஏற்பட்டதுடன், இது முற்பகல் 9.30 மணி முதல் 10.40 மணிவரை நீடித்திருந்தது. 10.40 மணியளவில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தை ஒத்திவைக்க முற்பட்ட சமயத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சபை நடுவிற்கு வந்து இந்த விடயத்துக்கான தீர்ப்பை சபாநாயகர் உடனடியாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததுடன்,
முடிவை அறிவிக்கும்வரை தாம் சபையைவிட்டு வெளியேறப் போவதில்லையெனக் கூறி சபை நடுவில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்த நிலையில், சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார். இருந்தபோதும் சுமார் 28 எம்பிக்கள் சபை நடுவில் அமர்ந்துகொண்டதுடன் 50ற்கும் அதிகமான எம்பிக்கள் இந்தப் போராட்டத்தில் இணைந்துகொண்டனர். ஐ.ம.சு.மு எம்.பிக்கள் சபை நடுவில் அமர்ந்துகொண்டதும் ‘கள்வர்கள் கூட்டம் நடுவில் அமர்ந்துள்ளது’ என ஆளும் தரப்பிலிருந்து கூக்குரல் எழுப்பப்பட்டது.
இந்த ஆரவாரங்களுக்கும் மத்தியில் சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருப் பதால் செங்கோலை எடுத்துச் செல்ல முடியும் என சபாநாயகர் அறிவித்ததும் படைக்கலசேவிதர் செங்கோலை எடுத்துச் சென்றார். செங்கோல் எடுத்துச்செல்லப் பட்ட பின்னரும் சபைநடுவில் அமர்ந் திருந்த எம்.பிமார் தொடர்ந்தும் சபை நடுவில் அமர்ந்திருந்து தமது உண்ணா விரதப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
நள்ளிரவானாலும் தாம் சபையிலிருந்து வெளியேறப்போவதில்லையென கலரியில் அமர்ந்திருந்த ஊடகவியலாளர்களைப் பார்த்து மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி கூறினார். வெளியேசென்றால் தமக்குப் பாதுகாப்பு இல்லையென்றும், சபையில் இருப்பதே பாதுகாப்பு என்பதால் தாம் தொடர்ந்தும் சபைநடுவில் இருக்கப் போவதாக ரோஹித்த அபேகுணவர்த்தன ஊடகவியலாளர்களைப் பார்த்துத் தெரிவித்தார்.
சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப் பியிருந்த தினேஷ் குணவர்த்தன எம்பி பேசுகையில்,
பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க கடந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்பைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக வும் இதனால் அவருடைய சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டி னார். தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான நெருக்குவாரங்கள் அதிகரித்திருப்பதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்கள் கூட விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அது மாத்திரமன்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அமைச்சுப் பதவி வழங்கியமை தொடர்பிலேயே அவருக்கு இலஞ்ச ஊழல் மோசடி விசாரணைக்குழு அழைப்பாணை விடுத்திருப்பதாகவும் இது அவருடைய கெளரவத்தைப் பாதித்திருப்பதுடன், ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் அரசியலமைப்பின் ஊடாக அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அமையவே திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டது. இவ்வாறு அமைச்சுப் பொறுப்பை வழங்கியமையானது ஊழலாக அமையாது.
அவ்வாறாயின் 19 ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்தபோது வழங்கப்பட்ட அமைச்சுப் பொறுப்புக்களும் இலஞ்சமாகவே கருதப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார். முன்னாள் ஜனாதிபதியை இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தி நாட்டில் பாரதூரமான பிரச்சினையை உருவாக்க வேண்டாம்.
அமைச்சுப் பதவியை வழங்கியமைக்காக முன்னாள் ஜனாதிபதியை இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைத்து ஜனநாயகவிரோத செயலில் அரசாங்கம் ஈடுபடக்கூடாது. இது விடயத்தில் சபாநாயகர் உடனடியாகத் தலையிட்டு முன்னாள் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கெளரவத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
விமல் வீரவன்ச
அன்று யுத்தத்துக்கு எதிராக செயற்பட்டவர்கள் யுத்தம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த இவ்வாறு நடவடிக்கை எடுக்கின்றனர். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் பட்டியலொன்றைக் கொடுத்துள்ளது. இதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கு எதிரான விசாரணைகள் நடத்தப்படுகிறது.
இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்துக்கு உச்சநீதிமன்ற நீதியரசராக பதவி வழங்கப்படும் என பிரதமரால் உறுதிவழங்கப்பட்டுள்ளது என ஆணைக்குழுவின் பணிப்பாளரே கூறியுள்ளார். அரசாங்கம் தமக்கு சவாலாக உள்ளவர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் விசாரணைகளை நடத்தி வருகின்றது.
மஹிந்தானந்த அளுத்கமகே
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைத்து விசாரணைக்கு உட்படுத்தினால் அதன்விளைவுகள் மோசமானதாக இருக்கும். நாட்டின் நிலை பாரதூரமாக மாறுவதைத் தடுப்பதற்கு சபாநாயகர் உடனடியாகத் தலையிட்டு தீர்வொன்றை வழங்கவேண்டும். ஜனநாயகத்தை மீறும் வகையிலான செயற்பாடுகளுக்கு அனுமதிக்க கூடாது.
அஜித் பி.பெரேரா
இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் தலையீடு செய்வதற்கு பிரதமருக்கோ வேறு எவருக்கோ உரிமை கிடையாது. வோட்டர்ஸ் எட்ஜ் வழக்கு விசாரணையின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் வழக்குத் தொடருமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் அவருக்கு இருக்கும் விதிவிலக்கு செல்லுபடியற்றதாகிறது. இது தொடர்பில் உச்சநீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியிருக்கிறது. மோசடி மற்றும் லஞ்சத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காகவே மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தார்கள். அத்தகையோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கையிலேயே எதிர்த்தரப்பு ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி அதற்குத் தடைபோடுகிறது. சட்டத்தின் முன் சகலரும் சமமாக மதிக்கப்பட வேண்டும்.
வாசுதேவ நாணயகார
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சாட்சியம் பெற அழைக்கப்பட்டாரா சந்தேகத்தின் பெயரில் அழைக்கப்பட்டாரா என்பதை நாம் எவ்வாறு தீர்மானிக்க முடியும். அவர் இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருப்பது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயலாகும். இவர் அழைக்கப்பட்டதன் ஊடாக அவர் ஏதும் இலஞ்சம் பெற்றதாகவே கருதத் தோன்றும். எம்பிக்களின் சிறப்புரிமையைப் பாதுகாப்பதற்கு பிரதமரும் சபாநாயகரும் தலையீடு செய்யவேண்டும். இந்த விடயத்தை பாராளுமன்றம் சென்று தீர்த்துக்கொள்ளுமாறு கூறுகிறார். அரசியலமைப்பும் பாராளுமன்ற சிறப்புரிமையும் மீறப்படுகிறதா என்பது குறித்து கவனிக்க வேண்டிய பொறுப்பு பிரதமருக்கே இருக்கிறது.
தி.மு.ஜயரட்ன
இந்த அரசாங்கத்தில் நடக்கும் விடயங்களை எந்த வகையிலும் ஏற்க முடியாது. 30 வருட யுத்தத்துக்கு முடிவுகண்ட தலைவருக்கு இவ்வாறு நெருக்குதல் கொடுப்பதை அனுமதிக்க முடியாது.
இந்த பாராளுமன்றத்தில் உள்ள 225 எம்பிக்களும் திருடர்கள் மோசடிக்காரர்கள் என்றே உலகம் கருதும். அரசாங்கம் முன்னெடுக்கும் கேவலமான நடவடிக்கைகளை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். யாராவது தவறு செய்திருந்தால் அதுகுறித்து உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பந்துல குணவர்த்தன
எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் மோசமான முறையில் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் பழிவாங்கப்படுவதைப் போன்று பழிவாங்கப்படுகின்றனர். டயஸ்போராவுக்குத் தேவையான வகையில் பழிவாங்கல்கள் இடம்பெறுகின்றன. நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக்கொண்டுவந்த முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக விசாரணை நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது சட்டத்துக்கு விரோதமானது. ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவருக்கு உரிய அதிகாரங்களுக்கு அமையவே திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அமைச்சுப் பொறுப்பை வழங்கினார். அதனை அவர் ஏற்றுக்கொண்டார். இது இலஞ்சமாக அமையாது.
Published by


Leave a comment