கொழும்பு: நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதாக 100 நாட்கள் வேலைத்திட்டத்தை முன்வைத்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலான அரசாங்கத்தின் முன் காணப்படும் பாரியதொரு சவால் 19வது திருத்தச்சட்ட மூலத்தை நிறைவேற்றுவதாகும்.
ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்த லில் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவின் முக்கிய பிரசாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல் லாமல் செய்யும் 19வது திருத்தச்சட்ட மூலத்தை கொண்டுவருவது என அமைந்திருந்தது.
100 நாள் வேலைத்திட்டத்தில் 19வது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு குறிக்கப்பட்டிருந்த திகதி முடிவடைந்திருந் தாலும் பல்வேறு இழுபறிகளின் பின்னர் நாளையதினம் பாராளுமன்றத்தில் 19வது திருத்தச்சட்டமூலம் விவாதத்துக்கு வருகிறது. குறித்த 19வது திருத்தச்சட்டமூல மானது அரசியலமைப்பை மீறும் வகையில் அமையவில்லையென்றும், இதில் உள்ள ஒரு சில சரத்துக்களைத் தவிர ஏனையவற்றை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் இல்லையென்ற வியாக்கியானத்தை உச்சநீதிமன்றம் வழங்கியிருந்தது.
இதன் அடிப்படையில் 19வது திருத்தச்சட்ட மூலத்தை உடனடியாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு எடுத்த முயற்சிகளுக்கு பிரதான கட்சிகள் சில தடங்கல்களை ஏற்படுத்தியுள்ளன.
19வது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்குவதாயின் தேர்தல் முறையை மாற்றும் 20வது திருத்தச்சட்டமூலம் ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நிபந்தனையொன்றை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முன்வைத்துள்ளது. இவ்வாறான தொரு நிலையிலேயே 19வது திருத்தச்சட்டமூலம் நாளை பாராளு மன்றத்தில் விவாதத்துக்கு வருகிறது.
நடைமுறையில் இருக்கும் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கு இதுவரை 18 திருத்தச்சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றுள் தற்பொழுது கொண்டுவரப்பட்டிருக்கும் 19வது திருத்தச்சட்டமூலமே நாட்டில் ஜன நாயகத்தை ஓரளவேனும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகக் கொள்ள முடியும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையைக் கொண்டதாக 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் இயற்றப்பட்டது.
ஆணை பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர ஏனைய அனைத்து விடயங்களையும் நிறை வேற்றக்கூடிய வகையிலேயே ஜனாதிபதிக்கு உயரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இவ்வளவு பலம்பொருந்திய நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்வதாக ஜே.ஆரின் பின்னர் ஆட்சிக்கு வந்த சகலரும் கூறி வந்தனர். ஆனால் அதனை நிறைவேற்றுவதற்கு எவரும் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
முன்னாள் ஜனாதிபதிகளான ஆர்.பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தமது தேர்தல் பிரசாரங்களில் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்வோம் எனக் கூறியிருந்தபோதும் அதனை நடைமுறைப்படுத்த அவர்கள் தவறிவிட்டனர்.
அதேநேரம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கும் ஒருபடி மேல் சென்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மேலும் பலப்படுத்தும் வகையில் 18வது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றியிருந்தார்.
17வது திருத்தச்சட்டமூலத்தால் கொண்டுவரப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களைச் செயலிழக்கச் செய்து, முழு அதிகாரத்தையும் ஜனாதிபதிக்கு மாத்திரம் வழங்குவது மாத்திரமன்றி ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைகள்தான் போட்டியிட முடியும் என்ற வரையறையை நீக்கி எத்தனை தடவைகளும் போட்டியிட முடியும் என்ற நிலைமையை ஏற்படுத்தியிருந்தார். இதன் அடிப்படையில் மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிட்டார். இருந்தபோதும் அதில் அவரால் வெற்றிபெற்றிருக்க முடியவில்லை.
ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி நாட்டில் நல்லாட்சியை உருவாக்குவதாகக் கூறிவந்த புதிய அரசாங்கம் கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டு 19வது திருத்தச்சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையானது இந்த உத்தேச திருத்தச்சட்டமூலத்தின் ஊடாக முழுமையாக இல்லாமல் செய்யப்படாவிட்டாலும் ஜனாதிபதியிடம் மாத்திரம் குவிக்கப்பட்டிருந்த அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டுள்ளன.
ஒரு சில அதிகாரங்கள் பாராளுமன்ற த்துக்கும், ஒரு சில அதிகாரங்கள் பிரதமர் தலைமையிலான அமைச்சர வைக்கும் ஏனைய சில அதிகாரங்கள் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் பகிரப்பட்டுள்ளன. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பறித்து பிரதமருக்கு வழங்குவதற்கு முயற்சிக்கப்பட்டிருப்பதாக சில அரசியல் கட்சிகள் தர்க்கங்களை முன்வைக்கின்றன.
பிரதமர் பதவியை தற்பொழுது வகித்துவரும் ஒரு தனிநபரை அடிப்படை யாகக் கொண்டே இந்தத் தர்க்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும், 19வது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப் பட்டதும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும். அத்தேர்தலில் எந்தக்கட்சிக்கு கூடுதல் ஆசனங்கள் கிடைக்கின்றவோ அந்தக் கட்சிக்கே பிரதமர் பதவி வழங்கப்படும். அவ்வாறு தெரிவாகும் பிரதமருக்கே சில அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளன. புதிய திருத்தச்சட்டமூலத்துக்கு அமைய ஜனாதிபதி தேசிய ஒற்றுமையின் சின்னமாக செயற்படுவதுடன், நாட்டின் தலைவராகவும், நாட்டின் மத நல்லிணக்கம் மற்றும் நியாயமான தேர்தல் நடத்தப்படுவதை உறுதிப்படுத்தும் ஒரு தலைவராகவும் காணப்படுவார்.
அதேநேரம், பிரதமருக்கும் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சரவையின் தலைவராக பிரதமர் காணப்படுவார். பிரதமர் தலைமையிலான அமைச்சரவை பாராளுமன்றத்துக்குக் கீழ்ப்பட்டதாகவும், பொறுப்புக்கூறும் வகையில் அமையவேண்டும். அமைச்சர்கள் மற்றும் அமைச்சுப் பொறுப்புக்களை நியமிப்பதற்கு பிரதமருக்கு வழங்கும் அதிகாரங்கள் உள்ளிட்ட ஒரு சில சரத் துக்களை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதித்துறைக்கு மதிப்பளித்து அவ்வாறான சரத்துக்களை நீக்கி எஞ்சியவற்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதுமாத்திரமன்றி சுயாதீன ஆணைக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங் களில் தீர்மானங்களை எடுப்பதற்காக அரசியலமைப்பு பேரவையொன்றும் உருவாக்கப்படவுள்ளது. பிரதமர், சபா நாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகி யோருடன் மேலும் 6 பேர் இதற்கு நியமிக்கப்படுவார்கள். ஒருவரை ஜனாதிபதி நேரடியாக நியமிக்க முடியும்.
எஞ்சிய ஐந்து பேரையும் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருடைய ஒப்புதல்களுடன் ஜனாதிபதியால் நியமிக்க முடியும். சட்டத்திருத்தங்கள், சட்டமூலங்கள், சுயாதீன ஆணைக்குழுக்களின் நியமனங்கள் உள்ளிட்ட பாராளுமன்றம் தொடர்பான சகல தீர்மானங்களும் இந்த அரசியலமைப்பு பேரவையின் ஊடாக எடுக்கப்படும். ஜனாதிபதி என்ற ஒரு நபரிடம் மாத்திரம் மையப்படுத்தப்பட்டிருந்த அதிகாரங்கள் உத்தேச 19வது திருத்தச்சட்டமூலத்தின் ஊடாக பலதரப்பட்டவர்களிடையே பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளமை இதன்மூலம் உறுதியாகிறது.
தேர்தல்கள் ஆணைக்குழு, பொதுச் சேவைகள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, கணக்காய்வாளர் சேவை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, ஊழல்மோசடி விசாரணை ஆணைக்குழு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தேசிய பெறுகை ஆணைக்குழு, அரச மொழிகள் ஆணைக் குழு போன்ற ஆணைக்குழுக்கள் மீண்டும் ஸ்தாபிக்கப்படவுள்ளன. இவற் றுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்தாலும், அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரம் இன்று ஒரு நபரைக்கூட ஜனாதிபதியால் நியமிக்க முடியாது. இதன்மூலம் கடந்த காலங்களில் தமக்கு நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்களை சுயாதீன ஆணைக்குழுக் களுக்கு நியமித்த நிலைமை மாற்ற மடையும்.
அமைச்சரவை எண்ணிக்கையென்பது கடந்த காலங்களில் பெரும் பிரச்சினையாக இருந்தது. இது நாட்டுக்குப் பெரும் சுமையாகவும் மாறியிருந்தது. இதனை வரையறுக்கும் யோசனையும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 30 அமைச்சரவை அமைச்சர்களும் பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 40 பேரும் நியமிக்கப்பட முடியும். பொதுத் தேர்தலின் பின்னர் அமையவிருப்பது தேசிய அரசாங்கமாயின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 100 ஆக அமையும்.
ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்டிருப் பதுடன், பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 5 வருடங்களாகும். நான்கரை வருடங்களின் பின்னர் பாராளுமன்றத்தின் அனுமதியுடன் பாராளுமன்றத்தை கலைக்க முடியும். அதற்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைப்பதாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறப்பட வேண்டும். இதன் ஊடாக ஜனாதிபதி தனக்கு வேண்டப்பட்ட நேரங்களில் பாராளுமன்றத் தைக் கலைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
ஒரு கட்சி சார்பில் பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர் கட்சி தாவும் பட்சத்தில் அவருக்கு எதிராக கட்சியொன்று சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்தும் விதந்துரை யொன்றும் 19வது திருத்தச்சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்று எடுக்கும் நடவடிக்கையை நீதிமன்றத்தால் கட்டுப்படுத்த முடியாது என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனூடாக கடந்த காலங்களில் அமைச்சுப் பதவிகளுக்காக கட்சி மாறும் செயற்பாடுகள் தடுக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன.
நீதியான, சுயாதீனமான தேர்தலை உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், தேர்தல்கள் ஆணையாளருக்கும் கூடுதல் அதிகாரங்கள் இந்தத் திருத்தச்சட்டமூலத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளன. அரச ஊடகங்கள் மற்றும் தனியார் ஊடகங்கள் பக்கச்சார்பற்ற தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுப்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருப் பதுடன், நீதியான தேர்தலொன்றை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்காதவரி டமிருந்து ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்படாத தொகையை தண்டப்பணமாக அறவிடுவதற்கோ அல்லது மூன்று வருடங்களுக்கு அதிகரிக்காத சிறைத்தண்ட னையையோ வழங்குவதற்கு உத்தேச 19வது திருத்தச்சட்டமூலத்தில் பரிந்து ரைக்கப்பட்டுள்ளது.
நீதிச்சேவையின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தும் பொறுப்பு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிடம் வழங்கப் பட்டுள்ளது. நீதிபதிகளின் நியமனம் உள்ளிட்ட சகல விடயங்களும் இந்த ஆணைக்குழுவின் பரிந்துரையுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதேநேரம் நீதிச்சேவை ஆணைக் குழுவுக்கான உறுப்பினர்களின் நியமனம் அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும். இதேபோலவே பொலிஸ் ஆணைக்குழு வின் செயற்பாடுகளும் அமைந்திருக்கும்.
நாட்டில் அதிகரித்திருக்கும் ஊழல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் 19வது திருத்தச்சட்டமூலத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி குறித்து புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவைப் பலப்படுத்துவதற்கான விதந்துரைகளும் இதில் வழங்கப்பட்டுள்ளன. அரசியல மைப்பு பேரவையின் அங்கீகாரத்துடன் இதற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிக்க முடியும். ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் முறைப்பாடுகளின் அடிப் படையில் அல்லது சுயாதீன முறையில் விசாரணைகளை மேற்கொள்ளலாம்.
அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் மற்றுமொரு புதிய விடயம் தேசிய பெறுகைககளுக்கான ஆணைக்குழுவாகும்.
அரசாங்கத்துக்கான கொள்வனவுகளில் இடம்பெறக்கூடிய மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான ஆணைக் குழுவாகும்.
சகல அரச நிறுவனங்களினாலும் பண்டங்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான நியாயமான, ஒப்புரவான, வெளிப்படையான போட் டியான செலவுத் திறனான நடவடிக்கை முறைகளையும் வழிகாட்டல்களையும் வகுத்தல் இந்த ஆணைக்குழுவின் முக்கிய பணியாகும். அரசாங்க நிறுவனங்களுக்கான பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்கப்பட முன்னரான ஒப்பந்தங்களை ஆராய்தல் மற்றும் அவற்றை அனுமதித்தல் போன்றனவும் இந்த ஆணைக்குழுவின் பணிகளாகும்.
இதனைவிட தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்தும் விதந்துரைகளும் இந் தத் திருத்தச்சட்டமூலத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இது தொடர்பில் பிறிதொரு சட்டமூலத்தைக் கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்திருக்கும் ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தி சட்டத்தை நிலைநாட்டி, ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி நல்லாட்சியை ஏற்படுத்தும் வகையில் உத்தேச 19வது திருத்தச்சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஜன நாயகத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த தொரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் எதிர்காலத்துக்கும், சிறந்த அரசியல் கலாசாரத்துக்கும் வழிவகுக் கக்கூடிய இந்த அரசியலமைப்பு திருத் தச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவது சகல கட்சிகளினதும் கடமையாகும். இந்த அரசியலமைப்பை ஒரு சில நபர்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்காமல் நாட்டின் எதிர்காலம் மற்றும் மக்களின் நலன்களை அடிப்படையில் பார்ப்பதற்கு அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும். தமக்கிடையிலான அதிகாரப் போட்டிகளை கைவிட்டு இதய சுத்தியுடன் 19வது திருத்தச்சட்டமூலத்துக்கு தமது ஆதரவை வழங்க அரசியல் கட்சிகள் செயற்பட வேண்டும்.
18வது திருத்தச்சட்டமூலத்துக்கு கையுயர்த்தி நாட்டின் ஜனநாயகத்துக் குப் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு பங்குதாரர்களாக இருந்த அரசியல் வாதிகளுக்கு தமது தவறை நிவர்த்தி செய் வதற்கு ஏற்பட்ட சிறந்ததொரு சந்தர்ப் பமாக இதனை எடுத்துக்கொண்டு 19வது திருத்தத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதே காலத்தின் தேவையாக உள்ளது.
Published by

Leave a comment