ஜனாதிபதி மைத்ரி விரைவில் குணமடைய வேண்டுமென கிழக்கு ஊடக சங்கம் பிரார்த்தனை

– EMS

ems 1மட்டக்களப்பு: திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, மிக விரைவில் பூரணமாகக் குணமடைந்து நாட்டுக்குச் சேவையாற்ற வேண்டுமென கிழக்கு ஊடக சங்கம் பிரார்த்தனை அறிக்கையொன்றை இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

கிழக்கு ஊடக சங்கத்தின் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், பொதுச் செயலாளர் வீ. பத்மசிறி ஆகியோர் கையெழுத்திட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் கடந்த பத்தாண்டு காலமாக நிலவிய முன்னாள் ஜனாதிபதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான சர்வாதிகார மற்றும் குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் எத்தனையோ அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும் அரசியற்களத்தில் வீற்றிருந்த வேளையில், எவரும் எதிர்பார்த்திராதவாறு திடீர் திருப்பமாக முன்னைய அரசாங்கத்தின் அமைச்சர் பதவியையும் துறந்து விட்டு மிகத் தைரியமாக எதிர்க்கட்சிக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கி அஹிம்சை வழியில் போட்டியிட்டு அதில் வெற்றியடைந்து ஜனாதிபதியானவர் மைத்திரிபால சிறிசேன அவர்களாகும்.

அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட எத்தனையோ விடயங்கள் இந்த நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பயனளிப்பவையாக இருந்த போதிலும், நாடாளுமன்றப் பெரும்பான்மை அவருக்கு இன்னமும் அறுதிப் பெரும்பான்மையாகவும், முழு விசுவாசமாகவும் இல்லாமையால் அவரது பல யோசனைகள் இன்னமும் சட்டங்களாக்கப்பட்டு நடைமுறைக்கு வராமலிருப்பதை நாமறிவோம்.

இந்நிலையில் தனது பதவிப் பிரமாணம் தொடக்கம், ஜனாதிபதி அலுவலக நிர்வாகம், வெளிநாட்டுப் பயணங்கள் வரை மிகவும் எளிமையாகவும், ஆடம்பரமின்றியும் அவர் முன்னெடுத்து வந்துள்ள நடைமுறைகள் இந்த நாட்டில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் மனங்களை வெகுவாக ஈர்த்திருப்பதை எவராலும் மறுக்க முடியாது.
இவ்வாறானதொரு நிலையில் அவரது பிரதான 100 நாள் செயற்பாட்டு எல்லைக் காலத்திற்குள், தமிழ் சிங்களப் புதுவருடம் பிறக்கின்ற இந்நன்னாளில் திடீரென சுகவீனமுற்று வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியானது எமது சங்க அங்கத்தவர்களின் மனதை வெகுவாகச் சோர்வடையச் செய்துள்ளது.

எல்லோருக்கும் பொதுவான ஏக இறைவன் அவருக்கு பூரண சரீர சுகத்தையும், புதிய தெம்பையும் மிக விரைவாக அளித்து மீண்டும் எமது நாட்டின் நிர்வாக சேவையில் புது வேகத்துடன் செயற்படுவதற்கு அருள்பாலிக்க வேண்டுமென இன்றைய நன்னாளில் நாம் பிரார்த்திக்கின்றோம்.

புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் வீ. பத்மசிறி
(தலைவர்) (பொதுச் செயலாளர்)

Published by

Leave a comment