19 ஏழு உப பிரிவுகளுக்கு சர்வஜன வாக்கெடுப்பு

court[1]கொழும்பு: 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் அரசியலமைப்பிற்குட்பட்டது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதில் உள்ள இரு சரத்துக்களிலுள்ள 7 உப பிரிவுகளை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற வியாக் கியானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அமைச்சரவையின் தலைவராக பிரதமரை நியமிப்பது, அமைச்சர்களினதும் அமைச்சுக்களினதும் எண்ணிக்கை மற்றும் அவற்றின் விடயதானம் மற்றும் பணிகளைத் தீர்மானித்தல், பாராளுமன்ற உறுப்பினர்களில் இருந்து அமைச்சரவையின் உறுப்பினர்களாக இல்லாதவர்களை அமைச்சராக நியமிக்கலாம், உட்பட 7 உப பிரிவுகள் இதில் அடங்கும். 7 உப பிரிவுகளும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் கூடியது. இதன் போது உச்ச நீதிமன்ற வியாக்கியானம் குறித்து அறிவித்த சபாநாயகர் மேலும் கூறியதாவது, 19ஆவது திருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. 19ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பின் 81 (1) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுடன் இணங்குகின்றன. அரசியலமைப்பின் 82 (5) ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள விசேட பெரும்பான்மை வாக்குகளால் (2/3) நிறைவேற்றப்பட வேண்டும்.

11 ஆவது சரத்தின் 42 (3), 43 (1), 43 (3), 44 (2), 44 (3) மற்றும் 44 (5) ஆகிய உப பிரிவுகள் மற்றும் 26 ஆவது சரத்தின் 104 ஆ (5) (இ) உப பிரிவும் அரசியலமைப்பின் 83 ஆவது உறுப்புரையின் பிரகாரம் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் அங்கீகாரத்தை பெற வேண்டியுள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்றார்.

Published by

Leave a comment