கிராமத்துக்குஒருமில்லியன்

2015-04-06 10.53.07– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

கொழும்பு: வீடமைப்பு சமுர்த்தி அமைச்சினூடாக கிராமத்துக்கு ஒரு மில்லியன் என்கின்ற நிகழ்ச்சித்திட்டம் தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் இலங்கையில் இருக்கின்ற 14009 கிராம சேவையாளர் பிரிவுகள் நன்மையடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரச நிதியிலிருந்து கிராமத்துக்கு ஒரு மில்லியன் ரூபாய் வழங்கப்படுகின்ற அதேவேளை மக்களின் பங்களிப்பாக ஆகக்குறைந்தது இரண்டு இலட்சம் ரூபாய் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்திட்டமானது மூன்று முக்கிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது.

முதலாவதாக, கருத்திட்டங்கள் மக்கள் பங்களிப்புடன் தயாரிக்கப்படவேண்டும், குறித்த கிராம சேவையாளர் பிரிவில் இருக்கின்ற கிராம உத்தியோகத்தர், கிராம சங்க பிரதிநிதிகள், பிரதேச தொண்டு நிறுவன பிரதிநிதிகள், புத்திஜீவிகள், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் ஆகியோரின் பங்கு பற்றுதலோடு கருத்திட்டங்களானது தீர்மானிக்கப்பட வேண்டும். மக்கள் பங்குபற்றுதல் இல்லாத திட்டங்கள் எதுவும் நடைமுறைப்படுத்த முடியாதவைகளாகும். எனவே திட்டங்களைத் தீர்மானிப்பதில் மக்கள் பங்களிப்புக்கள் முக்கியமானவையாகும்.

இரண்டாவதாக, ஒதுகீட்டு நிதியில் திட்டம் முழுமையடைதல் வேண்டும், ஒதுக்கப்படுகின்ற நிதியில் ஆகக் குறைந்தது ஒரு நிகழ்ச்சித் திட்டமும் ஆகக்கூடியது இரண்டு நிகழ்ச்சித் திட்டங்கள் மாத்திரமே நிறைவேற்ற முடியுமானதாகும். எனவே, தரப்படுகின்ற நிதியில் குறித்த கருத்திட்டம் முழுமையடைய வேண்டும் என்பது ஒரு முக்கியமான விதியாக இருக்கின்றது.

மூன்றாவதாக அமைக்கப்படும் கருத்திட்டம் தொடர்ந்தும் பராமரிக்கப்படுவதற்கு ஏற்றவகையில் அரச நிறுவனம் ஒன்றோடு தொடர்புபடுத்தப்படவேண்டும். உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் (வீதி, மின்சாரம் விநியோகம், நீர் விநியோகம்), விவசாய வசதிகளை மேம்படுத்துதல், சமூக நலன் சார்ந்த செயற்திட்டங்களை மேம்படுத்துதல், கைத்தொழில், சந்தை வாய்ப்பு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு வடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்தல், சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்தல் போன்ற துறைகளுக்கு மேற்படி நிதியிலிருந்து பயன்படுத்த முடியும். ஒவ்வொரு நிகழ்ச்சித் திட்டமும் ஏதேனும் ஒரு அரச நிறுவனத்தின் ஊடாக எதிர்காலத்தில் பராமரிக்கப்பட வேண்டும்.

மேற்படி மக்கள் பங்களிப்பு, முழுமையான கருத்திட்டம், எதிர்கால பராமரிப்பு போன்ற முக்கிய விடயங்கள் இவ்விடத்தில் கவனத்திற்கொள்ளப்பட வேண்டியவைகளாகும். மேற்படி கருத்திட்டங்கள் தொடர்பான விபரங்களை கிராம சேவையாளர்களிடம் அல்லது பிரதேச செயலாளர்களிடம் அல்லது மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும்.

மேற்படிக் கருத்திட்டம் தொடர்பில் மன்னார் மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வொன்றில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் அவர்கள் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.

“இலங்கை அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பில் இத்தகைய ஒரு திறந்த மீளாய்வு நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்தமைக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தேஷப்பிரிய அவர்களுக்கு நான் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கின்றேன், அதேபோன்று கிராமத்துக்கு 1மில்லியன் என்கின்ற வேலைத்திட்டம் தொடர்பில் எமக்குத் தெளிவுகளை வழங்கிய சமுர்த்தி அமைச்சின் பணிப்பாளர் ஜனாப் வஹாப்தீன் அவர்களுக்கும் எங்களுடைய நன்றிகள் உரித்தாகட்டும், இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் மேற்படி கருத்திட்டமானது மக்களின் பங்களிப்போடும், மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்போடும் அரசாங்க அதிகாரிகளின் பங்களிப்போடும் இடம்பெறவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் மன்னார் மாவட்டத்தில் அத்தகைய பங்களிப்புகள் எந்தளவிற்குப் பெறப்பட்டிருந்தன என்றகேள்வி இப்போது இங்கே முன்வைக்கப்பட்ட கருத்திட்டங்களை முழுமையாக செவியுற்றபின்னர் எனக்குள் எழுந்திருக்கின்றது, பிரதேச செயலாளர்கள் மிகுந்த அர்ப்பணிப்போடு இக்கருத்திட்டங்களைத் தயாரித்திருக்கின்றீர்கள், ஆனால் அதனுடைய விளைதிறன் சீராக இருக்கவேண்டுமாக இருப்பின் மக்கள் பங்குபற்றுதல் என்ற விடயம் முழுமையாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ளபடுதல் வேண்டும்.

நாம் சற்று எமது ஈகோக்களை கழற்றிவைத்துவிட்டு சிந்திப்போம், மன்னார் மாவட்டத்தின் பிந்தங்கிய நிலையினை நாம் நன்கு அறிவோம், நான் மன்னாரைச் சேர்ந்தவன் அல்ல ஆனாலும் என்னால் இந்த மக்களின் நிலையினை நன்கு உணர்ந்துகொள்ள முடியுமாக இருக்கின்றது, இப்போது நாட்டிலே ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது, நல்லாட்சி ஏற்பட்டிருக்கின்றது, முன்னர் ஒருவிதமான ஆட்சிமுறைமை இருந்தது, ஆனால் இப்போது அத்தகைய இறுக்கமான நிலை இல்லை, நாம் எல்லோரும் இணைந்து செயலாற்றுகின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது, இதனை நாம் சரியாகப் பயன்படுத்தவேண்டும், அரச நிதியில் இருந்தும் மக்களின் பங்களிப்பில் இருந்தும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக்கு 19கோடியே 19இலட்சத்து 47500 ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது, இது சிறிய பணம் அல்ல, ஒரு கனிசமான உதவித்தொகையாகும், இதனை நாம் அமுல்படுத்துகின்றபோது மன்னார் மக்களின் வாழ்க்கைத்தரத்தில் ஒரு சிறிய மாற்றத்தையேனும் நாம் காணவேண்டும், இல்லாவிட்டால் இத்தகைய பாரிய நிதியை செலவு செய்வதில் எவ்வித அர்த்தமும் இல்லாமல் போய்விடும்,

இங்கே முன்வைக்கப்பட்ட கருத்திட்டங்களில் எனது கவனத்தை ஈர்த்த ஒரு விடயம் இருக்கின்றது அன்னளவாக 1 மில்லியன் செலவில் நிர்மானிக்கத்தக்க 49 பொதுநோக்கு மண்டபங்கள் என்ற திட்டம் எனது கவனத்தை ஈர்த்திருக்கின்றது, பொது நோக்கு மண்டபங்களின் தேவை இருக்ககின்றது, ஆனால் அதுதான் முதன்மையான தேவையல்ல, பொதுநோக்கு மண்டபத்தைக் கட்டிவிட்டால் மக்களின் அன்றாட வாழ்வு முன்னேற்றம் காணாது, மாறாக ஒரு கன்டறக் கம்பனி எல்லா பொது நோக்கு மண்டபங்களையும் கட்டிமுடித்தால் அவர்களுக்கு அது வருவாய்தருவதாக அமையலாம் ஆனால் அது மக்களுக்கு எந்தளவுக்குத் தேவையானது என்பது தெரியவில்லை

மன்னார் மாவட்ட மக்களுக்கு உள்ளூர் வீதிகளை அபிவிருத்தி செய்யவேண்டிய தேவைகள் இருக்கின்றன, மின்சார வசதிகள் செய்யப்படவேண்டும், நீர்விநியோகம் அதிகூடிய தேவையாக இருக்கின்றது, விவசாய ஊக்குவிப்புகள், மீன்பிடி ஊக்குவிப்புகள், நன்னீர் மீன்பிடி ஊக்குவிப்புகள் தேவையாக இருக்கின்றன, கல்வி, பாலர் கல்வி விடயங்கள் தேவையுடையதாக இருக்கின்றன, இவற்றிலும் நாம் கவனம் செலுத்தவேண்டும்.

எனவே இங்கே மக்கள் பங்குபற்றுதல்கள் குறைவாக இருப்பதாகவே நான் உணர்கின்றேன், அரசாங்க அதிபரிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் மேலும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து மக்களின் பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்ய ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன், எனக் குறிப்பிட்டார்

இதற்கு பதிலளித்த மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் ஒருவாரகால அவகாசம் எடுத்து மக்களின் பங்களிப்புகளையும், உள்ளீர்ப்பு செய்யுமாறு மன்னார் மாவட்டத்தின் பிரதேச செயலாளர்களைக் கேட்டுக்கொண்டார்.”

Published by

Leave a comment