கொழும்பு: கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களுக்கும் மீள்குடியேற்றம், புனர்நிர்மானம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கொள்ளுப்பிட்டியிலுள்ள அமைச்சுக் காரியாலத்தில் இடம்பெற்றதாக அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் குறிப்பிடுகையில்,
இதுவரை காலமும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிவந்த கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள் தற்போது புதிய அமைச்சரவையின் விசேட தீர்மானத்தின் அமைவாக மீள்குடியேற்றம், புனர்நிர்மானம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திருமதி ரஞ்ஜினி நடராஜபிள்ளை ‘தி கலோ ரஸ்ட்’ தலைவர் டமியன் ஒப்ரின் மற்றும் பிரிகேடியர் ஆனந்த சந்திரசிறி ஆகியோருக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. கண்ணிவெடி அகற்றும் நிகழ்ச்சித்திட்டத்திற்குப் பொறுப்பாக அமைச்சின் மேலதிகச் செயலாளர் எம்.எம். நயீமுதின் நியமிக்கப்பட்டுள்ளார்.
விடுவிக்கப்பட்ட காணிகளிலுள்ள கண்ணிவெடிகளை மிகவும் துரிதகதியில் அகற்றி மக்களை விரைந்து குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடம் அமைச்சின் செயலாளர் இதன்போது கேட்டுக்கொண்டார். அத்துடன் இதற்கென நிதி வழங்குகின்ற நிறுவனங்களிடம் மிக விரைவில் பேச்சு வார்த்தை நடாத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏ.எல்.எம். தாஹிர்
ஊடகப் பிரிவு,
மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு
Published by

Leave a comment