காத்தான்குடி: நாகூர் ஈ.எம். ஹனிபா என்றழைக்கப்பட்ட இஸ்மாயீல் முகம்மது ஹனீபா நேற்று காலமானார். ‘இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’. 1960 களில் இருந்து தென் இந்தியாவில் புகழ்பெற்றிருந்த போதிலும், இலங்கையில் ஈ.எம். ஹனீபா 1970களின் பிற்பாடு புகழ்பெற்றிருந்தார்.
கம்பீரமான குரலில் அமர்ந்து கச்சேரிகள் போன்று இஸ்லாமிய கீதங்களை தான் பாடி, இசையமைத்து உலகில் வாழும், இஸ்லாமியர்கள் மாத்திரமன்றி, தமிழ் பேசும் அத்தனை இதயங்களிலும் ஹனீபாவின் குரல் நிலைத்திருக்கின்றது.
1970களின் பிற்பாடுகளில் ஒலி நாடா இலங்கைக்கு அறிமுகமாகின்றது. அதன் பின்னரே நாகூர் ஈ.எம். ஹனீபாவின் இஸ்லாமிய பாடல்கள் இலங்கையின் மூலை முடுக்கெங்கிலும் ஒலிக்க ஆரம்பித்தன.
அன்றிலிருந்து இலங்கை முஸ்லிம் சேவை வானொலி நிகழ்ச்சிகளிலும் இன்றும் அவரது பாடல்கள் அவ்வப்போது ஒலித்து வருகின்றன.
1970-மற்றும் 1980 ஆரம்பக் காலங்களில் திருமணங்கள், கத்னா வைபவங்கள், மார்க்க நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் போன்ற நிகழ்வுகளுக்கு, கட்டடங்களின் கூரைகளிலும், நெடு மரங்களிலும், மின் கம்பங்கபளிலும் கட்டப்பட்டிருக்கும் அப்போது அழைக்கப்பட்ட ‘குழல்’ ஒலிபெருக்கிகளில் ஓங்கி ஒலிக்கும் நாகூர் ஈ.எம் ஹனீபாவின் பாடல்களுக்கு செவி சாய்க்காதவர்கள் எவரும் இருந்திருக்கமாட்டார்கள் என்றே கூறலாம்.
இதே போல் அன்றைய அறிவிப்புச் செய்யும் மாட்டுவண்டி, மோட்டார் வண்டிகளிலும் (குழல் கார்) கட்டப்பட்டிருக்கும் ஒலிவாங்கிகளில் நாகூர் ஹனீபாவின் பாடல்கள் இன்றியமையாதவை.
இஸ்லாமிய கீதங்கள் மாத்திரமன்றி ஒரு சில சினிமாப்படங்களுக்கும் ஹனீபா பாட்டுக்களை பாடியிருந்தார். இந்தவகையில், குலபகாவளி (1955), பாவமன்னிப்பு (1965) மற்றும் 1992 இல் வெளிவந்த செம்பருத்தி திரைப்படத்திலும் பாடி இருந்தார்.
ஹனீபாவின் இசைப் புகழையறிந்த அப்போதைய தமிழ்நாட்டு தலைவர்களான பெரியார், மு. கருணாநிதி, சி.என். அண்ணாதுரை உட்பட பலர், நாகூர் ஹனீபாவை அரசியலுக்குள் நுழைக்க அதிகப் பிரயத்தனம் எடுத்திருந்த போதும், ஹனீபா, அரசியலில் கால்பதிக்க விரும்பவில்லை.
1990 களின் ஆரம்பத்தில் இலங்கையில் சில பாகங்களில் நாகூர் ஈ.எம்.ஹனீபாவின் பாடல் கச்சேரிகள் அப்போது இடம்பெற்றிருந்தன.
நாகூர் ஈ.எம்.ஹனீபா காலமாகும் போது அவருக்கு வயது 96. கடந்த சில மாதங்களாக மரணத்தை எதிர்நோக்கி இருந்த ஹனீபா இன்று எம்மைவிட்டு மறைந்துவிட்டார்.
அவர் மறைந்த போதிலும், அவரது பாடல்கள் இன்னும் பல இதயங்களைத் தொட்டுச் செல்கின்றன.
நாகூர் ஈ.எம் ஹனீபா ஓர் மார்க்க அறிஞர் அல்ல. எதுவெல்லாம் இஸ்லாமிய வலாறுகள் என்று அன்றைய மக்கள் தெரிந்திருந்தார்களோ, அதன் வடிவத்திலேயே அன்னாரது பாடல்களும் அமைந்திருந்தன.
எனினும் குறிப்பாக 2000ஆம் ஆண்டின் பின்னர் உலகில் ஏற்பட்ட கணனி வளர்ச்சியின் பின்னரே ஷஹீஹான ஹதீஸ், பிழையான ஹதீஸ் என்றும், நாங்கள் இதுவரை மிம்பர்களில் கேட்டுவந்த எத்தனையோ இஸ்லாமிய வரலாறுகள் என்று கூறப்பட்ட நிகழ்வுகள் பொய்யானவை எனவும் இக்காலத்தில் நாங்கள் அறிந்துகொள்ள முடிகிறது.
எனினும், அறியாமையால் அன்று அவர் பாடிய அந்த ஒலிவடிவங்களை, ஒலிப்திவுகளை இனிமேல் அகற்ற முடியாது. எனினும், தனது தவறுக்கு அவர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரியிருப்பார் என்ற நம்பிக்கையில் நாம் இருக்கின்றோம்.
எனினும், நாகூர் ஈ.எம். ஹனீபாவை ‘நவீன உலமாக்கள்’ சிலர், ‘காபிர்’ என அழைத்து வந்தனர்.
எம்மமைப் பொருத்தமட்டில் ஓர் முஸ்லிமை காபிர் எனக்கூறுவதற்கு எவருக்கும் அருகதை கிடையாது. உள்ளங்களை அறிந்தவன் அல்லாஹ் மாத்திரமே. அவன் பக்கமே நாம் அனைவரும் திரும்பவேண்டும்.
எல்லாம் வல்ல இரக்கமுள்ள அல்லாஹ், அன்னாரது பாவங்களை மன்னித்து சுவனத்தை அருள்பாளிப்பானாக!
Published by




Leave a comment