கொழும்பு: சுனாமியின் பின்னர் வடக்கில் வீடுகளை அமைப்பதற்காக கடந்த அரசாங்க காலத்தில் 2006 இல் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமொன்றின் மூலம் ஒரு வீட்டையேனும் கட்டாது 1740 இலட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவமொன்று தொடர்பில் மூன்று பேரை பொலீஸ் விசேட விசாரணைக் குழு கைது செய்துள்ளதோடு அதனோடு சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மக்கள் பிரதிநிதியொருவரையும் கைது செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொலீஸ் விசேட விசாரணைக் குழுவின் பணிப்பாளர் பொலீஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
இக் குழு இரண்டு மாதங்களுக்கு முன்னர் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைவாக வீடுகளை அமைப்பதற்கு பொறுப்பேற்றுக்கொண்ட நிறுவனங்களில் தெஹிவளை, கொழும்பு மற்றும் வவுனியா முகவரிகள், தொலைபேசி இலக்கங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியன போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது.
வீடமைப்பிற்காக வழங்கப்பட்ட காசோலை ஆடை உற்பத்தி நிறுவனமொன்றின் முகவரிக்கு சென்றுள்ளமை தெரியவருவதாக பொலீஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட இரு சகோதரர்களும் பெண்ணொருவரும் இன்று (7) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
குறித்த மக்கள் பிரதிநிதியின் தலைமையிலான நிறுவனத்திற்கு திறைசேரியிலிருந்து 65 கோடி ரூபாயளவான தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது தொடர்பிலும் ஆராயப்படும் என விசாரணைக் குழு தெரிவித்துள்ளது
Published by

Leave a comment