மண்முனைப்பற்று பிரதேசத்தில் முஸ்லிம்களுடைய பூர்வீக காணிகளின் நிலை…?

shiblyஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் / ஏ.எல்.டீன் பைரூஸ்

மண்முனை: அண்மைக்காலமாக மண்முனைப்பற்று பிரதேசத்தில் முஸ்லிம்களுடைய பூர்வீக காணிகளென்பது எடுப்பார் கைப்பிள்ளை போன்று  கையாளப்படுவதை எங்களால் அவதானிக்க முடிகின்றது.

மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட   சிகரம் பிரதேசத்தில் அமைந்துள்ள நூறு ஆண்டுகளுக்கு மேலான முஸ்லிம்களுக்கு சொந்தமான பூர்வீக காணியில் உரிமையாளர்கள் தங்களது வீடுகளை அமைப்பதற்கு முயலுகின்ற போது ஆரம்பத்திலேயே எந்த அடிப்படையும் இல்லாமல்  இதனை அரச காணியென்று வாதிட்டனர். இதன் பின்னர் அக்காணியானது தனியார்

காணியென உறுதிப்படுத்தப்பட்டு அக் காணியில் கட்டிட நிர்மாணத்திற்குரிய அனுமதிகள் மண்முனைப்பற்று பிரதேச சபை செயலாளரினால் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கட்டிடவேலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இக் கட்டிட வேலைகளை நிறுத்துமாறு கூறி தங்களுடைய பூர்வீக  உலக நாச்சியார் வாழ்ந்த அரண்மனை இருப்பதாக கூறி வேறு ஓர் குறுக்கு வழியில் இதனை முடக்க முயன்றனர். இருந்த போதிலும் இதனை ஆய்வு செய்த தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்களம் குறிப்பிட்ட ஒரு சிறு பகுதியினை அடையாளப்படுத்தி அந்த இடம் தவிர்ந்த மற்றைய இடங்களில் நிர்மாணப் பணிகளை தொடர்வதற்கு அனுமதியளித்தது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சில அரசியல்வாதிகளும், அவர்களுடைய அடிவருடிகளும் தங்களுடைய அற்ப அரசியல் பிழைப்புக்காக இந்து தர்ம போதனைக்கு முரணாக இன்னுமோர் சமூகத்தின் உரிமையை பாதிக்கும் இச் செயலானது ஓர் வெட்கிக்கக்கூடிய விடயமாகும்.

கடந்த 30 வருட காலங்கள் இப்பிரதேசம் முழுக்க முழுக்க தமிழீழ விடுதலைப் புலிகளாலும், வேறு பல தமிழ் ஆயுதக் குழுக்களினாலும் பூரண கட்டுப்பாட்டு காலத்தில் இருந்த காலத்திலும், அதற்கு முன் நூற்றாண்டு காலமாக எழாத இந்த உலக நாச்சியாரின் பிரச்சினை இப்பொழுது எழுகின்றது என்றால் இது எவ்வளவு பெரிய ஏமாற்றுத்தனமும், பொய், கபட நாடகமும் என்பது தெட்டத் தெளிவாக தெரிகின்றது. இது திட்டமிட்டு முஸ்லிம்களுடைய காணிகளை அபகரிக்கின்ற செயலாகும். இது மாத்திரமல்ல அரச காணியொன்று மண்முனையிலுள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளில் அடிப்படை வசதிகளான கிணறுகள் கட்டுவது, மலசல கூடங்கள் கட்டுவது, மின்சார இணைப்பை பெறுவது போன்ற நடவடிக்கைகளுக்கு கூட உரிய அனுமதிகளை மறுப்பதன் மூலம் அம்மக்களை அங்கிருந்து விரட்டுகின்ற நடவடிக்கைகளை அரசியல்வாதிகளும், அவர்களின் எடுபிடிகளும் அரச நிருவாக உத்தியோகஸ்தர்களை வற்புறுத்தி இவ் விடயங்களை முன்னெடுக்கின்றனர்.

ஆயிரக் கணக்கான ஏக்கர்  காணிகள் தரிசு நிலங்கலாகவும், அரச காணிகளாவும் மட்டக்களப்பில் தமிழ் பிரதேச செயலக அதிகாரத்திற்கு உற்பட்டிருக்கின்ற நிலையில் ஒரு சில ஏக்கர்களைக் கூட முஸ்லிம்கள் மண்முனைப்பற்று பிரதேசத்திற்குள் வைத்துக் கொள்ள கூடாது என்ற அளவுக்கு மண்முனைப்பற்று அரச நிருவாக உத்தியோகஸ்தர்களும் செயற்படுகின்றார்கள் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. தற்போது ஆரயம்பதி சந்தையும், அதனருகில் இருக்கின்ற கலாச்சார மண்டபமும் அமைந்திருக்கின்ற காணியானது ஆரம்ப காலத்தில் இந்துக்களின் மயானமாக (சுடுகாடு) இருந்த காணிகளாகும்.

இந்தக் காணி ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி 1934ம் ஆண்டு (31.08.1934) இலங்கை வர்த்தமாணி இலக்கம் 8076ன் பிரகாரம் 05 ஏக்கர் 03 றூட், 20 பேர்ச் பிரகடனப்பட்டிருந்தும் காலோட்டத்தில் அபிவிருத்திக்காக எடுத்துவிட்டு இன்னுமொரு மயாணத்தினை உருவாக்குவதற்காக 5ம் கட்டையில் கோவில்குளம் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட அரச காணியினை தற்பொழுது உயர் தொழிநுட்ப கல்லூரி ஒன்றினை அபிவிருத்தி என்ற பெயரில் அமைத்து அந்த மயான இடத்தினை கோவில்குள மக்களுக்கு  இல்லாமல் ஆக்கிவிட்டு, பாலமுனை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயலுக்குச் சொந்தமான காணியில் கோவில்குள மக்களுக்குரிய மயாண இடமொன்றை அமைப்பதற்கு இடந்தர வேண்டும் என்று மயானத்தினை உருவாக்க அத்துமீறி செயல்பட்டார்கள்.

இதனை சுமூகமான முடிவுக்கு கொண்டுவருவதற்காக பாலமுனை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயலுடைய மிகப் பெரிய விட்டுக்கொடுப்புடன் பாலமுனை முகைதீன் ஜூம்மா பள்ளிவாயலுக்குச் சொந்தமான காணியிலிருந்து அரைவாசி பகுதியினை இந்து மயாணமாக பிரகடனப்படுத்தினார்கள். அதனை தொடர்ந்து தற்பொழுது அக்காணியானது இந்து மயாணம் என்னும் பெயரில் இருந்து மாற்றம் பெற்று இன்று விளையாட்டு மைதானமாக உபயோகிக்கப்படுகின்றது. இது மாத்திரமல்ல 1985ம் ஆண்டு காலப்பகுதிகளில் உண்ணிச்சை, உறுகாமம், பாவற்கொடிச்சேனை, இருநூறுவில் போன்ற பகுதிகளில் இருந்து முஸ்லிம் மக்கள் விரட்டியடிக்கப்பட்டபோது அவர்களை தற்காலிகமாக குடியமர்த்துவதற்கு வழங்கப்பட்ட காணியில் அமைக்கப்பட்டிருந்த குடிசைகளை தீக்கரையாக்கி அங்கிருந்த அகதி மக்களை துரத்தியடித்துவிட்டு முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை மயாணமாக மாற்றினார்கள், அதுவும் இப்பொழுது விளையாட்டு மைதானமாக மாற்றப்பட்டுள்ளது.

ஆரயம்பதி மக்களுக்கு மயாணம் (சுடுகாடு) இல்லையென்று புதிதாக கர்பலா கிழக்குப் பகுதியில் முஸ்லிம் மக்களின் பூர்வீகமான காணிகளில் அக்கிரமமாக அத்துமீறி பிரவேசித்தனார். அந்த காலப்பகுதியில் தமிழ் ஆயுதக்குழுக்களின் தலைவர்களில் ஒருவரான சாந்தன் என்பவரின் தலைமையில் அக்கிரமமாக அத்துமீறி முஸ்லிம்களுடைய காணிகளில் சவங்கள் புதைக்கப்பட்டு ஆகிரமிப்பு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து எழுந்த பிரச்சினைகளில் இம் மயாணமும், மயாணத்தினை சூழவுள்ள காணியும் தனியார் காணியென்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் அறிக்கை சமர்ப்பித்தனர். இதற்கு பிறகும் கூட முஸ்லிம்களுடைய காணியை எல்லையிடும் போது ஏற்பட்ட பாரிய சிக்கல்கள் ஓரளவு கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இது இவ்வாறு இருக்கத்தக்க கோவில்குள மக்களுக்கு மீண்டும் ஒரு இந்து மயாணத்தினை உருவாக்க காத்தான்குடி ஜாமியுழ்-ழாபிரீன் ஜூம்மா பள்ளிவாயலுக்கு சொந்தமான பாலமுனையில் இருக்கும் காணியில் அக்கிரமமாக அத்துமீறி சவம் ஒன்றை புதைப்பதற்கு முற்பட்டபோது தடுத்து நிறுத்தப்பட்டது.

இதில் ஏற்பட்ட முறுகளின் பின்னர் இது தொடர்பாக மட்டக்களப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட போது அக் காணியானது காத்தான்குடி ஜாமியுழ்-ழாபிரீன் ஜூம்மா பள்ளிவாயலுக்கு சொந்தமானது என மட்டக்களப்பு நீதிமன்றம் தீர்பபளித்தது. ஆயினும் அக் காணியில் ஒரு பகுதியினை இந்து மயாணமாக பிரகடணப்படுத்துவதற்கு மண்முனைப்பற்று பிரதேச செயலாளரின் வேண்டுகோளிற்கு இணங்க சட்ட விரோதமாக நிள அளவை செய்யப்பட்டு வரைபும் வரையப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது கிட்டத்தட்ட 30 வீதமான முஸ்லிம் மக்கள் வாழுகின்ற மண்முனைப்பற்று பிரதேசத்திலிருந்து முஸ்லிம் மக்களை துரத்தியடிக்கின்ற ஒரு செயல் மிக கட்சிதமாக திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது.

மண்முனை பாலத்திற்கு அருகாமையில் உள்ள காணி, அதனருகில் உள்ள சிறிய சந்தைக் கட்டிடம் அமைந்துள்ள காணி என்பன மண்முனைப் பரிசாரியார் என்பவரின் மருமகனான ஆதம்பாவா என்பவரால் மண்முனைப்பற்று பிரதேச சபைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டதாகும். இது இவ்வாறு இருக்க அவர்களின் வழித்தோன்றலில் வந்தவர்கள், அவர்களது பூர்வீக காணிகளை பராமரிக்க முன் வந்த போது அவைகளை அரச காணியென்று கூறி தடை விதிப்பது முஸ்லிம் மக்கள் மீதான உச்சக்கட்ட  அடாவடித்தனத்தினை காட்டுகின்றது.

பொதுவாகவே மண்முனைப்பற்று பிரதேச மக்கள் என்பது எல்லா வகையிலும் அடக்கியொடுக்கப்படுகின்ற ஒரு நிலமைக்கு உள்வாங்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். இது போன்று காத்தான்குடியினுடைய எல்லைகள் சம்பந்தமான பிரச்சினைகள் வரும் போதெல்லாம் மிக தெட்டத் தெளிவாக வர்த்தமாணியில் வரையறுக்கப்பட்டிருக்கின்ற எல்லைகளை பிழை என்று  ஒரு முட்டாள்தனமான வாதத்தினை முன்வைத்து அதனையும் கூட தற்பொழுது மாற்றப் பாக்கின்றார்கள்.

ஆனால் 1987ம், 1988ம் ஆண்டு காலப் பகுதிகளில் வெளியிடப்பட்ட முதல் வர்த்தமாணி தொட்டு இன்று வரையுள்ள வர்த்தமாணியில் ஒரு புள்ளி கூட மாற்றப்படாமல் தெளிவாக எல்லைகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றது. இதனை தமிழ் அரசியல்வாதிகளும் பொறுப்பு மிக்க அதிகாரிகளும் உண்மைக்குப் புறம்பாக செயற்படுவதென்பது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே தொடர்ச்சியாக அந்த பிரச்சினைகளை இழுத்தடித்து கொண்டு செல்லாமல் மிக விரைவாக இதற்கான ஓர் தீர்வினை பெற வேண்டிய கட்டாயக் கடமை இப்பொழுது ஏற்பட்டுள்ளது  என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் தெரிவித்தார்கள்.

Published by

Leave a comment