கொழும்பு: இலங்கையின் புகழ்பெற்ற ஒலி/ஒளிபரப் பாளரும் நடிகையுமான கமலினி செல்வராஜன் நேற்று கொழும்பில் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 62. கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த கமலினி செல்வராஜன் நேற்றுக் காலை காலமானார். இவரது பூதவுடல் கொழும்பு பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை பொது மக்கள் தமது இறுதி அஞ்சலியைச் செலுத்த முடியும்.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இறுதிக் கிரியைகள் இடம்பெறுவதுடன் அதனைத் தொடர்ந்து அன்னாரின் பூதவுடல் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கமலினி செல்வராஜன்
இலக்கியவாதியும் எழுத்தாளரும் வயலின் கலைஞருமான தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை, கலைஞர் தனபாக்கியம் தம்பதியினரின் மூத்த புதல்வியே கமலினியாவார். தமிழ் நாடகம் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ள கமலினி இலங்கையில் தயாரிக்கப்பட்ட ‘கோமாளிகள்’ திரைப்படத்தில் தன் கணவர் ‘வரகவி’ சில்லையூர் செல்வராசனுடன் இணைந்து கதாநாயகியாக நடித்தவர்.
அதனையடுத்து ‘ஆதர கத்தாவ’ என்ற சிங்கள திரைப்படத்திலும் நடித்து புகழ்பெற்றவர். சில்லையூர் செல்வராசன் இலங்கையின் புகழ்பெற்ற கவிஞரும் கலைஞருமாவார். முப்பது வருடங்கள் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகக் கடமையாற்றிய கமலினி செல்வராஜன், சிறந்த வானொலி, தொலைக்காட்சி ஒலி – ஒளிபரப்பாளராவார்.
Leave a comment