மட்டக்களப்பு: கிழக்கு ஊடக சங்கத்தின் பிரதான நிர்வாகிகளுக்கும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ். எம். சார்ள்ஸ் அம்மையாருக்கும் இடையிலான அறிமுகச் சந்திப்பொன்று அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
சங்கம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மரியாதையின் நிமித்தம் இடம்பெற்ற இந்த அறிமுகச் சந்திப்பின்போது, சங்கத்தின் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், செயலாளர் வீ. பத்மஸ்ரீ, உப செயலாளர் திருமதி. காமிலா பேகம், பொருளாளர் எஸ். சச்சுதானந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செயலாளர் பத்மஸ்ரீ, இச்சந்திப்புக்காக பிரத்தியேக நேரம் தந்தமைக்காக நன்றி தெரிவித்துக்கொண்டு, சந்திப்பின் நோக்கம் குறித்து விவரித்தார்.
‘எமது கிழக்கு ஊடக சங்கம் சில மாதங்களுக்கு முன்னர்தான் ஆரம்பிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பல ஊடக சங்கங்கள் ஏற்கனவே அமைந்திருக்கின்றன. அவை இனம், மதம், பிரதேசம் என்ற எல்லைகளை வகுத்துக்கொண்டு ஊடகம் சார்ந்தோரை வரையறைப்படுத்திய நிலையில் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. நாம் அந்த வரையறைகளை விலக்கி, இம்மாவட்டத்திலுள்ள அனைத்துத்துறைகளிலும் ஈடுபாடுகாட்டி வருகின்ற ஊடகர்களை இன, மத, பிரதேச வேறுபாடுகளின்றி ஒன்றிணைத்துச் செயற்படுவதற்குத் தீர்மானித்தே இந்தச் சங்கத்தை உருவாக்கியுள்ளோம்.’
‘எமது சங்கத்திற்கென ஒரு யாப்பை உருவாக்கி அதனடிப்படையில் செயற்படுவதற்குத் திடசங்கற்பம் கொண்டுள்ளதுடன் அச்சுப்பத்திரிகைகள், இணையதளங்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள் போன்ற பிரதான ஊடகங்களுடன் மாத்திரம் ஊடகத்துறை சார்ந்தோரை மட்டுப்படுத்தாது, இவ்வாறான ஊடகங்களில் பங்கேற்காமல் இருந்துவருகின்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள், பாடகர்கள், நடிகர்கள், கலைஞர்கள் போன்றோரையும் உள்வாங்கி ஊடகத்துறை சார்ந்த எல்லையை விஸ்தரித்துச் செயற்படுவதற்கும் திட்டமிட்டுள்ளோம்.’
‘முதன்முதலாக இந்த மாவட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான தங்களைச் சந்திக்கும் நாம், எமது சங்கத்தின் எதிர்காலச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஆரோக்கியமான தங்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் இச்சந்திப்பை பயன்டுத்த விரும்புகின்றோம்’ எனக்கூறி யாப்பின் பிரதியொன்றையும் அரசாங்க அதிபரிடம் கையளித்தார்.
அதனைப் பெற்றுக்கொண்டு கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர் கூறியதாவது,
‘ஊடகங்களின், ஊடகவியாளர்களின் பணிகள் காத்திரமானவை. ஒரு சமூகத்தினதும், அரசாங்கத்தினதும் இருப்புக்கும், மாற்றங்களுக்கும் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் ஆற்ற வேண்டிய பங்களிப்புக்கள் அதிகமாகும்.’
‘எனினும், நான் அவதானித்த வகையில் பல ஊடகங்களும், ஊடகவிலாளர்களும் அத்தகைய பங்களிப்புக்களையும், அவற்றின் பெறுமதியையும் உணராது வெறுமனே தமது வாழ்வாதாரத்திற்கான ஒரு தொழிலாக மாத்திரமே ஊடகத்துறையைக் கருதித் தொழிற்பட்டு வருவது கவலைக்குரியது. பிற நாடுகளில் ஊடகங்களினாலும், ஊடகவியலாளர்களினாலும் ஏற்படும் மாற்றங்களையும், மக்களுக்குப் பயன்தரும் செயற்பாடுகளையும் நாம் ஒப்பிட்டு நோக்கும்போது, நமது ஊடகவியலாளர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருவது தெளிவாகின்றது.’
‘எமது சமூகத்திலுள்ள ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகளையும், அரசாங்க நிர்வாக அதிகாரிகைளையும் திருப்திப்படுத்தக்கூடிய வகையில்தான் செயற்பட்டு வருகின்றனர். ஒன்றில் அவர்கள் பந்தா நோக்குடன் புகழ்ந்து எழுதுகிறார்கள். அல்லது பழி தீர்க்கும் எண்ணத்துடன் சேறுபூசும் வகையில் விமர்சிக்கிறார்கள். இதனால் நாட்டுக்கோ மக்களுக்கோ எந்தப் பிரயோசனமும் ஏற்படப்போவதில்லை. சமூக மாற்றங்களுக்காக, மனித குலத்தின்அபிவிருத்திக்காக ஊடகத்துறையைப் பயன்படுத்த வேண்டும். சுய இலாபங்களுக்காகவும், தமது காழ்ப்புணர்வுகளை வெளிப்படுத்தும் வடிகாலாகவும் அதனைப் பயன்படுத்தக்கூடாது.’
‘ஊடகவியலாளர்களின் சக்தியை எமது மக்களும், அரச நிர்வாக அதிகாரிகளும் உணர வேண்டுமாயின் ஊடகவியலாளர்கள் ஒரு கட்டமைப்பின்கீழ் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஆனால் இங்கு நிலைமை அவ்வாறில்லை. அவர்கள் கூறுகளாகப் பிரிந்து தனித்தனியாகவும், சிறு குழுக்களாகவுமே செயற்படுகின்றனர். நான் அவதானித்த வகையில் இம்மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளில் திருப்தியடைய முடியவில்லை. கிடைக்கின்ற தகவல்களை செய்திகளாக்கி வெளிப்படுத்தும் ஒப்பனைப்பணியைச் செய்கிறார்களே தவிர, அத்தகவல்களிலுள்ள உண்மையைக் கண்டறியும் புலனாய்வுத் தேடல் முயற்சியில் அவர்கள் ஈடுபடுவதில்லை.
ஒரு நிகழ்வு நடைபெறும்போது பலரும் கைகளில் கமெராக்களுடன் முன்னே வந்து நிற்கிறார்கள். கையில் கமெராவை வைத்திருப்பவர்கள் எல்லாம் ஊடகவியலாளர்களா? அவர்களுக்கென்று ஒரு அடையாளம் இருக்க வேண்டாமா? அவரவர் தேவைக்கேற்ப விரும்பும் கோணங்களில் நின்று படங்களை எடுத்துக் கொள்கிறார்கள். அந்நிகழ்வுக்குச் சமூகமளித்த பல முக்கியமானவர்கள் மேடையில் இருந்தாலும் அதில் கலந்து கொள்ளும் அரசியல்வாதியை முதன்மைப்படுத்தியே ஊடகங்களில் படங்களும், செய்தியும் வெளியிடப்படும். அவருக்கு அருகில் நின்றவரின் கைப்பகுதிகூட படத்தில் காணப்படும். ஆனால் அவரைப்பற்றி, அவர் கூறிய கருத்துக்களைப்பற்றி செய்தியில் எதுவும் இருக்காது. இவ்வாறான பல வெட்டுக்குத்துக்களும், பாரபட்சங்களும் ஊடகவியலாளர்களால் ஊடகங்களில் அரங்கேற்றப்படுவதை நான் அவதானித்திருக்கின்றேன். இதுவெல்லாம் வருந்தத்தக்க விடயமாகும்.’
‘இந்நாட்டில் தமிழ் மக்களின் உணர்வுகளைப் பட்டைதீட்டிக் கூர்மைப்படுத்திய பணியில் ‘தீப்பொறி’ அச்சு ஊடகத்தின் பங்களிப்பு என்றுமே நினைவுகூரத்தக்கது. அடக்குமுறைக்குட்பட்ட தமிழ் மக்கள் முதுகு வளைந்து மண்ணைப் பார்த்து தலை கவிழ நேரிட்ட போதெல்லாம் அப்பத்திரிகை ஆசிரியரின் எழுத்துக்கள் மீண்டும் அவர்களை நெஞ்சுறுதியுடன் தலை நிமிரச் செய்தன. அநியாயம், அக்கிரமம், ஊழல் மோசடிகளையெல்லாம் அவர் எவருக்கும் அஞ்சாமல் எதிர்த்து எழுதினார். அப்படியான போர்க்குணங்கொண்ட ஊடகங்களை இன்று காண்பதற்கில்லை. வாசிப்போரின் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் உன்னத எழுத்துக்களையும் இன்று வாசிக்கக் கிடைப்பதில்லை.’
‘நான் வன்னியில் கடமையாற்றியபோது அம்மாவட்ட ஊடகவியலாளர்கள் ஓரளவு சிறப்பாகவும். நடுநலை பேணியும் செயற்பட்டனர். எந்தவொரு விடயமானாலும் இரு தரப்புக் கருத்துக்களையும் கேட்டறிந்து செயற்படுவார்கள். ஆனால் மட்டக்களப்புக்கு வந்த பின்னர் அவ்வாறான மிகக் குறைந்தபட்ச ஊடக தார்மீகத்தைக் கையாளும் ஊடகவியலாளர்களைக்கூட இதுவரை காண முடியவில்லை.’
‘நான் எந்தவொரு அரசியல்வாதிக்கும் முகஸ்துதி செய்து எனது கடமையைச் செய்யவில்லை. என்றாலும் என்மீது சேறுபூசும் நடவடிக்கைகளை சில ஊடகங்கள் சிலரைத் திருப்திப்படுத்துவதற்காக முன்னெடுத்து வருகின்றன. இது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. நானும் ஒரு பெண். எனக்கும் குடும்பம் என்று ஒன்று இருக்கிறது. முழு மாவட்டத்தினதும் நிர்வாக சேவைக்கு பதிலளிக்கும் பொறுப்பும் எனக்கிருக்கிறது. எனவே தகவலொன்றை அறியும் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் அது குறித்து என்னிடமும் கருத்துக்களைப் பெற்று வெளியிட வேண்டும். மக்களுக்கு எது உண்மையோ அதனைச் சொல்ல வேண்டும்.’
‘இம்மாவட்டத்தின் ஒரு மேலதிகாரி என்ற வகையில் நிர்வாக சேவையை ஒழுங்குபடுத்த முனையும்போது முகங்கொடுக்கும் சவால்களையும், மறைமுகமான தாக்கங்களையும் முழுமையாக வெளிப்படுத்திவிட முடியாது. அவற்றை அனுபவித்தே தீர்க்க வேண்டியுள்ளது. அதன் வலி மிகக்கடுமையானது. குறிப்பாக என்போன்ற பெண்களினால் அவ்வாறான அவதூறுகளைத் தாங்கி இலகுவில் ஜீரணிக்க முடியாது. (தாவணியால் தன் கண்களைத் துடைத்துக் கொள்கின்றார்).’
‘அதனால் எனது பிள்ளைகளுக்கும், படித்து முடித்த பின் அரசாங்க உத்தியோகத்தைப் பெற விரும்ப வேண்டாம் என அவர்களுக்குச் சொல்லியிருக்கின்றேன். ஏனென்றால், அதன் வலி அவ்வளவு கடுமையானது என்பதை விடக் கொடூரமானது என்றே சொல்ல வேண்டும். நான் சுமந்த அத்தகைய வலிகளை எனது பிள்ளைகளும் அனுபவிக்கக்கூடாது.’
‘அரசாங்கம் மக்கள் நலத்திட்டங்களை வகுத்து மில்லியன், பில்லியன் கணக்கில் பணத்தை ஒதுக்குகின்றது. அதனை நாம் செயற்படுத்த முனையும்போது அரசியல்வாதிகள் தொடக்கம் அரச அதிகாரிகள் வரை ஆளாளுக்கு கிராமச் சங்கங்களையும், மாதர் சங்கங்களையும், இளைஞர் கழகங்களையும் டசின் கணக்கில் அமைத்து வைத்துக்கொண்டு பொருத்தமற்றவர்களுக்குப் பங்கீடு செய்யும் நடைமுறையை ஒழிக்க முடியாதிருக்கும்போது எந்தவொரு அரசாங்கத்தாலும், மேலதிகாரிகளாலும் மக்களுக்கான சேவையில், ஒதுக்கீடுகளில் முழுப்பயனையும் வழங்கிட முடியாது.’
‘இவ்வாறான நிலைமைகளுக்கு ஒரு மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் அரசாங்கம் மக்கள் பயன்பாட்டிற்கான துறைகளை தனியார்மயப்படுத்த வேண்டும். சுகாதாரம், கல்வி, போன்ற மக்கள் நலத்துறைகளை தனியார்மயப்படுத்தும்போது ஊழல் மோசடிகள் முற்றாக ஒழிக்கப்படுவதுடன் மக்களுக்கான முழுமையான பயனும் விளையும்.’ இவ்வாறு மனந்திறந்து கருத்துரைத்தார் அரசாங்க அதிபர்.
Published by

Leave a comment