இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவர் ஜயசூரிய இராஜினாமா

jayasuriyaகொழும்பு: இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவர் சனத் ஜயசூரிய தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜயசூரிய தனது பதவி விலகல் கடிதத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் நவீன் திசானாயக்கவிடம் கையளித்துள்ளார்.

தேர்வுக் குழுவில் தனது தவணைக்காலம் முடிந்தது என்பதையே அவர் தனது இராஜினாமாவுக்கு காரணமாக குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து அரசியலுக்கு வந்த ஜயசூரியவின் தேர்வுக் காலத்தில் இலங்கை அணி 2014 இருபது-20 உலகக் கிண்ணம், ஆசிய கிண்ணம் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் வென்றதோடு 2013 ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண தொடரின் அரையிறுதி வரை முன்னேறியது.

எனினும் நடந்து முடிந்த உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணி தோற்ற தென்னா பிரிக்காவுடனான காலிறுதிக்கான அணித் தேர்வு குறித்து ஜயசூரிய மீது விமர்சனங்கள் ஏற்பட்டன.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் இடைக்கால சபை ஒன்று கடந்த வாரம் நியமிக்கப்பட்டு கிரிக்கெட் சபைக்கான புதிய தேர்தலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கிரிக்கெட்டில் ஜயசூரியவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. நியமிக்கப்பட்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் இடைக்கால சபையின் புதிய தலைவரும் பழைய தேர்வுக்குழுவை தொடர்ந்து நீடிக்க திட்டமிடவில்லை. இந்த சூழலிலேயே ஜயசூரிய இராஜினாமா செய்துள்ளார்.

“எனது பதவிக்காலத்தில் இலங்கை இருபது-20 உலக சம்பியன், ஆசிய கிண்ணத்தை வென்றது, நீண்டகாலம் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து தொடரை வென்றது குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இலங்கை கிரிக்கெட்டிற்கு தேவைப்படும் பட்சத்தில் நாட்டுக்காக பணியாற்ற எப்போதும் நான் தயாராகவே இருக்கிறேன்” என்று ஜனசூரிய தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜயசூரியவின் இலங்கை தேர்வுக் குழு தலைமைப் பதவிக் காலம் கடந்த 2013 ஜனவரியில் ஆரம்பமானது. இலங்கை விளையாட்டு அமைப்புகளின் விதிகளுக்கு அமைய ஜயசூரியவின் பதவிக் காலம் கடந்த மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருவதாக இலங்கை கிரிக்கெட்டை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. எனினும் உலகக் கிண்ணம் காரணமாக இலங்கைக் கிரிக்கெட் நிர்வாகக் குழுவுக்கான வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தேர்வுக் குழுவின் பதவிக்காலம் குறித்து தெளிவில்லாமல் உள்ளது. ஆனால் தேர்வுக் குழுவின் பதவிக்காலத்தை தொடர்ந்து நீடிப்பதில்லை என்று இடைக்கால சபையின் தலைவர் சிதத் வெத்தமுனி ஏற்கனவே சூசகமாக தெரிவித்திருந்தார்.

Published by

Leave a comment