மூதூர்: மூதூர் பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் தமிழ் உறுப்பினர்கள் சம்பூர் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள அனல் மின் நிலையத்திற்கு எதிராக தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதில் அதிக ஈடுபாடு செலுத்தி வந்த போதும் முஸ்லிம் உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்காமையினாலேயே இந்த இழுபறி ஏற்பட்டுள்ளது.
சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிராக பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் தமிழ் தரப்பினால் முதலாவதாக பிரேரணையொன்று பெப்ரவரி 26ஆம் திகதியன்று கொண்டு வரப்பட்ட போது அது சபையில் ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் 31ஆம் திகதியன்று இடம்பெற்ற சபை அமர்வின் போது முஸ்லிம் உறுப்பினர் ஒருவரினால் பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டது. இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் அப்பிரேரணை சபையில் விவாதிக்கப்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் ஏக மனதாக அங்கீகரிக்கப்படுவதாக சபையில் அறிவிக்கப்பட்டபோதும் பின்பு முஸ்லிம் தரப்பினால் அது நிகராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை குறித்த பிரேரணை சபையில் நிறைவேற்றப்பட்டதாகவும் சபை அமர்வு முடிந்து தாம் வெளியேறியதன் பின்பு முஸ்லிம் தரப்பினர் சபையில் தொடர்ந்து அமர்ந்திருந்ததாகவும் அதன் பின்பு அங்கு இடம்பெற்றது குறித்து தமக்குத் தெரியாது என்றும் தமிழ் தரப்பினர் தெரிவித்தனர்.
குறித்த பிரேரணையின் பின்னால் ஒரு அரசியல் கட்சி செற்படுவதாகவும் அக்கட்சியே பள்ளிவாசல்கள் தோறும் சென்று மக்களது கையொப்பங்களை சேகரித்து வந்ததாகவும் இப்பிரேரணை நிறைவேற்றப்படுவதன் மூலம் குறித்த அக்கட்சி செல்வாக்குப் பெற்றுவிடும் என்றும் உறுப்பினர் ஒருவர் அடிப்படையற்ற போலியான கருத்துக்ளைத் தெரிவித்து சபையை பிழையாக வழி நடத்தியதாக வேறு சில உறுப்பினர்கள் கூறினர்.
சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிராக முஸ்லிம் தரப்பினால் பிரேரணை கொண்டு வரப்பட்டதிலும் அது அவர்களால் நிராகரிக்கப்பட்டதிலும் திட்டமிட்ட உள்நோக்கம் ஒன்று இருப்பதாகவும் அவ்வுறுப்பினர்கள் மேலும் தெரிவித்தனர்.
சம்பூர் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள அனல் மின் நிலையத்தினால் இப்பிரதேசத்திற்கு ஏற்படப் போகும் அபாயத்தை கவனத்திற்கொண்டு மூதூர் பிரதேச சபையினால் வழங்கப்பட்ட அனுமதியை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு மூதூர் பீஸ் ஹோம் அமைப்பு மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்து வந்தது குறிப்பிடத் தக்கது.
இக்கோரிக்கைக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் இணக்கம் தெரிவித்த போதும் அதனை செயலுருப்படுத்த அவர்கள் தவறிவிட்டதாகவும் கவலை தெரிவிக்கப்படுகிறது.
Published by

Leave a comment