மூதூர்: சம்பூர் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள அனல் மின் நிலையத்திற்கு மூதூர் பிரதேச சபையினால் வழங்கப்பட்ட அனுமதியை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு மூதூர் பீஸ் ஹோம் அமைப்பு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
பீஸ் ஹோம் அமைப்பின் தலைவர் அமீர் எஸ் ஹமீட் கையெழுத்திட்டு, மூதூர் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைத்துள்ள அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சம்பூர் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள அனல் மின் நிலையத்தினால் இப்பிரதேசத்திற்கு ஏற்படப் போகும் அபாயத்தை கவனத்திற்கொண்டு மூதூர் பிரதேச சபையினால் வழங்கப்பட்ட அனுமதியை மீளப் பெற்றுக் கொள்வது சம்பந்தமாக அவசரமாகத் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக்காலம் முடிவுறுத்தப்படவுள்ள இவ்விறுதிக் கட்டத்திலாவது இத்தகைய தீர்மானமொன்றை மேற்கொண்டு அதனை உரிய தரப்பினருக்கு உடனடியாக வழங்குவதன் மூலம் அனல் மின்சார நிலையத்தை நிறுவுவதனால் மூதூர் மக்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்பைத் தடுப்பதற்கு மூதூர் பிரதேச சபையினால் உன்னத பணியை செய்யமுடியும்.
அனல் மின்சார உற்பத்திக்கான இடமொன்றை தெரிவு செய்யும் போது மக்கள் குடியிருப்புக்களிலிருந்து ஒதுக்குப்புறமான பகுதியே தெரிவு செய்யப்படுவது பொதுவாகப் பின்பற்றப்படுகின்ற ஒரு முறையாகும். அதன் நேரடித் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காகவே இம்முறை பின்பற்றப்படுகின்றது. .ஆனால் சம்பூர் அனல் மின்சார நிலையத்தை அமைப்பதற்கான இடஒதுக்கீட்டின் போது இம்முறை பின்பற்றப்படவில்லை.
அனல் மின்சார நிலையத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள பகுதியிலிருந்து சுமார் 500 மீற்றரிலும் குறைந்த தொலைவில் மக்கள் நிரந்தரமாக வாழ்ந்து வருகின்றனர். சுமார் 4.5 கிலோ மீற்றருக்கும் குறைந்த தூரத்திலேயே மூதூர் நகரம் அமைந்துள்ளது. இதனால் இப்பிரதேசத்தில் உள்ள அனைத்து மக்களும் பாதிக்கப்படும் அபாயம் மிக அண்மித்துள்ளது.
நிலக் கரியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் போது அதிலிருந்து வெளிவரும் வாயுக்களும் தூசும் வெப்பமும் சாம்பலும் மற்றும் ஏனைய கழிவுகளும் மனிதர்களில் சுவாச நோய்,இதய நோய், புற்று நோய் உள்ளிட்ட பல நேய்களுக்கும் காரணமாக அமைந்து விடும். அத்தோடு வேளாண்மையிலும் விலங்கு வளர்ப்பிலும் மற்றும் மீன்பிடித் தொழிலிலும் பெரும் பாதிப்பும் ஏற்படும்.
பொதுவாக அனல் மின்சார நிலையத்திலிருந்து 15 கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரம் வரை அதன் நேரடித் தாக்கம் ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இதேநிலையில் மக்களின் வாழிடத்திலிருந்து வெறும் 500 மீற்றரிலும் குறைந்த தொலைவில் அனல் மின்சார நிலையத்தை அமைப்பதானது மக்களுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இலகுவில் புரிந்து கொள்ள முடியும். இந்தவகையில் பார்க்கின்றபோது குறித்த பகுதியானது அனல் மின்சார நிலையம் அமைப்பதற்கு எவ்வகையிலும் பொருத்தமற்றதாகும்.
எனவே, சம்பூர் பகுதியில் அனல் மின்சார நிலையத்தை நிறுவும் திட்டத்திற்கு பிரதேச சபையினால் வழங்கப்பட்ட அனுமதியை மீளப் பெற்றுக் கொள்ளும் வகையில் அவசரமாகத் தீர்மானமொன்றை மேற்கொள்ளுவதற்கு ஆவன செய்யுமாறு தங்களை மூதூர் பிரதேச மக்கள் சார்பில் தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
Published by


Leave a comment