மெல்போர்ன்: மெல்போர்ன் நகரில் நியூசிலாந்தை வீழ்த்தி ஐந்தாவது முறையாக அவுஸ்திரேலியா உலகக் கோப்பையை கைப்பற்றிய நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்ற கிரிக்கெட் திருவிழா முடிவுக்கு வந்தது.போட்டியை இணைந்து நடத்திய இரண்டு நாடுகளும் மோதிய இறுதி ஆட்டத்தில், அவுஸ்திரேலியா நியூசிலாந்தை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, உலகளவில் கிரிக்கெட் விளையாட்டில் தங்களின் ஆளுமையை வெளிப்படுத்தியது.
இதுவரை ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் ஆளுமையைச் செலுத்தி வெற்றி பெற்ற நியூசிலாந்து, இறுதி ஆட்டத்தில் தடுமாறியது. முதலில் ஆடும் அணிக்கு அனுகூலம் எனும் கணிப்பீட்டை மனதில் வைத்து களமிறங்கியது நாணயச் சுண்டில் வென்ற நியூசிலாந்து அணி.
தலைவர் மெக்கல்லம் ஆடிய மூன்றே பந்துகளில் ஓட்டம் எதனையும் எடுக்காமல் வெளியேறினார். ஒரேயொரு ஓட்டம் எடுத்திருந்த நிலையில் முதல் விக்கெட்டை நியூசிலாந்து இழந்தது. அதிலிருந்து மீள்வதற்குள் நட்சத்திர ஆட்டக்காரர் மார்ட்டின் குப்திலும், வில்லியம்ஸனும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப, அணி நிலை குலைந்து போனது.
பின்னர் நடைபெற்ற மீட்பு நடவடிக்கைகள் உரிய பலனை அளிக்கவில்லை. டெய்லரும், எலியட்டும் மீட்பு முயற்சியில் ஈடுபட்டாலும் இழப்பை ஈடுசெய்ய முடியவில்லை. முடிவு 183 ஓட்டங்களுக்கு நியூசிலாந்து ஆல் அவுட் என்றானது.
குறைந்த அளவான ஓட்டங்களே வெற்றி இலக்கு. மற்றும் அரங்கிலிருந்த 90,000 ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றுடன் களமிறங்கியது ஆஸி. அணி.
ஆனால் ஆஸியை ஆட்டிப்பார்க்கும் வகையில், அணி 2 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஆரோன் ஃபிஞ்ச் ஓட்டம் ஏதும் எடுப்பதற்கு முன்னர் அவரை போல்ட் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார். அடுத்து வந்த ஸ்மித்தும், வார்ணரும் பொறுமையாக ஆடி ஓட்டங்களை சேகரித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய அணித் தலைவர் கிளார்க் 74 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
கிளார்க் ஆட்டமிழந்தாலும், அதன் பிறகு ஆஸியின் வெற்றி கிட்டதட்ட உறுதியானதுதான்.
33.1 ஓவர்களில் அவுஸ்திரேலியா வெற்றி பெற, அரங்கில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தொடங்கியது. மெல்போனில் மட்டுமல்லால் அவுஸ்திரேலியா முழுவதும் ஐந்தாவது முறை வெற்றி என்பதை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
40 வருடங்களுக்குப் பின்னர் தனக்குக் கிடைத்திருந்த உலகக் கிண்ணத்தின் மிக அருமையான சந்தர்ப்பத்தை மிகச் சிறந்த அணியாக கருதப்பட்ட நியுசிலாந்து தவறிவிட்டது
Published by



Leave a comment